பதுரியாவின் கட்ட நிர்மாணப்பணிகளுக்கு, தனாகமை “குவைட் மமா” வின் பங்களிப்பு

“கல்விக்கு உயிர் கொடுத்தோன் மரணிப்பதில்லை” மாவனல்லை பதுரியாவின் கட்ட நிர்மாணப்பணிகளுக்கு  மாவனல்லை தனாகமை “குவைட் மமா” வின் பங்களிப்பு.

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் பௌதிக வளத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக பதுரிய அபிவிருத்தி நிதியத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்டு வந்த 92 வகுப்பறைகளைக் கொண்ட “ப” வடிவிலான 3 மாடிக் கட்டிடத்தின் ஒரு தொகுதியினை முற்றாக நிர்மாணிப்பதற்காக பிரபல சமுக சேவையாளரும் கொடை வள்ளலுமான மாவனல்லை தனாகமையைச் சேர்ந்த “குவைட் மமா” என அழைக்கப்படும் ஹாஜியானி K.M நபீஸா உம்மா அவர்கள் முன்வந்துள்ளார்கள்.
கடந்த 04.12.2016 ஞாயிற்றுக் கிழமை மாவனல்லை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பதுரியா மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு அதிதியாக கலந்த கொண்ட ஹாஜியான K.M நபீஸா உம்மா அவர்கள் பலத்த கரகோசங்களுக்கும் மாணவர்களினதும் பெற்றோர்களினதும் பூரிப்புக்கும் மத்தியில் இந்த நற்செய்தியை அறிவித்தார்.

அத்தோடு பிரபல சட்டத்தரணியும் கட்டார் நாட்டின் முன்னால் தூதுவருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம் யூசுப் அவர்கள் மேற்படி பரிசளிப்பு விழாவில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது தனது சொந்த நிதியான சுமார் 50 இலட்சம் ரூபாய்கள் மூலம் வறிய மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அறிவித்தார். இவர் கடந்த பல வருடங்களாக மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் அபிவிருத்திப பணிகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடராக 12 வருடங்களாக நடைபெற்று வரும் பதுரியாவின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பாடசாலைக்கு பெருமை தேடித்தந்த கல்வி விளையாட்டு இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்றார்கள். அந்த வகையில் 5 ஆம் தரப் புலமைப்பிரிசில் பரீட்சையில் சபகரகமுவ மாகாணத்தில் அதிக எண்ணிக்கையில் சித்தியடைந்த பதுரியாவின் 42 மாணவர்களும் 192 புள்ளிகள் பெற்று சபரகமுவ மாகாணத்தில் முதல் வந்த மாணவி அஸ்கா உற்பட சுமார் 550 மாணவமாணவிகளும் 1104 சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

சுமார் 2900 மாணவர்கள் கல்வி கற்கும் மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் கல்வித்தரம் காரணமாக இன்று இலங்கை யின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இப்பாடசாலையை நாடி வருகின்றார்கள். உயர்தர கலை வர்த்தக விஞ்ஞானப்பிரிவுகளிலும் ஏனைய வகுப்புக்களிலும் கல்வி கற்பதற்காக மாவனல்லையைச் சூழவுள்ள பிரதேசங்களான தனாகமை மகவத்தை நயாவலை நான்கூறுகமை போன்ற இடங்களிலிருந்தும் மாணவர்கள் பதுரியாவையே நாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர மாவனல்லைக்கு வெளியேயுள்ள பிரதேசங்களான ஹெம்மாதகமை திப்பிடிய தல்கஸ்பிடிய உயன்வத்தை கனேதன்னை தெல்கககொட கேகாலை றம்புக்கனை பத்தாம்பிடிய கடுகன்னாவை கண்ணத்தோட்டை கொடியாகுபுர போன்ற பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மாணவர்கள் தங்கள் கல்வித்தாகம் தீர்க்க இப்பாடசாலையையே நாடுகின்றனர். தூரப் பிரதேசங்களான அநுராதபுரம் காலி பலாங்கொடை இரத்தினபுரி எகலியகொடை போன்ற பிரதேச மாணவர்களும் இப்பாடசாலையில் கல்வி கற்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது மாவனல்லை மொத்த மாணவர் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் வெளிப்பிதேச மாணவர்களாவர். இப்பாடசாலையின் கல்வித்தரம் காரணமாக நாளுக்கு நாள் அதிகரிக்கும் மாணவர் தொகைக்கேற்ப பௌதிக வள வசதிகள் இல்லாத நிலைமையில் பதுரியா அபிவிருத்தி நிதியம் இப்பாடசாலைக்குத் தேவையான அனைத்து வளங்களையும் பெற்றுக் கொள்வதற்காக முழு மூச்சாகப் பாடுபட்டு வருகின்றது.

இந்த அடிப்படையில் அதன் முதற்கட்டமாக 92 வகுப்பறைகள் கொண்ட “ப” வடிவிலான கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான பணிகளை அது 2014 ஆம் ஆண்டு ஆரம்பித்தது. 15 வகுப்பறைகள் கொண்ட ஒரு தொகுதியை அதன் அங்கத்தவர்கள் மூவரின் நிதியுதவியில் சுமார் 23 மில்லியன் ரூபாய்கள் செலவில் நிர்மாணித்து 2015 ஜனவரி 23 ஆம் திகதி பாடசாலைக்கு வழங்கியது.

இதன் இன்னொரு தொகுதி பொதுமக்களின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்தக் கட்டிடத்தின் மூன்றாவது தொகுதியை நிர்மாணித்துத் தருவதற்கு ஹாஜியான K.M நபீஸா உம்மா அவர்கள் முன்வந்திருப்பது இப்பாடசாலையின் அபிவிருத்தியில் ஒரு மைல் கல்லாகும்.
ஹாஜியான K.M நபீஸா உம்மா அவர்கள் இப்பாடசாலையின் பௌதிக வள அபிவிருத்தியில் ஆற்றும் இப்பங்கானது எமது பிரதேச மாணவர்கள் மட்டுமல்ல இலங்கை வாழ் தமிழ் பேசும் ஏழை மாணவர்களின் கற்றல் முயற்சிகளுக்கு அவர் ஆற்றும் பெரும் சேவையாகும்.

அல்லாஹ் தஆலா அவர்களது அனைத்து பணிகளையும் பொருந்திக் கொள்வானாக. அவர்களது தொழில் முயற்சிகளில் பரக்கத்தினை வழங்குவானாக. அவர்களது ஆயுளை அதிகரிப்பானாக. அவரது மறைந்த பெற்றோரிற்கு அவர் புரியம் நல்ல பணிகளின் நன்மையை வழங்குவானாக. தொடர்ந்தும் இது போன்ற சமுகப் பணிகளில் அவர் பங்கெடுப்பதற்கான வசதிகளையும் வாய்ப்புக்களையும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்குவானாக.

M.H.M Rifan
School Development Committee

1d97739e-febe-468f-adc1-d8b36b73d748 39e85172-1e55-4cf1-98f0-d91efd394fdf b0cf1fc5-fb5f-4640-accc-cd6b9e6af61f f556f646-3ca1-42d2-9021-3e7aa3b451a8

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *