தெவனல விவகாரம் ஒரு நெத்தலி போன்ற விடயம் – ஞானசார தேரர்

‘தெவனகாலையை மீட்டெடுப்பதற்காக போராடும் அமைப்பு’ என்ற துவேச எண்ணத்தைக் கொண்ட சிலரால் உருவாக்கப்பட்ட அமைப்பின் பிரதானியான அல்பிடிய அக்மீமன புன்யசார தேரரின் அழைப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (2014-01-10) பி.ப. 2.00 மணியளவில் பொதுபல சேனா அமைப்பைச் சேர்ந்த சுமார் 14 பிக்குகளும் 100த் தாண்டாத எண்ணிக்கையுடைய சில பெரும்பான்பை இனத்தை சேர்ந்த சில சகோதரர்களும் வருகை தந்தனர்.

இவர்களின் வருகைக்காக பிரதேச பொதுமக்களை திரட்டும் நோக்குடன் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே மேற்குறிப்பிட்ட அமைப்பின் பிரதானியும், பொதுபல சேனா அமைப்பின் செயலாளரும் ஒன்றிணைந்து எடுக்கப்பட்ட புகைப்படம் அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் மாவனல்லைப் பிரதேசத்திலுள்ள பெரும்பான்மை மக்களின் கடைகள், வீடுகளுக்கு மாத்திரம் பகிர்ந்தளிக்கப்பட்டு குறித்த தினமான கடந்த வெள்ளிக்கிழமை (10) காலை 10.00 மணிக்கு வெள்ளை நிற உடை அணிந்து ஒன்று சேருமாறு வேண்டப்பட்டிருந்தனர். அத்தோடு அன்றைய தினம் மாவனல்லை நகரில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அரசு தரப்பிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதற்காக பெருந்தொகையான பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டிருந்ததோடு விசேட அதிரடிப்படையினரதும் இராணுவத்தினரதும் உதவி தேவைப்படும் பட்சத்தில் பெற்றுக்கொள்வதற்காக இரு விசேட வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் இப்பிரதேச முஸ்லிம் மக்கள் மிகவும் பயத்துடனும் கவலையுடனும் காட்சியளித்தனர்.

அத்தோடு இப்பிரதேச – குறிப்பாக தெவனகல பிரசேசத்தில் உள்ள மஸ்ஜிதுல் உமர் ஜூம்ஆ பள்ளிவாயலிலும், ஏனைய பகுதிகளிலும் ஜூம்ஆ தொழுகைக்கான நேரங்கள் குறைக்கப்பட்டு அநேகமாக அனைத்து கொத்பாக்களும் பாவ மன்னிப்பு, பிரார்த்தனையின் மகிமை போன்ற தலைப்புக்களில் இடம்பெற்றன.

காலை 10 மணிக்கு பொது பல சேனா அமைப்பினரது வருகையை எதிர்பார்த்து காத்திருந்த அக்மீமன புன்யசார தேரரருடனான ஒரு குழு குறித்த இடமான மாவனல்லை நகரில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே வந்து காத்திருந்து விட்டு திரும்பிச் சென்றனர். மீண்டும் சுமார் பி.ப. 1.30 மணியளவில் அங்கு வந்த இவர்கள் பொதுபல சேனா அமைப்பினர் இங்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்றும் நாம் இங்கு கூட்டமொன்றை நடாத்தப் போகின்றோம் என்று கூறி வருகை தந்தவர்கள் அமர்வதற்காக ஆசனங்களை ஏற்பாடு செய்ய முற்பட்டனர். அதற்கு பொலீசாரினால் மறுப்பும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சுமார் பி.ப. 2.00 மணியளவில் மாவனல்லை நகரை வந்தடைந்த பொதுபல சேனா அமைப்பினரை வரவேற்பதற்காக பெருந்தொகையான பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. எந்தவித மேடைகளும் இல்லாத நிலையில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் நின்றவாரே, ஒலிபருக்கிகள் ஏதும் பயன்படுத்தாது உரை நிகழ்த்தினர். இந்நிகழ்வுகை புகைப்படம், ஒளி, ஒலிப்பதிவுகள் செய்வதை அனுமதிக்கவில்லை.

உத்தியோகபூர்வமற்ற சில கருத்துக்களின் படி அங்கு வந்த தேரர்கள் தமக்கு தெவனல விவகாரம் ஒரு நெத்தலி போன்ற விடயம் என்றும் தற்போது அவர்களது இலக்கு ஹலால் மற்றும் நிகாப் விவகாரம் என்றும் கூறியதோடு மட்டுமல்லாது இந்நாட்டில் முஸ்லிம்களும் பெரும்பான்மை இனத்தவர்களும் அன்று போல் என்றும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவும் உரையாற்றினார் என்பது கேலிக்கையான கதையாக தென்படுகிறது.

அத்தோடு அக்மீமன புன்யசார தேரரினால் தெவனகலை குன்றைச் சுற்றி நிர்மானிக்கப்பட்டுள்ள 32 முஸ்லிம்களின் வீடுகளை அகற்றுவதற்கான மனு ஒன்றும் பொதுபல சேனா செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. (ஏனைய 42 பெரும்பான்மை இன சகோதரர்களின் வீடுகள் அவர் பார்வைக்கு படவில்லை போலும்)

சுமார் 20 நிமிடங்கள் வரை நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பிரதேச பொரும்பான்மை சமுகத்தைச் சேர்நத சகோதர்கள் கலந்து கொள்ளாத நிலையில் வருகை தந்தவர்கள் திருப்தியற்ற நிலையில் நாம் மஹியங்கனையை நோக்கி ஒரு பணி காரணமாக செல்வதாக கூறி புறப்பட்டனர்.

மேலும் மேற்குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பாக புகைப்படங்கள் மற்றும் ஒளிப்பதிவுகள் மேற்கொண்டதாக சந்தேகப்படுகின்ற மூன்று முஸ்லிம் சகோதரர்கள் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares