சிறுபான்மை மக்களுக்கு குரல் கொடுக்கும் மக்கள் பிரதிநிதி கேகாலைக்கு அத்தியவசியம் – ஜனநாயக கட்சி வேட்பாளர் நளீம்

DSCN6826 (1)

நேர்காணல்:- ராயிஸ் ஹஸன்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் ஜனநாயகக் கட்சி சார்பில் களமிறங்கியுள்ள ஒரே ஒரு சிறுபான்மை இன வேட்பாளரான மொஹமட் நளீம் “மாவனல்லை நியூஸ்”‘க்கு வழங்கிய நேர்காணல் வருமாறு:-

கேள்வி:- உங்களைப் பற்றி விளக்க முடியுமா?

பதில்:– நான் கேகாலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் மாவனல்லை நகரில் பிறந்து வளர்ந்தவன். ஆரம்பக் கல்வியை உயன்வத்தை நூரணியா பாடசாலையில் பெற்றதுடன், உயர் கல்வியை மாவனல்லை பதூரியா மத்திய கல்லூரியில் பெற்றேன். பின்னர் நான் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தேன். ஐக்கிய தேசியக் கட்சி பிரபல ஆதரவாளராக செயற்பட்ட எனக்கு 1995 ஆம் ஆண்டு அக்கட்சியில் அமைப்பாளர் பதவி ஒன்று வழங்கப்பட்டது. அமைச்சர் கபீர் ஹாசிமின் அரசியல் பயணத்தில் நானும் பகல் இரவு பாராது அயராது உழைத்துள்ளேன். அவருடன் நெருங்கிப் பழகிய நான் அவருடைய சில கொள்கைகைகளுக்கு முரண்பட்டு கட்சியை விட்டும் வெளியேறினேன்.

இந்நிலையில், 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டோம். இதன்போது பொது எதிரணி வேட்பாளராகக் களமிறங்கிய சரத் பொன்சேகாவுக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்கியதுடன். தேர்தல் நடவடிக்கைகளுக்காக அவருடன் இணைந்து செயற்பட்டேன். சூழ்ச்சிகளினால் அவர் தோற்கடிக்கப்பட்டதுடன் சிறைக்கும் அனுப்பப்பட்டார். பின்னர் அவரை விடுவிப்பதற்காக அனோமா பொன்சேகாவுடன் இணைந்து நாங்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம்.

கட்சிக்காக எனது அர்ப்பணிப்புகளைக் கெளரவிக்கும் வகையில் ஐனநாயகக் கட்சி மாவனல்லை அமைப்பாளராக என்னை நியமித்தனர். அதற்கமைய இம்முறை பொதுத் தேர்தலில் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளராகவும் முன்னிறுத்தினர்.

நாங்கள் அடிமட்டத்திலிருந்து வந்தவர்கள். பெரும் செல்வந்தர்கள் அல்லர். எமக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து நன்கு தெரியும். மாவனல்லையின் அபிவிருத்தி 20 வருடங்கள் பின்நோக்கி உள்ளது. இதனை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காக நானும் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தேன்.

கேள்வி:- கேகாலை மாவட்டத்தில் பிரபல அரசியல்வாதிகள் பலர் போட்டியிடுகின்றனர். இந்தவகையில் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி உங்களால் நாடாளுமன்றம் செல்வது சவாலாக அமையாதா?

பதில்:- பிரபலங்களினால் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்துள்ளது என்பதனை நாங்கள் அவதானிக்க வேண்டும். 20 வருடங்கள் ஆட்சியில் இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி பல முன்னணி அமைச்சர்கள் இங்கு இருந்தனர். ஆனால், மாவனல்லையில் எந்தவித அபிவிருத்தியையும் மேற்கொள்ளவில்லை.
கேகாலை வாழ் சிறுபான்மை மக்கள் தமக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப முடியாதுள்ளனர். அவர்களுக்கான அரிய சந்தர்ப்பமாக நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன். எனக்கு எனது சமூகத்தின் மீதும் மொழி மீதும் பற்றுள்ளது. அதேபோன்று இன நல்லுறவையும் நாங்கள் பாதுகாப்போம்.
என்னைப் பொறுத்தவரை எனக்கு எவரும் சவால் இல்லை. என்றாலும் என்னைச் சவாலாக சிலர் கருதுகின்றனர். பிரதான கட்சிகளில் இலச்சக்கணக்கான வாக்குகளைப் பெற்றாலும் நாடாளுமன்றம் செல்ல முடியாது. என்றாலும் நான் போட்டியிடுவது சிறு கட்சி என்பதால் 10 ஆயிரம் விருப்புவாக்குகளைப் பெற்றால் நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டு விடுவேன். இதனால் எனது வெற்றி உறுதியாகியுள்ளமையினால் நாடாளுமன்றத்தில் பிரபலங்களுக்கு அச்சுறுத்தலாகவும் மாவனல்லை மக்களுக்கு குரலாகவும் நான் இருந்து விடுவேனோ என்ற பயத்திலே அவர்கள் என்னை தோற்கடிப்பதற்கான சதிகளைத் தீட்டுகின்றனர்.

கேள்வி:- உங்களது கட்சித்தவைர் பீல்ட் மார்­ல் சரத் பொன்சேகா சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் என்ற கருத்து பரவலாகப் பேசப்படுகின்றது. இதனை நீங்கள் எவ்வாறு அவதானிக்கிறீர்கள்?

பதில்:- அரசியல் என்று வரும்போது பலருக்கு பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது சகஜமாகும். கடந்த 2010 ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்களது வாக்குளை சிதறடிப்பதற்காக மஹிந்த தரப்பினரால் பொன்சேகாவுக்கு எதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. நான் தலைவருடன் நெருங்கிப் பழகுகின்றேன். என்னை அவர் மகனாகவே பார்க்கின்றார். அவர் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கொள்கை உடையவர் அல்லர் என்பதில் எனக்கு நூற்றுக்கு நூறுவீதம் நம்பிக்கை உள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு ஐனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன சரத் பொன்சேகா மீது நம்பிக்கை வைத்தமையினாலேயே ஆதரவு வழங்கியிருந்தன.

அது மட்டுமல்லாது, அவர் சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் என்றால் என்னை ஒருபோதும் மாவனல்லை கட்சி அமைப்பாளராக நியமித்திருக்க மாட்டார். அதேவேளை, என்னைத் தேர்தலில் போட்டியிட வைத்திருக்கவும் மாட்டார்.

முஸ்லிம்களுக்கு எதிராக அளுத்கம, பேருவளைகளில் அரங்கேற்றப்பட்ட அசம்பாவிதங்களின் போது முதலில் குரல் கொடுத்தவர் சரத் பொன்சேகாவே. அது மாத்திரமல்லாது, மாவனல்லையில் தெவனகல பிரச்சினைகளின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு தனது நெருங்கிய பாதுகாப்புத் தரப்பினர் மூலம் முஸ்லிம்களைப் பாதுகாத்தனர். இதுபோன்ற பலதைச் சொல்லாம்.

கேள்வி:- நாடாளுமன்றத்துக்குப் பிரவேசிப்பீர்களாயின் எவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பீர்கள்?

பதில்:- மாவனல்லையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் புரிதுணர்வையும் ஏற்படுத்தக்கூடிய சமாதான தூதுவராக நான் இருப்பேன்.

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவி மூலம் மக்களுக்கு எவ்வகையான சேவைகளைச் செய்யமுடியும் என்பவை தொடர்பாக சேவையாற்றுவதன் மூலம் உணர்த்துவேன்.
மலையக தமிழ் பாடசாலைகளில் உள்ள பற்றாக்குறைகளை நாங்கள் சொல்லவேண்டிய தேவையில்லை. அந்நிலை மாவனல்லையில் அதிகமாகவே காணப்படுகின்றது. உயர்கல்வி பாடங்களுக்கு பிரபல பாடசாலைகளில் கூட தகுதியான ஆசிரியர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது. ஒரு காலத்தில் கல்வியின் கேந்திர நிலையமாக இருந்த மாவனல்லை தற்போது பின்நோக்கியுள்ளது. தற்போது இங்குள்ள மாணவர்கள் வேறு இடங்களுக்கு கல்விக்காகச் செல்லவேண்டிய கொடிய நிலை உருவாகியுள்ளது. மாவனல்லையில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் பல உள்ளன. ஆனால் அபிவிருத்திகள் ஒருசில நடந்தாலும் அது பிரபல பாடசாலைகளிலேயே நடக்கின்றன. இதனால் சிறு பாடசாலைகள் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன.

எமது பிரச்சினைகளை மக்கள் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறுவதற்குச் சென்றால் அவர்களை கிட்ட நெருங்கவே மிகவும் கடினமாக உள்ளது. பதவி வந்தவுடன் மக்களை மறக்கும் அரசியல் வாதிகள் தேர்தல் காலங்களிலே மீண்டும் ஊர்களில் வட்டமிடுகின்றனர். இந்நிலையை மாற்ற வேண்டும்.

கேள்வி:- இறுதியாக என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்:- மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அரசியல் தலைமைகள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட வேண்டும். கேகாலை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற எனக்கு இன, மத பேதங்களுக்கு அப்பால் மக்கள் ஆதரிப்பார்களாயின் நல்லாட்சியில் சிறந்த மக்கள் சேவகனாக இருப்பேன்.
அது மாத்திரமல்லாது, கேகலை வாழ் சிறுபான்மை சமூகத்தினருக்குப் பக்கபலமாக நான் இருப்பேன். தேசத்தைப் பயங்கரவாதத்திலிருந்து மீட்ட தலைவர் பொன்சேகா. அவர் தலைமையிலான ஜனநாயகக் கட்சிச் சின்னமான தீ பந்தத்துக்கு புள்ளடியிட்டு பின்னர் எனது விருப்பு இலக்கமான 10க்கு ஒரு வாக்கை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *