சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு!

தேசிய சூரா சபையின் ஊடகத் துறைக்கான உப குழுவின் வேண்டுகோள்:

அண்மைக்கால (Social Media) சமூக ஊடகங்களிலான பலரது பொறுப்பற்ற செயற்பாடுகள் ஒருவகையான பதற்ற நிலையை அதிகரிப்பதாக அமைந்துள்ளன. இதனை ஒழுங்குறக் கையாளாவிட்டால் நிலைமை தலைக்கு மேலே செல்லும் அபாயம் இருக்கிறது. இந்த விடயத்தில் சமூக ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியதை ஞாபகப்படுத்துகிறோம்.

அத்துடன் தற்போதைய சூழலில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் பேண வேண்டிய சில வழிகாட்டல்களை தேசிய சூறா சபை முன்வைக்க விரும்புகிறது.

•சமூகத்தை ஒற்றுமைப்படுத்தி ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கு சமூக ஊடகங்களால் முடியும். இலங்கை முஸ்லிம் சமூகம் சமூக ஊடகங்களை இன்னும் இந்தத் துறையில் போதுமானளவு பயன்படுத்தவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும்.

•இன, மத வேறுபாடுகளின்றி மனித நேயம், மனிதாபிமானத்துக்கு முதலிடம் அளிக்க வேண்டும். குரலற்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காக குரலெழுப்ப வேண்டும். தனது இனத்துக்காக மட்டுமே குரல் கொடுப்பது இஸ்லாம் அங்கிகரிக்காத இனவாதமாகும்.

•எந்தவித செயற்பாடுகளின்போதும், அது நீதிக்கானதாக இருந்தாலும் அதனூடாக அதனை விடப் பெரிய தீமை விளையாமல் அவதானமாக இருக்க வேண்டும்.

•நல்ல விளைவுகளைத் தராத எந்தச் செயற்பாடுகளும் வீணானவையே. வீணான செயற்பாடுகளில் ஈடுபடுவது முஃமினுடைய பண்பு அல்ல. தான் முஃமின் என்பதை சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் தமது செயல்களுக்கூடாக நிறுவ வேண்டும்.

•”உங்களில் ஒருசாரார் மீது உங்களுக்குள்ள பகை அவர்கள் மீது அநீதி இளைப்பதற்கு உங்களைத் தூண்டாதிருக்கட்டும்” என்ற இறை கட்டளைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அத்துமீறுபவர்களை அல்லாஹ் கண்டிக்கிறான். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாப்பதாக நினைத்து அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்யும் நிலைக்கு சென்றுவிடக் கூடாது.

•பெரும்பான்மை சமூகத்திலுள்ள சில தீவிரவாதிகளின் செயற்பாடுகளை விமர்சிக்கப் போய் அந்தச் சமூகத்தில் பெரும்பான்மையாகவுள்ள ஆதரவாளர்களின் அரவணைப்பை இழந்து விடக் கூடாது. அதனால் பொதுவாக மொத்தச் சமூகத்தையுமே இழிவுபடுத்தும் வேலைகளை சமூக ஊடகங்கள் செய்யக் கூடாது.

•ஒரு கல் எறியப்பட்டாலும் மொத்தக் கூடும் கலைந்து விடும் அபாயம் இருக்கிறது. அந்த வகையில் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். யாரும் தவறுதலாக செய்யும் செயற்பாடுகளை அடுத்தவர்கள் உடனே முன்வந்து திருத்தி உதவி செய்ய வேண்டும்.

•எந்தவொரு விடயத்தையும் உணர்வுபூர்வமாக(Emotional) அணுகுவதை தவிர்த்து அறிவுபூர்வமாக அணுகுவதற்கு பழகிக் கொள்ள வேண்டும். ஓர் அறைக்குள் அமர்ந்து சமூக ஊடகங்களில் உணர்வுபூர்வமாக அல்லது அடுத்தவர்களின் உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் பதிவுகளை பதிவேற்றம் செய்பவர்கள் அதனால் ஏற்படும் பாதக விளைவுகளுக்கு பொறுப்புச் சொல்ல வேண்டும். நாட்டுப்பற்றுள்ள, சமூகப்பற்றுள்ள ஒரு முஸ்லிம் சமூகத்தை ஆபத்தில் தள்ளிவிடும் முயற்சியை ஒருபோதும் முன்னெடுக்கக் கூடாது.

•முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படுகின்றபோது வெறுமனே அரசியல் தலைவர்களைத் திட்டித் தீர்ப்பதனாலும் சமூகத் தலைமைகளைக் கொச்சைப்படுத்துவதனாலும் ஆகப் போவது ஒன்றுமில்லை. அவர்களுக்கு ஆலோசனை சொல்லும் வகையில் நிதானமாக நடந்து கொள்ள வேணடும்.

•சிலபோது மிகவும் அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களும் தூஷண வார்த்தைகளும் தனிநபர் தாக்குதல்களும் திட்டமிட்டு மேற்கொள்ளாப்படுகின்றன. இதனைப் பார்த்து ஆவேசப்படுட்டு நாமும் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எல்லாவற்றுக்கு பதிலளிக்க வேண்டிய, பின்னூட்டமிட வேண்டிய தேவையில்லை என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares