இலங்கையில் யாழ் முஸ்லிம் தடை, முஸ்லிம்களின் குரல்வளை நெரிக்கப்படுகின்றதா?

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழறிந்த உலகளாவிய முஸ்லிம் இணையப் பயனாளர்கள் மத்தியில் மட்டுமின்றி குறிப்பிட்டளவு தமிழர்கள் மத்தியிலும் கூட யாழ் முஸ்லிம் இணையத்தளம் மிகவுமே பிரயோசமான, அத்தியாவசியமான ஒரு இணையத்தளமாகவும் ,பாரிய அளவில் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான செய்திகள், கருத்துக்களை மிக வேகமாகவும், பரந்த அளவிலும் உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கும் ஒரு ஊடகமாகவும் சிறப்பாக சேவை செய்து வரும் நிலையில், இலங்கையில் யாழ் முஸ்லிம் இணைய ஊடகத்தை தடை செய்த செயலானது, முஸ்லிம்களின் தகவல் அறியும் உரிமைக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட ஒரு கோழைத்தனமான சதியே என்பதில் சற்றும் சந்தேகமில்லை.

முஸ்லிம்களை அறியாமை எனும் இருளில் வைத்து, தமது சதித்திட்டங்களை எதிர்ப்பே இல்லாமல் செயல்படுத்தத் துடிக்கும் சதிகாரர்களுக்கு, யாழ் முஸ்லிம் பெரும் தலையிடி என்பது, யாழ் முஸ்லிம் இக்கட்டான சூழ்நிலைகளில் செய்திகளை தொகுத்து வழங்கிய வேகத்தையும், விவேகத்தையும் பார்த்த பொழுது புரிந்தது.

யாழ் முஸ்லிம் இணையத்தின் மூலம் உருவாகும் விழிப்புணர்வை தொடர விட்டால், முஸ்லிம்கள் மத்தியில் உருவாகும் பல்வேறுபட்ட தரங்களிலான மாற்றத்தின் விளைவாய் பேரினவாதத்தின் கோரப் பற்கள் உடைக்கப்படலாம் என்கின்ற நிலைமையை நன்குணர்ந்தே மேற்படி கோழைத்தனமான செயல் அரங்கேற்றப் பட்டுள்ளது.

யாழ் முஸ்லிம் மீது பிரயோகிக்கப் பட்ட சதிகாரக் கரங்கள், முஸ்லிம்களை விழிப்பூட்டும் ஏனைய இணையத்தளங்களின் மீதும் பிரயோகிக்கப்பட போதுமான சாத்தியங்கள் உள்ளன.

இது யாழ் முஸ்லிம் என்னும் ஒரு தனிப்பட்ட ஊடகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட  ஒரு சதி அல்ல, மாறாக இலங்கை முஸ்லிம்களின் குரல்வளையை நசுக்கும் முயற்சிகளின் ஒரு முக்கிய முதற் படியே இது.

மேற்படி சதிக்கு அஞ்சி, எந்த முஸ்லிம் இணைய ஊடகமும் அடி பணிந்து விடக் கூடாது. அதே நேரத்தில், யாழ் முஸ்லிம் இணையம் சட்ட ரீதியான வழிமுறைகள் மூலம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கோழைத்தனமான தடையை முறியடிக்க முயற்சி செய்ய வேண்டும்.

சட்டத்தரணிகள் மூலம் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு (TRC) முறைப்பாடொன்றை மேற்கொண்டு, அதன் மூலம் அவர்கள் கூறும் போலிக் காரணங்களைத் தெரிந்து கொண்டு, அவற்றை முறியடிக்கும் விதமான சட்ட நடவடிக்கைக்கு தயாராகுதல் வேண்டும்.

அதே நேரத்தில், யாழ் முஸ்லிம் இணையத்தை தற்பொழுது இருக்கும் இணைய முகவரியில் (Domain) தொடர்ந்தும் இயக்கும் அதே நேரத்தில், வேறொரு பொருத்தமான புதிய இணைய முகவரியை தெரிவு செய்து, அதனை பழைய முகவரிக்கு திருப்பி விடுவதன் மூலம் இலங்கை வாசகர்கள் தடையின்றி யாழ் முஸ்லிம் இணையத்தளத்தை இணையப் பதிலிகளின் (Proxy) துணையின்றி நேரடியாக பார்க்க கூடியதாக இருக்கும்.

இது யாழ் முஸ்லிம் என்கின்ற இணையத்திற்கு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை என்கின்ற குறுகிய வட்டத்திற்குள் நோக்கப்படாமல், இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையாக நோக்கப்படல் வேண்டும்.

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளபட்ட வன்முறைகள், அடக்குமுறைகள் என்பவற்றை ஆவணப் படுத்தப்படும் பொழுது, யாழ் முஸ்லிம் இணையத்தை தடை செய்த நிகழ்வும் அதில் இடம்பெறல் வேண்டும்.

– சுவைர் மீரான்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *