கேள்விக்குறியாகும் மாவனல்லை முஸ்லிம்களின் எதிர்கால அரசியல் பிரதிநிதித்துவம்

கேள்விக்குறியாகும் மாவனல்லை முஸ்லிம்களின் எதிர்கால அரசியல் பிரதிநிதித்துவம் இலங்கை முஸ்லிம்களிடையே மாவனல்லை என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஊர்களில் ஒன்றாகும். ஒவ்வொரு காரணியாக எடுத்தியம்பி இதனை ஊர்ஜிதப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமன்று. தலைப்பில் குறிப்பிட்டது போன்று மாவனல்லை முஸ்லிம்களின் அரசியல் எதிர்கால எதிர்கூறல்களை சற்று முன்னோக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும். மாவனல்லை முஸ்லிம்களை தற்போது பிரதிநிதிப்படுத்துவதற்குள்ளவர் கபீர் ஹாசிம் மட்டுமே.

Mawanella-Politics

ஏக பிரதிநிதியாக இருப்பதினாலோ என்னவோ ஊருக்கு எந்த வேலை செய்யாவிடினும் முஸ்லிம்களின் ஓட்டு எப்படியும் கிடைத்துவிடுகிறது. எனினும் இதுவரை காலமும் அதிகாரத்தில் இருக்கவில்லை என்பது ஒரு வகையில் அவருடைய சேவைகள் நமக்கு கிடைக்காமல் போனமைக்கு ஒரு நியாயமான காரணமாக ஏற்றுக்கொள்ளலாம். அதாவுத செனவிரத்ன, ல லித் திஸானாநாயக, காமில் போன்றோரின் சேவைகளைப்போன்று கபீர் ஹாசிமிடமிருந்தும் நாம் எதிர்காலத்தில் எதிர்பார்ப்பது நியாயமானதே.

ஆனால் இவர்களிற்கு பின்னால் ஏற்படப்போகும் வெற்றிடத்துக்கு நாம் என்ன தயார்செய்திருக்குறோம் என்பதே இங்கு கேள்விக்குறியாகும். பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை நுழைவிக்க முயற்சி செய்யும் நாம் எமக்கான அரசியல் பிரதிநிதிகளை ஏன் தயார்பண்ணாது மரபு வழி அரசியல் வாரிசுகளிடம் ஒப்படைக்கின்றோம் என்பதை சிந்திக்கவேண்டும். தற்போதுள்ள அரசியல்வாதிகளின் மறைவின் பின்னரோ எமக்காக சேவை செய்யும் இளம் அரசியல்வாதிகளை உருவாக்குவது நமது கட்டாய கடமையாகும். கடந்த பொதுபலசேனா பிரச்சினையின் போது சிங்கள மொழியில் வாதிடக்கூடிய அரசியல்வாதியாக தென்பட்டவர் அஸாத் சாலி மட்டுமே. ஆயிரக்கணக்கான புத்திஜீவிகள் இருந்தும் சிங்கள மொழிப்புலமையின் அத்தியாவசியத் தேவைப்பாடு அன்றே நம் எல்லோர்க்கும் உணர்ந்தது.

இவ்வாறு பல திறன்களுடைய இளம் அரசியல்வாதிகளை உருவாக்கியுள்ளோமா என்று பார்த்தால் ஏமாற்றப்பார்வையே திரும்பி வருகிறது. பின்வரும் திறன்களுடைய இளம் அரசியல்வாதிகள் காலத்தின் தேவையாகும்.

  1. சிங்களம், ஆங்கில மொழிகளில் திறமை பேச்சாற்றல்
  2. வாதிடும் திறமை
  3. மத்த்தவர்களுடன் சுமூகமான உறவைப்பேணும் தன்மை
  4. சிறந்த கல்வியாற்றல்
  5. சமூக சேவை மனப்பாங்கு
  6. துறைசார்ந்த வல்லுனர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் அடங்கிய வழிகாட்டல் குழுவினரின் ஆலோசனையோடு செயற்படல்

எமது ஊரில் இத்தகுதிகள் காணப்படுவர்களை இனம்கண்டு அவர்களை அரசியல் நீரோட்டத்தில் பங்கேற்க வைக்கும் முயற்சிகளை முன்னெடுப்பது காலத்தின் தேவையாகும்.

கடந்த காலங்களில் நடைபெற்ற பின்வரும் இரண்டு சம்பவங்களை இங்கு மேற்கோள் காட்டிட விரும்புகிறேன்

– ஹிங்குளோயா மஸ்ஜிதின் மத்தியஸ்த சபை தெரிவின் போது தமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காக ஒரு இயக்கத்தைச் சேரந்தவர்கள் செயற்பட்ட விதம். வீடு வீடாக பிரச்சாரம் செய்தல், வாக்காளர்களை வாகனங்கள் மூலம் வாக்களிப்பு நிலையத்திற்கு அழைத்து வரல், வாக்களிக்க தடையாக காணப்பட்ட சந்தாப்பண நிலுவைகளை மொத்தமாக செலுத்துதல், கடன் உதவிகளை வழங்கள் போன்ற செயற்பாடுகள் மூலமாக தகுதியானவர்களை தெரிவுசெய்தல்

– பிரதேச சபைத் தேர்தலின் போது முஸ்லிம்கள் ஊர்வாரியாகவும் கட்சிவாரியாகவும் பிரிந்து வாக்களித்தமையினால் சகோதரர் காமில் குறைந்த வாக்குகளைப் பெற்று ஆளும் கட்சியில் அமர்ந்தமை, கூடிய விருப்பு வாக்குகள் பெற்றும் மர்ஹும் ஸவாஹிர் ஹாஜியாரினால் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியமை. இவ்விரண்டு சம்பவங்களையும் உற்று நோக்குமிடத்து, சாதாரண பள்ளிவாயல் ஒன்றின் நிர்வாக சபைக்கு தமது இயக்க சார்பு நிர்வாகிகளை அனுப்புவதற்கு எடுக்கும் முயற்சி தமது பிரதேச சபைத்தேர்தலின் போது ஏனோதானோவென்று இருத்தல் ஆகியன ரொம்ப கவலைக்கிடமான விடயமாகும். அந்த தேர்தலின் போது இதே போன்று ஒட்டுமொத்த மாவனல்லை முஸ்லிம் சமூகமும் செயற்பட்டு இருந்தால் எமது பிரதிநிதி ஒருவரினை இலகுவாக தலைவராக தெரிவு செய்திருக்கலாம்.

இவ்வாறு திட்டமிட்டு ஒற்றுமையாக செயற்படாத தன் விளைவு கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவரே தலைவராக தெரிவு செய்யப்பட்டு அவருக்கு முன்னால் கை கட்டி நின்று எமது தேவைகளை செய்துகொள்ள வேண்டியதாகியது. இனிவரும் காலங்களில் இதுபோன்றில்லாமல் புத்திஜீவிகள், உலமாக்கள், இயக்கங்கள் என எல்லோரும் ஒன்றுபட்டு சிறந்த ஆளுமையுள்ள இளம் அரசியல்வாதிகளை இனம்கண்டு அவர்களை நெறிப்படுத்தி எமது எதிர்கால அரசியலின் பிரதிநிதிகளாக உருவாக்க முன்வரல் வேண்டும். ஆரோக்கியமான கலந்துரையாடல்கள், தெளிவுபடுத்தல் நிகழ்ச்சிகள் இது விடயமாக முன்னெடுக்கப்படும் என்ற சமூக ஆர்வத்துடன் இதனை முடிக்கின்றேன்.

இதைப்பற்றி உங்கள் தனிப்பட்ட கருத்துகளை எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கி அனுப்பவும் : ireport@mawanellanews.com

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares