நோன்பும் உள-உடல் ஆரோக்கியமும்

நாம் நோய்வாய்ப்படும் போது உணவு உட்கொள்வதற்கான ஆசை அல்லது உட்கொள்ள வேண்டும் என்ற உணர்வு எமக்கு ஏற்படுவதில்லை. உதாரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் போது உணவு உட்கொள்ள முடியாமல் போவதை நாம் அனுபவித்திருக்கிறோம். வன விலங்குகள் கூட நோய்வாய்ப்படும் போது உணவு உட்கொள்ளாமல் நோன்பு இருப்பதாக விலங்கியல் ஆய்வாலர்கள் கூறுகின்றனர். மனிதர்களாகிய எமக்கும் இது இயல்பாகவே நிகழும் ஒரு தன்மையாகவே உள்ளது. சிறு குழந்தைகள், பிள்ளைகள் நோய்வாய்ப்பட்டு உண்ணாமல் இருக்கும் போது… ‘சாப்பிட்டு எத்தனை நாட்களோ தெரியாது?

சாப்பிடுவதுமில்லை, குடிப்பதுமில்லை’ இப்படி நாம் சொல்லவும் சொல்லக்கேட்டும் இருக்கிறோம். நாம் நோய்வாய்ப்படும் போது இயல்பாகவே எமது உடல் உணவு உட்கொள்வதை நிறுத்தி அதன் சக்தியைப்பயன்படுத்தி உடலை சுத்தமாக்கி குணப்படுத்திக்கொள்வதற்கு எமது உடல் விடுக்கும் ஒரு சமிக்ஞையாகவே இது உள்ளது.

“எம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மருத்துவர் இருக்கிறார். அதன் தொழில்பாட்டிக்கு நாம் கட்டாயம் உதவ வேண்டும். எம் ஒவ்வொருக்குள்ளேயுமுள்ள இயற்கையாகவே குணமடையத் தூண்டும் உந்து சக்தியே நாம் நலம்பெற உதவும் மிகப்பெரும் சக்தியாகும். எமது ஆகாரம் எமக்கு மருந்தாக இருக்க வேண்டும். எமது மருந்தே எமக்கு ஆகாரமாக இருக்க வேண்டும். நோயாக இருக்கும் போது உண்பது நோய்க்கு உணவூட்டுவதாகவே இருக்கும்.” என மருத்துவத்தின் தந்தை ஹிப்போக்ராடீஸ் கூறுகிறார்.

நோய் வாய்ப்படும் போது உடல் உண்ணாமல் நோன்பிருந்து தன்னைக்குணப்படுத்திக்கொள்ளும் இயற்கை முறை எவ்வளவு அற்புதமானது. இது இப்படியிருக்கும் போது ஒரு முறைக்கு ஏற்ப உணவு உட்கொள்வதைக் குறைத்து நோன்பு நோற்பது உடலையும் உள்ளத்தையும் எவ்வளவு ஆரோக்கியப்படுத்தும் என்பதை இலகுவாகப்புரிந்து கொள்ளலாம்.

“மனித வாழ்வில் நான்கில் ஒரு பகுதி அவர்கள் உண்ணும் உணவு. ஏனைய மூன்று பகுதிகளும் அவர்களுக்குள் வாழும் மருத்துவர்” என்று ஒரு இஜிப்திய பிரமிட் கல்வெட்டில் பொரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பண்டைக்கால அறிவு நவீன கால மக்களுக்கு எவ்வளவு பொருந்தும் என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும். நோன்பு நோற்று உணவைக்குறைத்து உடலையும் உள்ளத்தையும் பேணலாம் என பலங்கால மனிதர்கள் உறுதியாக நம்பினர். “நீங்கள் உண்பதுவே நீங்களாவீர்” என்று ஒரு மிகப்பழைய முதுமொழி உண்டு. இந்த அழகான தத்துவம் இன்றைய சமூகத்தில் வாழும் எங்களால் புறக்கனிக்கப்பட்டு விட்டதா என்று எண்ணுகிற அளவிற்கு எமது உணவுப்பழக்கம் மாறியுள்ளது. அதிகமான தீராத நோய்கள் ஏற்படுவதற்கு முறையற்ற உணவுப்பழக்கமே முக்கிய காரணம் என இன்றைய விஞ்ஞான ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

உடலையும் உள்ளத்தையும் பாதுகாக்க ஆசைப்படுகிறவர்கள் உணவு முறையையும் உணவுப்பழக்கத்தையும் மாற்றியமைக்க வேண்டும். அதற்கான ஒரு அழகான பயிற்சியைத்தரும், ஆண்மீகத்தாலும் விஞ்ஞானத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முறை நோன்பு நோற்பதாகும். நோன்பு நோற்பது உள உடல் ஆரோக்கியத்திற்கும் ஆண்மீக விருத்திக்குமான வழியும் பயிற்சியுமாகும் என புராதன நாகரீகங்கள் தொடக்கம் இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது. பழங்கால எகிப்தியர்கள், மொங்கோலியர்கள் மற்றும் சிரியர்கள் நோன்பு உடல் ஆரோக்கியத்தைக் காத்து இளமையைப் பேணி ஆயுலை நீடிக்க வைக்கிறது என நம்பினர். அளவிற்கு அதிகம் உண்பது அழகான வாழ்க்கைக்கு நோயைக்கொண்டு சேர்த்துவதாக உறுதியாக உணர்ந்து கொண்டனர். நோன்பு உள்ளத்திற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தையும் அழகையும் தரும் என நம்பினர்.

உடலின் நச்சை நீக்கி உள்ளத்தை சுத்தமாக்கி ஒரு முழுமையான இயற்கை வாழ்வினை அடைந்துகொள்ள பழங்கால மக்கள் நோன்பை பயன்படுத்தினர். கிரேக்க தத்துவ ஞானி பைதகரஸ் தனது தத்துவயியலை கற்பிக்க முன் நாற்பது நாற்கள் நோன்பு நோற்குமாறு தனது சிடர்களை வேண்டினார். மர்மமான வாழ்வின் ஆழமான அறிவினைப்புரிந்துகொள்ள நாற்பது நாட்கள் நோன்பின் பின்னர் தான் தனது சீடர்களின் உள்ளம் போதுமான அளவு தூய்மை அடையும், பக்குவப்படும் என நம்பினார்.

உலகில் மிகப்பெரிய மதங்களான இஸ்லாம், கிறிஸ்துவம், பௌத்தம், இந்து என்பன ‘நோன்பு தெய்வீகத்தன்மை கலந்த உடலையும் உள்ளத்தையும் ஆன்மாவையும் பரிசுத்தம் செய்யும் சக்தியைக்கொண்டது’ என குறிப்பிட்டுக்காட்டுகின்றன. உடலுக்குப் போன்று உள அமைதிக்கும் நோன்பு மிகப்பெரும் ஊண்டுகோலாக உள்ளது என இந்த மதங்கள் கூறுகின்றன.

நோன்பு உடலில் எல்லாப்பகுதிகளிலுமுள்ள கலங்களை சுத்தம் செய்கிறது. அவ்வாறே பயம்,பதகளிப்பு, கவலை, பதற்றம், மனஉழைச்சல், அழுப்புத்தன்மை போன்ற மனதிற்கு ஏற்படும் பல அசௌகரீகங்களை, கோளாருகளை அகற்றிவிடுவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. நச்சுப்பொருட்கள் மூளையிலிருந்து நீக்கப்படும் பொழுது பல காரணங்களினால் உருவான தாக்கங்களிலிருந்து மனம் விடுதலை பெறுகிறது. அதாவது மனம் அமைதியை ஆறுதலை அனுபவிக்க ஆரம்பிக்கிறது.

இன்று மனக்கோளறுகளால் பாதிக்கப்பட்ட பலர் அதிலிருந்து மீள பலவகை மருந்துகளை உபயோகித்து வருவதை காண்கிறோம். நோயின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப மருந்து பாவிக்க வேண்டிய தேவையிருந்தாலும் மருந்து மாத்திரைகள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதைவிட நோன்பு நோற்பதன் மூலம் மூளை முழுமையாக அமைதியடைவதாக கண்டறியப்பட்டுள்ளது. ருஸ்யாவில் கடந்த 50 ஆண்டுகளாக எண்ணம் செயல் ஆகியவை மாறுபட்டுச்செயற்படும் மனக்கோளாறான ‘முரண் மூளை’ ஸ்கிசோபிரேனியா நோயைக் குணப்படுத்துவதற்கான பயணுள்ள சிகிச்சையாக நோன்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பல்வேறுவிதமான மனத்தாக்கங்கள், கோளாறுகளால் பாதிக்கப்பட்ட 7000 நோயாளிகளுக்கு நோன்பு நோற்க வைத்ததன் மூலம் அவர்களின் நோயை குணப்படுத்த முடிந்தது என மொஸ்கோ மனநோயியல் நிறுவனத்தின் நோன்புப்பிரிவிற்கான பனிப்பாளர் வைத்தியர் யூரி நிகலோயேவ் குறிப்பிடுகிறார். 70 வீதமான முரண் மூளை நோயாளிகள் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு திரும்ப நோன்பு காரணமாக இருந்தது என அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

நோன்பு மனதைக் கூர்மையாக்கி மனதை ஒருமுகப்படுத்த துணைபுரிவதாக நோன்பு நோற்பவர்களும் அதுபற்றி ஆய்வு செய்தவர்களும் கூறுகின்றனர். நோன்பு நோற்பதன் மூலம் உடலிலுள்ள நச்சுக்கள் துப்பரவாகி மாசுகள் அகற்றப்பட்டு மூளைக்கு போதியளவு சுத்தமாக்கப்பட்ட இரத்தம் கிடைப்பதன் மூலம் மனம் தெளிவடைகிறது. சிந்தனை அழகடைகிது. உடலை மீண்டும் உட்சாகமூட்டி உள்ளத்தை அமைதியடையச்செய்வதற்கான மிகவும் பொருத்தமானதும் சரியானதுமான இயற்கைமுறை நோன்பு நோற்பதாகும் என்பதை மருத்துவ விஞ்ஞானத்தின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எமது உள்ளம் எப்பொழுதும் அங்கும் இங்கும் அழைபாய்ந்தவாரே இருக்கும். ஒரு இடத்தில் இருப்பதில்லை. சில சமயம் கோபப்படும். சில சமயம் கவலைப்படும். சில சமயம் வெறுப்புக்கொள்ளும், பொறாமைப்படும். அடிக்க, ஏச வேண்டும் என்று சொல்லும். அவசரப்படும், ஆவேசப்படும். இப்படி பல்வேறுவிதமான எதிர்மறையான மனஎழுச்சிகளை வெளிப்படுத்திய வன்னம் இருக்கும். இவை எம்மை ஆக்கிரமித்து அவற்றால் நாம் அடிமைப் படுத்தப்பட்டுவிடாமல் நாம் எம்மைக்காத்துக்கொள்ளவதற்கான ஒரு கேடயமாக நோன்பு இருப்பதுடன் எமக்குள் அமைதி, பனிவு, அடக்கம், சந்தோசம், உட்சாகம், ஆரோக்கியம் போன்ற அழகான மனஎழுச்சிகளை அனுபவிக்கத் துணைசெய்கிறது. உள்ளம் அமைதியடையும் போதுதான் உண்மையான விசுவாசமும் இறையச்சமும் ஏற்படுகிறது. அமைதி காணாத உள்ளத்தால் விமோசனமடையவோ வாழ்க்கையின் பொருளை அறியவோ முடியாது.

நவீன விஞ்ஞான மருத்துவக் கண்காணிப்பில் நோன்பு ஒரு இயற்கை மருத்துவக்குணமாக்கியாக கருதப்படுகிறது. போசணையுள்ள ஆகாரங்களை அலவாக உண்டு நோன்பு நோற்று எமது உடலும் உள்ளமும் இந்த அற்புதமான இயற்கை அருளுடன் சேர்ந்து குணம்பெற வழிவகுத்துக்கொள்வோம். ‘ஒரு பாதையை விட மிகச்சிறந்த இன்னொரு பாதை இருக்குமாயின் அது இயற்கையின் பாதையாகும்’ என அரிஸ்டோடில் சொல்லியிருப்பதிலிருந்து இயற்கை எவ்வளவு எம் உடலோடும் உள்ளத்தோடும் நெருக்கமானது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

உலகிலுள்ள 9-90வயது வரையிலான கிட்டத்தட்ட 500 மில்லியன் முஸ்லிம்கள் வருடத்தில் 1 மாதம் தொடர்ந்து நோன்பு நோற்கின்றனர். இதன் மூலம் இறையச்சம், மனஅமைதி, உடலாரோக்கியம், தெளிவான சிந்தனை, சமூக ஒற்றமை போன்றன கிடைக்கின்றன என அவர்கள் உருதியாக நம்புகின்றனர். பிழையான பார்வைகள், தேவையற்ற செவிமடுத்தல்கள், எதிர்மறையான எண்ணங்கள், செயற்பாடுகளில் இருந்து ஒருவர் தன்னைப்பாதுகாத்து நோன்பு இருக்கும் போது இந்த நம்பிக்கை ஒரு போதும் அவருக்கு பிழைத்துப்போவதில்லை.

புனித றமழான் மாத்தில் இந்த 500 மில்லியன் முஸ்லிம்களும் ஒரே நேரத்தில் நோன்பு பிடிப்பதும் ஒரே நேரத்தில் நோன்பு திறப்பதும் வேறு எந்த சமூகத்திலும் காண முடியாத அற்புதமான சந்தர்பப்ங்களாகவே கருத முடியும். நோன்பு நோற்கும் அதிகாலையும் நோன்பு திறக்கும் அந்தி மாலையும் அருளும் அமைதியும் நிறைந்த நேரமாகும். முஸ்லிமின் வாழ்விற்கு எழுச்சியையும் மனஅமைதியையும் தருவதற்கு இந்த இரண்டு நேரங்களும் காத்திருக்கின்றன என்பது அவனது விசுவாசமும் உண்மையுமாகும்.

நோன்பு நோற்க அதிகாலையில் எழும் போது…… முகத்தில் நிறைவான புன்னகையுடன் எழும்பி, “இன்றைய நாள் ஒரு புதிய நாள், நல்ல வாய்ப்புகளும் அருள்வளமும் எனக்காகக் காத்திருக்கின்றன. அவற்றை வரவேற்பதற்காக எனது இதயத்தைத் திறந்துகொள்கிறேன்”.

இன்றைய நாளில் எனக்கு அற்புதமான அழகான ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டு “உலகம் எனக்கு நல்லருளை அள்ளித்தர தயாராக இருக்கிறது. என் வாழ்வு சந்தோசமடையவும் சந்தோசத்தை உலகிற்கு பரப்பவும் என்னைத் தயார் படுத்திக்கொள்கிறேன்”.

இப்படி நன்மையும் நலவும் நடக்கும் என்ற நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளும் நோன்பு நோற்க ஆரம்பித்தால் ஒரு மாத்தின் பின் மனம் எவ்வளவு நம்பிக்கையும் வலிமையும் அமைதியும் அடையும் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares