இலங்கை முஸ்லிம்களும் அரசியலமைப்பு மாற்றமும்

இலங்கை திரு நாட்டிற்கான புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பிலான செயன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில், இலங்கை முஸ்லிம்களின் இருப்பு, பாதுகாப்பு, உரிமைகள், எதிர்காலம் தொடர்பில் விஷேட கவனமெடுக்க வேண்டிய உத்தேச யாப்புத் திருத்தம் மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டதாக கூறப்படுகின்றன.z_p-34-In-01

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை ஒழிப்பு, தேர்தல் முறை மாற்றம், இனப்பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப் பகிர்வு. மேற்படி மூன்று அம்சங்களும் இலங்கை முஸ்லிம்களை பொறுத்த வரையில் ஆபத்தானவையே.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையே சிறுபான்மையினருக்கு ஒரு பாதுகாப்பானதாகும் என்பதுடன் அவ் ஜனாதிபதியை தெரிவு செய்வதில் சிறுபான்மை வாக்குகளும் முக்கிய பங்கு வகிப்பதால் இம் முறைமையில் மாற்றம் வருவது இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் மிகவும் ஆபத்தானதாகும்.

யாப்பு மாற்றத்தின் மற்றொரு அடிப்படை அம்சமான தேர்தல் முறை மாற்றம் இலங்கை முஸ்லிம்களையும், மலையக தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் மிகவும் ஆபத்தானது. வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு உத்தேச தேர்தல் மாற்ற முறையாக கூறப்படுகின்ற கலப்பு தேர்தல் முறை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தப்போவதில்லை. 70 வீதமான தொகுதிவாரி முறையுடன் கூடிய உத்தேச புதிய தேர்தல் முறை பெருமளவில் முஸ்லிம்களைப் பாதிக்கின்றது.

பெரும்பாலும் அம்பாறையின் பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை தொகுதிகளில் இருந்தும் திருகோணமலையின் மூதூர் தொகுதியிலிருந்தும் மொத்தமாக நான்கு முஸ்லிம்களே தெரிவு செய்யப்படக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். மட்டக்களப்பு, வன்னி,கொழும்பு மத்தி, கண்டி, வேர்வலை போன்ற பிரதேசங்களில் இருந்து கிடைக்கும் வழமையான முஸ்லிம் பிரதிநிதித்துவமும் உத்தேச தேர்தல் மாற்று முறையின் பின் கிடைக்கப் போவதில்லை.

தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையின் ஊடாக இருபத்தி இரண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்துக் கொண்டிருப்பது இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் மிகப் பாதுகாப்பானதாகும். இதன் காரணமாகவே தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் இருபதாவது திருத்தத்திற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது உச்சகட்ட எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது.

யாப்பு மாற்றத்தின் அடுத்த அடிப்படை அம்சமான இனப்பிரச்சினைக்கான தீர்வான அதிகாரப் பகிர்வு விடயத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் முஸ்லிம்கள் சிதறுண்டு வாழ்வதால் அதிகாரப் பகிர்வு விடயத்தில் முஸ்லிம்கள் தமக்குரிய பங்கை பெறமுடியாத நிலையே காணப்படுகின்றது.

மேற்சொன்ன மூன்று அம்சங்களும் முஸ்லிம்களுக்கு பாதிப்பாக இருக்கின்ற சூழ்நிலையில் தான் உத்தேச யாப்பு மாற்றம் நடைபெறவுள்ளது. இந் நிலையில் முஸ்லிம்கள் மிகக்கவனமாக இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமது உரிமைகளை யாப்பு ரீதியாக உத்தரவாதப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இலங்கையின் முஸ்லிம்களை ஆள்புல ஓருமைப்பாடு, அதிகாரத்தை அடைந்து கொள்ளும் தன்மையை வைத்து நோக்கும் போது வடக்கு கிழக்கு முஸ்லிம்களில் இருந்து முற்றாக வேறுபட்ட நிலையினையே வடக்கு கிழக்கு வெளியேயுள்ள தென்னிலங்கை முஸ்லிம்கள் கொண்டுள்ளனர். வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தமக்கான அதிகாரத்தை அடைந்து கொள்ளக் கூடிய நிலம், மக்கள், இறைமையைக் கொண்டிருப்பதுடன் இத்தகைய ஒரு அரசுக்குரிய கூறுகளை பெற்றுக்கொள்ள முடியாதவர்களாகவே வடக்கு கிழக்குக்கு வெளியேயுள்ள தென்னிலங்கை முஸ்லிம்களின் குடிப்பரம்பல் காணப்படுகின்றது.

தென்னிலங்கை முஸ்லிம்கள் தமக்கான கிராம சேவையாளர் பிரிவுகள், பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளுராட்சி மன்ற அலகுகளை முஸ்லிம்கள் என்ற அடிப்படைக்குள் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர். அதேவேளையில் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்கள் வடக்கு கிழக்கு முஸ்லிம்களை விட இரண்டு மடங்காக உள்ளனர் என்பது இங்கு முக்கியமானது. ஆனால் வடக்கு கிழக்கு

முஸ்லிம்கள் தமக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மாகாண சபை பிரதிநிதித்துவம் முஸ்லிம் உள்ளுராட்சி மன்ற அலகுகள், தனியான முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளை கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். ஆக உத்தேச புதிய அரசியல் யாப்பிற்கான முன்மொழிவுகளை முன்வைக்கும்போது இலங்கை முஸ்லிம்களுக்கு என மொத்தமாக ஒரு முன்மொழிவை முன்வைக்க முடியாது.

தற்போதைய சூழ்நிலையில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இரண்டு வகையாக வகைப்படுத்த

1. தென்னிலங்கை முஸ்லிம்கள் உள்ளடங்கலாக இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்.

2. வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

கடந்த சில வருடங்களாக இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். உயிர் பாதுகாப்பின்மை (அளுத்கம சம்பவம்) தொழில் செய்வதற்கான உரிமை மறுக்கப்படல் (நோலிமிட், ஹாக்கோர்ட்ட தீ வைப்புச் சம்பவங்கள்) கலாசாரத்தை வெளிப்படுத்த முடியாமை அபாய, ஹிஜாப் உடைகள் மறுக்கப்படல், முஸ்லிம் மாணவிகளின் பாடசாலை சீருடை மறுக்கப்படல், மத உரிமை பின்பற்றுவதற்கான தடை (பள்ளிவாயல்கள் உடைப்பு) பல்லின கலாசாரத்தை மறுத்தல், முஸ்லிம்களை வந்தேறு குடிகள் எனக் கூறி முஸ்லிம்களின் பூர்வீக உரிமையை மறுத்தல், முஸ்லிம்கள் தனியார் சட்டம், இஸ்லாமிய ஷரியா சட்டத்தை கேள்விக்கு உட்படுத்த முயலல், குர்ஆன் அவமதிப்பு, ஹலால் உணவு முறையில் கைவைக்க முனைதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை அண்மைக்காலமாக முஸ்லிம்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

மேற்சொன்ன முஸ்லிம்கள் தற்போது நாடு முழுக்க எதிர்நோக்கும் பிரச்சினைகள் இலங்கையின் தற்போது நடைமுறையில் உள்ள 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பில் அடிப்படை உரிமைகள் என்ற அத்தியாயத்தில் யாப்பு ரீதியாக பாதுகாப்பு அளிக்கப்பட்ட உரிமைகளாகும்.

மேற்படி யாப்பில் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் உறுப்புரிமை 12ல் இனம், மொழி, மதம், சாதி, பால், அரசியல் கொள்கை அல்லது பிறப்பியல் காரணமாக எந்தப் பிரஜைக்கும் பாரபட்சம் காட்டப்படலாகாது.

உறுப்புரை 14 (உ) வில் தனியாக அல்லது மற்றவருடன் சேர்ந்து பகிரங்கமாகவேனும் அல்லது அந்தரங்கமாகவேனும் தனது மதத்தையோ நம்பிக்கையோ வழிபாட்டிலும் போதனையிலும் ஈடுபட வெளிக்காட்ட சுதந்திரம் உண்டு எனக் கூறுகிறது.

மேற்படி யாப்பில் உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட்டும் கடந்த ஆட்சிக் காலத்தில் மேற்சொன்ன பிரச்சினைகளை முஸ்லிம்கள் மோசமாக எதிர்நோக்கினர்.

வடக்கு கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இனப்பரம்பலுக்கு ஏற்ற காணியின்மை, நிர்வாகத்தில் பாரபட்சம் காட்டல், இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் மீள் குடியேற்றப்படாமை, முஸ்லிம் பிரதேச செயலகங்களில் நிலவும் எல்லைப் பிரச்சினைகள், அரச நிர்வாக உயர் பதவிகளில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படல், வடக்கு கிழக்கு இணைவதால் முஸ்லிம்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தனியான இனத்திற்குரிய சகல கூறுகளையும் கொண்ட இலங்கை முஸ்லிம்களை சில தமிழ் தலைமைகள் குழுவாக காட்ட முயலும் ஆதிக்க மனநிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பட்டியலிடலாம்.

ஆக புதிய யாப்பு மாற்ற விடயத்தில் முன் மொழிவுகளை முன்வைக்கின்ற போது மேற்சொன்ன இரண்டு வகையான முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப்பெற்றுக்கொள்ளும் வகையில் முன்வைக்கப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் முன்மொழிவுகளை முன்வைக்கும் போது தமது பிரச்சினைகளுடன் தென்னிலங்கை முஸ்லிம்களுக்குமான தீர்வுகளை உள்ளடக்கிய முன் மொழிவுகளை முன் வைப்பதுடன் தென்னிலங்கை முஸ்லிம்கள் தமது பிரச்சினைகளுடன் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கான தீர்வுகளையும் உள்ளடக்கிய முன்மொழிவுகளை முன்வைக்க அடிப்படை முன்மொழிவுகள் இரண்டு வகையில் அமையலாம்.

1. இலங்கை முஸ்லிம்கள் மொத்தமாக எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குரிய தீர்வாக அடிப்படை உரிமைகளை யாப்பு ரீதியாக உத்தரவாதப்படுத்துவதுடன் அவ் அடிப்படை உரிமைகளுக்குள் முஸ்லிம் உரிமைகளை உள்ளடக்கி யாப்பு ரீதியான உத்தரவாதத்தை பெற்றுக்கொள்வதுடன் அவ் உரிமைகள் மீறப்படுகின்ற போது நடைமுறைச் சாத்தியமான வழிகளின் ஊடாக பாதுகாப்பு உத்தரவாதத்தையும் உறுதிப்படுத்திக்கொள்ளல், கடந்தகாலங்களில் யாப்பில் உத்தரவாதப்படுத்திய பல உரிமைகள் மீறப்பட்டபோது மஹிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்களின் உரிமைகள் மோசமாக பாதிக்கப்பட்டபோது அவ்வுரிமை மீறலுக்கு எதிராக ஆட்சியில் இருந்த அரசாங்கம் எந்தப் பரிகாரத்தையும் வழங்கி முஸ்லிம்களை பாதுகாக்க முன்வரவில்லை.

சோல்பரி யாப்பில் வழங்கப்பட்ட சிறுபான்மை காப்பீடுகள் அப்பட்டமாக மீறப்பட்ட போது அதனால் சிறுபான்மை மோசமாக பாதிக்கப்பட்ட வரலாற்றை ஒரு முறை இவ்விடத்தில் மீட்டிப் பார்ப்பது சாலப் பொருத்தமாகும்.

ஆக யாப்பில் வழங்கப்படும் அடிப்படை உரிமைகள் நடைமுறையில் அமுலாகும் வகையில் ஏற்பாடுகள் காணப்பட வேண்டும். தற்போதைய அரசியல் யாப்பில் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்ற போது அம்மீறலுக்குள்ளானவர் உயர் நீதிமன்றத்தை நாடி பரிகாரத்தைப் பெற முடியும். ஆனால் சாதாரண ஒரு பிரஜைக்கு உயர் நீதிமன்றத்தை நாடுவதில் பல்வேறு நடைமுறைத் தடைகள் பொருளாதாரப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆக கீழ் மட்ட நீதிமன்ற பதவனிகளுக்கு ஊடாக பரிகாரத்தை பெற்றுக் கொள்ளக் கூடிய நீதிமன்ற கட்டமைப்பு ஏற்பாடுகள் காணப்பட வேண்டும். அத்துடன் அடிப்படை உரிமைகள் பகிரங்கமாக மீறப்படும் சந்தர்ப்பங்களில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அரச அதிகாரிகள் மற்றும் பொலிசாருக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் புதிய யாப்பில் உள்வாங்கப்பட வேண்டும்.

2. வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கான தீர்வாக அவர்களின் ஆள்புல ஒருமைப்பாடு, அதிகாரத்தை அடைந்து கொள்ளும் நிலத்துடன் கூடிய குடிப்பரம்பலின் அடிப்படையில் அவர்கள் தங்களுக்கான சுயாட்சி அல்லது தன்னாட்சி கட்டமைப்பிற்கான கோரிக்கையினை முன்வைக்க முடியும். இச் சுயாட்சி அல்லது தன்னாட்சி கட்டமைப்பு தனி அலகாக, அல்லது தனி மாகாணமாக அமைய முடியும். கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் இச் சுயாட்சி கட்டமைப்பு அமைய முடியும். இச் சுயாட்சிக் கட்டமைப்பில் வட மாகாண முஸ்லிம்களும் இணைந்து கொள்வது அவர்களின் விருப்பத்தைப் பொறுத்ததாக அமைய முடியும்.

தமிழ்த் தரப்பினர் தமது கோரிக்கையாக சமஷ்டியை முன்வைக்கும் இன்றைய நிலையில் வட கிழக்கு முஸ்லிம்களின் கோரிக்கையாக தன்னாட்சிக் கட்டமைப்பே அமைய முடியும். இத் தன்னாட்சிக் கட்டமைப்பு அல்லது முஸ்லிம் மாகாணம் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் புதிய கோரிக்கை அல்ல. இது மிக நீண்டகால அம் மக்களால் முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கையாகும். பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தத்தில் இவ் முஸ்லிம் தன்னாட்சிக் கட்டமைப்பு ஏற்றுக்கொண்டதுன் 2000ம் ஆண்டில் சந்திரிக்கா அம்மையாரின் இனப் பிரச்சினை தீர்வாக முன் வைக்கப்பட்ட மர்ஹூம் தலைவர் அஷ்ரப் அவர்களின் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற தீர்வூத்திட்டத்தில் இத் தன்னாட்சிக் கட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆக உத்தேச அரசியல் யாப்பு மாற்றத்தில் முஸ்லிம்களின் தீர்வாக கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு தன்னாட்சிக் கட்டமைப்புடன் கூடிய அதிகார அலகும் இலங்கை முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான உத்தரவாதங்களும் யாப்பு ரீதியான உறுதிப்பாட்டுடன் வழங்கப்பட வேண்டும்.

– யூ.எல்.எம்.என். முபீன் –

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *