செரண்டிப் கால்பந்துக் கழக அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக மொஹமட் இஸ்ஸடீன் நியமனம்

இலங்கை தேசிய கால்பந்து அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய இலங்கை இராணுவப்படை கால்பந்து அணியின் முன்னணி வீரருமான மொஹமட் இஸ்ஸடீன், மாவனல்லை செரண்டிப் கால்பந்துக் கழக அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் டிவிஷன் l போட்டித் தொடரில் விளையாடும் முக்கிய அணிகளில் ஒன்றாக உள்ள செரண்டிப் விளையாட்டுக் கழகம், கடந்த இரண்டு பருவகால தொடர்களிலும் காலிறுதிச் சுற்று வரை முன்னேறியிருந்தது.

அதேபோன்றே, அண்மையில் நிறைவுற்ற இந்த பருவகால FA கிண்ணப் போட்டிகளில் பல அணிகளை வீழ்த்தி இறுதி 32 அணிகளைக் கொண்ட சுற்று வரை செரண்டிப் அணி முன்னேறியிருந்தது.

எனினும், எதிர்வரும் டிவிஷன் l தொடரில் சம்பியன் பட்டம் வென்று, இலங்கையின் முதல்தரத் தொடரான சம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கு கொள்ளும் நோக்குடன் உள்ளது செரண்டிப் அணி. இதற்கான ஒரு முயற்சியாகவே, இஸ்ஸடீன் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது நியமனம் குறித்து கருத்து தெரிவித்த செரண்டிப் கால்பந்துக் கழகத்தின் முகாமையாளர் மொஹமட் நௌசில், ”அடுத்த முறை சம்பியன்ஸ் லீக்கில் விளையாடும் இலக்குடனே நாம் உள்ளோம். அதற்கான ஒரு சிறந்த பயிற்றுவிப்பாளர் எமக்குத் தேவையாக இருந்தது. அந்த வகையில் இஸ்ஸடீனின் கடந்த கால பயிற்றுவிப்பு திறமைகளைப் பார்க்கும்பொழுது, அவரே எமது அணிக்கு சிறந்தவராக கருதப்பட்டார்.

இலங்கைக் கால்பந்தில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்ட இவர் எம்முடன் இணைவது, எமது இளம் வீரர்களுக்கு மிகப் பெரிய அனுபவத்தையும், அவர்களில் சிறந்த மாற்றங்களையும் பெற்றுக் கொடுக்கும். அதுவே அணியின் முன்னேற்றத்திற்கு சிறந்த பங்கு வகிக்கும். இவரது வருகையினால் எமது அணியில் பெரிய மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

இலங்கைக் கால்பந்தில் நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ள மொஹமட் இஸ்ஸடீன், தனது திறமையின்மூலம் பல சாதனைகளை படைத்தது மாத்திரமன்றி, இன்றும் தனக்கென ஒரு சிறப்பிடத்தையும் பதித்துள்ளார்.

முன்னணி கால்பந்து அணியான இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகத்தின் முன்கள வீரரான இவர், அணியின் சிரேஷ்ட வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். அதேபோன்றே, தனது அனுவம் மற்றும் திறமை என்பவற்றின்மூலம் அணியின் கோல் இயந்திரமாகவும் செயற்படுகின்றார்.

கடந்த வருட FA கிண்ணத் தொடரில் அதிக கோல்களைப் பெற்ற வீரராக கருதப்படும் இவர், அண்மையில் நிறைவுற்ற இந்த பருவகாலப் போட்டிகளிலும், மூன்று ஹட்ரிக் கோல்களுடன் அதிக கோல்களைப் பெற்ற வீரருக்கான தங்கப் பாதணியையும் பெற்றுக்கொண்டார்.

நன்றி ThePapare.com

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares