சாராயம் ஹறாம் என்று தெளிவு படுத்தப்பட்டளவுக்கு சிகரட் தொடர்பில் தெளிவு படுத்தப்படவில்லை

நமது சமூகத்தில் சாராயம் ஹறாம் என்று தெளிவுபடுத்தப்பட்ட அளவுக்கு சிகரட் பிடிப்பது தொடர்பில் இஸ்லாமிய மார்க்கத்தின் நிலைப்பாடு என்னவென்பது குறித்து போதிய தெளிவுரைகள் வழங்கப்படவில்லை.
பொது இடங்களில் சாராயம் அருந்துவதற்கு தயங்குகின்ற, பயப்படுகின்ற, வெட்கப்படுகின்ற யாருமே நான்குபேருக்கு நடுவில் வைத்து சிகரட் பிடிப்பதற்கு பின் நிற்பதில்லை.
“சாராயம் அருந்துவது ஹறாம்” என வாரங்கள்தோறும் வானளாவ ஓங்கியொலிக்கின்ற மிம்பர் மேடைகள் சிகரட் புகைப்பதும் ஹறாமானதுதான் என்று தைரியமாக கூறுவதற்கு ஏனோ முன்வருவதில்லை.
யதார்த்தமாக சிந்தித்தோமானால் சாராயத்தை விடவும் புகைத்தலே ஹறாமானது என்ற படித்தரத்தில் முதல்நிலை வகிக்கிறது. காரணம், சாராயம் அருந்துகின்ற ஒரு மனிதன் அவன் தன்னை மாத்திரமே வருத்திக்கொள்கிறான். ஏனையோர்களுக்கோ சுற்றுச்சூழலுக்கோ அவனுடைய குடிப்பழக்கத்தினால் குறிப்பிடத்தக்க விதத்தில் எதுவித பாதிப்புக்களும் கிடையாது.
ஆனால் ஒருவர் புகைப்பிடிக்கின்ற போது அவர் தன்னைத்தானே அழித்துக்கொள்கின்ற தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதோடு மாத்திரமன்றி தன்னை சுற்றியுள்ள ஏனையோருக்கும் அதன் பாதிப்பை பகிர்ந்தளிக்கிறார்.
மேலும் தன்னுடைய மனைவி, குழந்தைகள் போன்ற அப்பாவித்தனமான உறவுகள் கூட குடும்பத்திலுள்ள ஒருவருடைய இப்புகைப்பழக்கத்தினால் உடல் மற்றும் உணர்வு ரீதியாக பாரிய விளைவுகளை எதிர்நோக்குகின்றனர்.
ஒருவர் சிகரட் புகைக்கும்போது வெளிப்படுத்தப்படுகின்ற புகையின் காரணமாக ஏனையோர்களும் பல வகைப்பட்ட நோய்களுக்கும் உபாதைகளுக்கும் உள்ளாவதோடு குறித்த அந்நபரோடு நேருக்குநேர் நின்று உரையாட முடியாத அளவுக்கு அருவருக்கத்தக்க துர்நாற்றத்தால் முகத்தை சுழித்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலையும் அவ்விடத்தில் உருவாகிறது.
நபிகளார் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கை ஆகியவற்றின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார்.(SB.10)
இந்த நபிமொழியின் அடிப்படையில் பார்த்தோமானால் புகைப்பழக்கத்தையுடையவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் எத்தகைய பொறுப்பில், மதிப்பில், பதவியில் வீற்றிருந்தாலும் முஸ்லிம் என்ற அடிப்படை அடையாளத்திற்கே அருகதையற்றவர்களாகி விடுகின்றனர்.
புகைப்பழக்கமெனும் மெல்லக்கொல்லும் விஷத்தின் மூலமாக அதனோடு தொடர்பற்ற நபர்களும் சுகாதாரமான சூழலும் அநியாயமாக பாதிக்கப்படுவது தடுக்கப்படவேண்டும்.
எனவே சிகரட் என்ற போதைப்பொருள் எவ்வாறு அருவருக்கத்தக்க ஒரு பண்டமாக கணிக்கப்படுகிறதோ அதேபோன்று சிகரட் பிடிக்கின்ற நபர்களும் சமூகத்தை விட்டும் ஒதுக்கி, தனிமைப்படுத்தப்பட்டு, முற்றாகவே புறக்கணிக்கப்படவேண்டும்.
இதுவே பெண்கள், குழந்தைகள் உட்பட ஏனையோரையும் சுத்தமான சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்காக நமது கைவசமுள்ள இறுதிக்கட்டத்தீர்வாகும்.
-முஹம்மது நியாஸ்-

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares