சிறுவர் தினமும் புலமைப்பரிசில் பரீட்சையும்.

இன்றைய நாளின் தொடக்கம் மிக ரம்யமாகவே இருந்தது.ஒன்று இன்று காற்று நொண்டி நொண்டி வரும் மழை நாளாக இருந்தது;அடுத்தது இன்று உலக சிறுவர் தினம் என்பது. ஒக்டோபர் முதலாந்திகதி சிறுவர் தினம் என்பது நாம் மறந்தாலும் சமூக ஊடகங்கள் ஞாபகப்படுத்த மறக்கவில்லை.

சிறுவர்கள் தினம் என்று ஒரு நாளைக் கொண்டாடி விட்டு மீதி நாட்களில் அடியும் வசவுகளுமாக இந்தப் பிஞ்சு உள்ளங்களை நோகடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.அதே நேரம் அந்த ஒரு தினத்திலாவது சிறுவர்களுக்கு கொஞ்சம் சிறகு முளைப்பதையும், பரிசுகள் கிடைப்பதையும், வளர்ந்த குழந்தைகளுக்கெல்லாம் மீண்டுமொரு முறை மனவெளியில் அந்தச் சிறுபராயத்துக்குள் சென்று வருவதற்கான வாய்ப்புக் கிடைப்பதையும் ஏன் மறுதலிக்க வேண்டும்?

சிறுவர் தினம் கொண்டாடுவதில் தனிப்பட்ட முறையில் எனக்குச் சம்மதம் தான்.இந்தத் தினத்தில் குழந்தைத்தொழிலாளர்கள்,சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வறுமை போன்ற தலைப்புக்கள் ஊடகங்களில் கவனயீர்ப்பையும் பெறுகின்றன.

ஒரு விசேடம் இந்த ஆண்டு சிறுவர் தினம் இலங்கையில் பல சிறுவர்களின் உள்ளத்தில் கொடூர ஆணிகளையும் அடித்து விட்டு அமைதி கொள்கிறது.
ஆம், இன்று ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின.

கட்டற்ற காற்றாய் கடிவாளமற்ற குதிரைகளாய் ஓடித்திரியும் குழந்தைகளுக்கு கால்விலங்கு தான் இந்தப்பரீட்சை.

இரவு பகலாய் குழந்தையை விழிக்கச் செய்வதாகட்டும்;ஒரு ட்யூசனிலிருந்து இன்னொரு ட்யூசனுக்கு அழைத்துச் செல்வதாகட்டும் இந்தப் பரீட்சையில் முதலில் சோதனைக்கு உள்ளாக்கப்படுபவர்கள் பெற்றோர்கள்.

குழந்தையின் மதிய சிறுதூக்கம் கலைத்து ஹோம் வேர்க்.

மாலை நேரம் அக்கம் பக்கத்தில் சேரும் குட்டிக் குழு விளையாட்டுக்களிலிருந்து விலக்கு.

உறவினர் நண்பர்கள் வீடு விசேடம் சத்தியமாய் இல்லை.

குர்ஆன் மத்ரஸா பிறகு பார்த்துக் கொள்ளலாம்;இப்போதோ படிப்பே முக்கியம்.

எப்போதாவது கூட கார்டூன் பார்க்கக் கூடாது,
சித்திரம் வரைதலென்ற பெயரில் கிறுக்குதல் அநாவசியம்.

குழந்தைகளை விட தாய்மார்கள் இந்தப் பரீட்சைக்காக தங்களைப் பரீட்சைக்குட்படுத்திக் கொள்கிறார்கள்.

இவ்வளவும் செய்தும் சில பிள்ளைகள் சித்தியடைகிறார்கள்; பலர் பெயிலாகி விடுகிறார்கள்.
பாஸான குழந்தைகளை வைத்து ‘எப்படி படித்தார்கள்’ என்ற நேர்காணல் வேறு.சித்தியடைந்த குழந்தைகளை மனதார வாழ்த்துவதில் குறையேதுமில்லை.வாழ்த்துக்கள்.

குழந்தையின் நுண்ணறிவையோ,திறமைகளையோ ஏனைய திறன்களையோ முழுமையாக அறிந்து கொள்வதற்கு இந்தப் பரீட்சை எந்த வகையில் அளவீடாகாது.

கல்வி வாழ்க்கைக்கானது. வாழ்க்கையையே இழந்து கல்வி பெறுவது வேதனைக்கும் விசனத்திற்குமுரியது.
குழந்தைப்பருவம் வாழ்க்கையின் அதியற்புதமான வசந்த காலம்.காடுகளிலும் ஓடைக்கரைகளிலும் மீன்களோடும் பாடும் புள்ளினங்களோடும் குதூகலிக்க வேண்டிய உன்னதமான பருவம்.அந்தக் காலத்தை வேதனை மிகுந்த பரீட்சைச் சிறைக்குள் வானம் பார்க்காமல் கடத்துவதென்பது வருத்ததிற்குரியது.
சென்றால் திரும்ப வராததொன்று குழந்தைப்பருவம் என்பதை நினைவில் கொள்தல் அவசியம்.

தளர்ந்திருக்கும் குழந்தையை இனியாவது தட்டிக்கொடுங்கள்; உங்கள் ஊக்கமும் அன்பும் தான் அவர்கள் இந்த நிமிடம் அதிகம் வேண்டுவது.பாஸோ பெயிலோ அவர்களுக்கு நீங்கள் வாக்களித்த பரிசினை வாங்கிக் கொடுங்கள்.

இந்த தோல்வி தோல்வியல்ல என்பதை துவண்டிருக்கும் அந்தப் பிஞ்சு உள்ளங்களுக்கு உணர்த்துங்கள்.

குழந்தையின் மனமெனும் மெல்லிய கண்ணாடியில் ஒரு கீறல் கூட விழ அனுமதிக்க வேண்டாம்.
வாழ்த்துக்கள்!!!

Article by Shameela Yoosuf ALi

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *