புதிய தலைமையை வேண்டி நிற்கும் ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமி

சிறு வயதில் இருந்தே நான் ஜமாத்தே இஸ்லாமியுடன் பின்னிப் பிணைந்து விட மூல கர்த்தாவாக இருந்த, ஜமாத்தே இஸ்லாமியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான காலம் சென்ற எனது மாமா, எம். எல். முஸ்தபா அவர்கள் ஓரிரு தடவைகள் கிலாகித்துச் சொன்ன ஒரு சம்பவம், அதை நான் என் கண்ணால் கண்டிருக்கவிட்டாலும், இப்பொழுதும் கூட அது என் மனத்திரையில் கற்பனையில் உருவான ஒரு படமாக ஓடும்.

இலங்கையில் ஜமாத்தே இஸ்லாமியை ஆரம்பித்தவர் ஜெய்லானி சாஹிப் அவர்களாவார். இவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர், ஆதலால் அவரது ரூமும், ஜமாத்தின் தலைமைக் காரியாலையமும் ஒன்றுதான்.

ஒரு நாள் திடீர் என ஜெய்லானி சாஹிப் அவர்களிடம் இருந்து ஆரம்பகால அங்கத்தவர்களுக்கு தந்தி (Telegram) வருகின்றது, “இன்று இரவு 12 மணிக்கு எனது காரியாலயத்திட்கு வரவும்” என்று அதில் இருக்கின்றது. இவர்களும் என்னமோ, ஏதோ என்ற பதற்றத்துடன் 10.30 மணிக்கு முன்னரே அங்கு ஆஜராகி விட்டனர். அமீரின் ரூமும், அலுவலகமும் ஒருங்கே அமைந்த அந்த மேல்மாடி அறை பலகையால் அமைக்கப் பட்டது.

எல்லோரும் வந்து பார்க்கின்றார்கள், அமீரின் அறையில் ஒரு வெளிச்சமும் இல்லை, அவர் உள்ளே இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இவர்கள் அனைவரும் எதிர்பார்ப்பும், பதற்றமும் கலந்த நிலையில் கீழே நின்றுகொண்டு இருக்கின்றார்கள். நேரம் போய்க் கொண்டு இருக்கின்றது, மேலும் சில அங்கத்தவர்களும் வந்து சேர்கின்றார்கள், ஆனால் அமீரைக் காணவில்லை, அறையிலும் ஊசலாட்டம் இல்லை.

என்ன எது என்று யாருக்கும் எதுவும் புரியவில்லை. நேரம் வேறு நள்ளிரவை நெருங்குகின்றது. அப்பொழுதுதான் அமீரின் ரூமில் கடிகார அலாரம் ஒலிக்கும் சத்தம் கேட்கின்றது. அத்துடன் அது நிறுத்தப் படுகின்றது, விளக்கு ஒளிர்கின்றது, அமீர் ஜெய்லானி சாஹிப் எழுந்து வந்து ஜன்னலை திறந்து “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்” என்று மேலேயிருந்தே சொல்லிவிட்டு, எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே, “வீட்டுக்கு போங்கள்” என்று சொல்லிவிட்டு, அதே வேகத்தில் ஜன்னலை மூடி விளக்கை அணைத்துவிடுகின்றார்.

பல நூறு மைல்கள் பயணித்து வந்தவர்களும் திரும்பி சென்றுவிடுகின்றனர். அடுத்த கூட்டத்தில் அன்றைய அமீர் ஜெய்லானி சாஹிப் சொல்லுகிறார், “ஒரு அவசர அழைப்பிற்கு பதிலளித்து, உங்களில் எத்தனை பேர் வருவீர்கள் என்பதனை பார்க்கவே அப்படி செய்தேன், அல்ஹம்துலில்லாஹ், திருப்தி”.

இது எனது மாமனார் எனக்குச் சொன்ன சம்பவம். அவசரத்திற்கு வருவதற்கு எத்தனை பேர் தயார் என்பதனை அன்றைய அமீர் பரிசோதித்துப் பார்த்தார், ஆனால் அதனை செயல்படுத்துவதற்கான தேவையை அல்லாஹ் அவரது காலத்தில் ஏற்படுத்தவில்லை.

ஆனால் இன்று, தந்திக்குப் பதில் SMS வந்துவிட்டது, அவசரமான, இக்கட்டான நேரத்தில் ஓடிவர பல்லாயிரக்கணக்கான அங்கத்தவர்கள் இருக்கின்றார்கள், ஆனால் ஜமாத்தே இஸ்லாமியின் தலைமை என்ன செய்கின்றது என்ற கேள்வி எழும்புகின்றது.

கிராண்ட்பாஸ் பகுதியில் பள்ளிவாசல் தாக்கப்பட்ட பொழுது ஜமாத்தின் செயல்பாடுகள் என்ன, அதே போன்று பிறை விடயத்தில் சமூகம் குழம்பிப் போன பொழுது தலைமையின் வழிகாட்டல் என்ன?

சமூகம் தீர்வைத் தேடி நிற்கும் வேளையில் கைத்தொலைபேசியை அனைத்து விட்டு தூங்கி விட்டேன் என்று தலைவரே வெளிப்படையாக சொல்லுகின்ற நிலை, அவரது மனநிலையை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றது.

கிராண்ட்பாசில் பள்ளிவாசல் தாக்கப் பட்ட பொழுது, கால்நடைத் தூரத்தில் இருக்கும் ஜமாத்தே இஸ்லாமியின் தலைமையகத்தில் இருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி எழுகின்றது.

இக்கட்டான சந்தர்ப்பங்களில் முன்னின்று வழிகாட்டலை வழங்காமல், இரண்டு மூன்று நாட்கள் கழித்து 24 A 4 பக்கங்களை வீணடித்து கட்டுரை எழுதி அறிக்கை விடும் வேலையை செய்வதற்கு தலைமைகள் தேவையில்லை, வெறும் பத்திரிக்கை எழுத்தாளர்கள் போதும்.

தாத்தரிய படைகள் பாரசீகத்தை முற்றுகையிட்ட பொழுது, அங்கே இருந்த முஸ்லிம் தலைவர்கள் தங்கள் அரண்மனைகளில் “ஒரு ஊசியிலே எத்தனை மலக்குகள் உட்காரலாம்” என்று ஆய்வு செய்துகொண்டு இருந்தார்களாம் என்று ஜமாத்தே இஸ்லாமியின் பயிற்ச்சி வகுப்புகளில், யாருக்கோ கிண்டல் அடிக்க சொல்லபப்ட்ட உதாரணம், இப்பொழுது ஞாபகத்தில் வருகின்றது.

வகுப்புகளில் கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட, இலங்கையில் 10 வருட வரலாறு கூட இல்லாத SLTJ யின் தலைவர் முதல், தொண்டர் வரை கிராண்ட்பாஸ் பள்ளிவாசலைப் பாதுகாக்க நள்ளிரவில் களத்தில் நிற்கின்றார்கள், ஆனால் 60 வருடங்களுக்கும் அதிகமான வரலாற்றைக் கொண்ட கட்டுக்கோப்பான இயக்கத்தின் தலைமை, கைத்தொலைபேசியை அணைத்துவிட்டு, A4 தாள்களைத் தேடிக்கொண்டிருக்கின்றது என்னும் பொழுது, வெட்கமாகவும், அவமானமாகவும் இருக்கின்றது.

ஜமாத்தே இஸ்லாமி மிகவுமே கட்டுக்கோப்பான, இறுக்கமான கட்டுப்பாடுகளை உடைய இயக்கம். ஆகவே, இயக்கம் தொடர்பில் உள்ளத்தில் புதைந்து கிடக்கும் பல விடயங்கள், ஆதங்கங்கள் என்பன பல சந்தர்ப்பங்களில் பேசப்படாமலும், வெளிப்படுத்தப் படாமலும், உள்ளங்களுக்குள்ளேயே புதைந்து போய்விடுகின்றன.

கட்டார் இஸ்லாமிய சென்டரில் கூடும் சில சகோதரர்களுடன் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில், மறைமுகமாக அவர்கள் வெளிப்படுத்திய எண்ண ஓட்டங்கள், என்னுடைய எண்ண ஓட்டங்களை ஒத்து நின்றன. இலங்கையில் உள்ள சில நண்பர்களை தொடர்பு கொண்ட பொழுது, அதிருப்தி எதிரொலித்தது. ஆகவே, தூக்கத்தைத் தள்ளிப்போட்டு விட்டு இதனை இழுதி முடிப்பது என்று தீர்மானித்து விட்டேன்.

இது உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களுக்கு எதிராக எழுதப் பட்டது என்று தப்பு வியாக்கியானம் வழங்க விசமிகள் முயலலாம். ஏனெனில் எதற்குமே திரிபு விளக்கம் வழங்க ஒரு கூட்டம் எப்பொழுதுமே இருக்கும். அவர்களைப் பற்றி கவலையில்லை.

ஜமாத்தே இஸ்லாமி எனும் மாபெரும் இயக்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்காகக் கொண்டு இது எழுதப் படுகின்றது என்னும் உண்மை, ஜமாத்தின் கடந்த கால வரலாற்றுடன் பரீட்சயமான நல்லவர்களுக்கு நன்கு புரியும்.

ஏனெனில், ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் தலைமைத்துவம் என்பது ஆயுட் காலப் பதவியுமல்ல, இதவரை அப்படி யாரும் இருந்ததுமில்லை. ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் ஸ்தாபகர் ஜெய்லானி சாஹிப் முதற்கொண்டு, அவரைத் தொடர்ந்து வந்த அமீர்களான, தாஸிம் அஸ்ஹரி, செய்யத் அஹமத், யூஸுப் ஸாஹிப், மெளலவி U.L.M. இப்ராஹிம் ஆகிய அனைத்து தலைவர்களும், தம்மால் முடிந்த உச்சகட்ட பணிகளை செய்து, அடுத்த கட்டத்திற்கு ஜமாத்தை முன்னெடுத்துச் செல்ல, அப்பொழுது தம்மை விடப் பொருத்தமாக இருந்தவர்களிடம் தலைமையைக் கையளித்தனர் என்பதே வரலாற்று உண்மை ஆகும்.

இதற்கு சான்றாக, முன்னால் அமீர் யூஸுப் ஸாஹிப் அவர்கள் இன்று வரை ஜமாத்தே இஸ்லாமியின் துடிப்பான அங்கத்தவராக செயற்படுவதுடன் “இஸ்லாமிக் புக் ஹவுஸின்” பிரதம நிர்வாகியாகவும் கடமைகளை மேற்கொண்டு ஜமாத்திற்காக அயராது உழைக்கின்றார். அதே போன்று மற்றொரு முன்னாள் அமீரான மெளலவி U.L.M. இப்ராஹிம் அவர்கள் செரண்டிப் கல்வி நிறுவனம், ஆயிஷா சித்தீக்கா பெண்கள் கலாசாலை ஆகியவற்றை முன்னெடுத்து ஜமாத்திற்கு தனது தொடரான பங்களிப்பை வழங்கி வருகின்றார்.

அமீர் பதவி என்பது, தனக்கு முடிந்ததை தன்னுடைய காலப்பகுதியில் செவ்வனே செய்துவிட்டு, அடுத்த கட்டத்திற்குப் பொருத்தமானவரிடம் அதனைக் கையளித்துவிட்டு, தான் தொடர்ந்தும் தனது பணியை ஜமாத்திட்காக செய்வது என்பதே ஜமாத்தின் வரைவிலக்கணம் ஆகும். அரசியலில் போன்று, 85 வயதில், கையெழுத்துப் போடவும் கை நடுங்க நடுங்க நாற்காலியில் ஒட்டிக் கொண்டு இருக்கும் அமீர் வரலாறு ஜமாத்திற்கு அந்நியமானது.

தற்பொழுதைய அமீர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் தலைமையின் கீழ் ஜமாத் பாரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. பல ஊர்களில் பலம் பொருந்திய முஸ்லிம் பெரும்பான்மை அமைப்பாக பரிணமித்துள்ளது. ஜமாத்தே இஸ்லாமி என்றால் என்னவென்றே தெரிந்திருக்காத பல முஸ்லிம் ஊர்களில் இன்று ஜமாத் முடிவுகளை தீர்மானிக்கும் திறன் படைத்த சக்தியாக காணப்படுகின்றது. இவை அனைத்துக்கும் காரணம் அமீர் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் வழிகாட்டுதலே ஆகும்.

எனினும் இங்கே ஒரு விடயத்தை நாம் மறந்து விட லாகாது. அதாவது, போசித்து வளர்க்கப்படும் ஒரு மரம் வெறுமனே பெரிதாக வளர்ந்து நிழல் கொடுப்பதும், குருவிகள், பறவைகள் கூடுகட்டி வாழ இடம் கொடுப்பதும் மட்டுமே மரத்தை வளர்ப்பதன் நோக்கமல்ல. மரத்தில் காய்களும், கனிகளும் வெளியாக வேண்டும். அப்படி இல்லாமல் போனால், மரம் வெட்டிக் கிழிக்கப் பட்டு, பலகையாக, விறகாக பயன்படுத்தப்படும் நிர்ப்பந்தமான நிலைதான் உருவாகும்.

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள், தனக்கு முன்னிருந்த தலைவர்களின் வழிமுறையைப் பின்பற்றி, அடுத்த தலைமையிடம் ஜமாத்தை கையளிப்பதற்கான காலம் கனிந்திருப்பது வெள்ளிடை மலையாக தெரிகின்றது.

50 வயதை நெருங்கியும் கூட, 20 வயது இளைஞரின் துடிப்பும், கம்பீரமும், சுறுசுறுப்பும், விவேகமும் கொண்டு செயலாற்றும் அஷ்ஷெய்க் மின்ஹாஜ் இஸ்லாஹி அவர்கள், ஜமாத்தை அடுத்த கட்டத்தை நோக்கி வழிநடாத்திச் செல்ல பொருத்தமான அமீராக என் கண்களுக்கு கம்பீரமாகத் தெரிகின்றார். ஒருவர், அவரது உச்ச நிலையில் இருக்கும் பொழுது அவரின் திறமைகள் பயன்படுத்தப்படல் வேண்டும்.

ஜமாத்தே இஸ்லாமி மட்டுமல்ல, மொத்த இலங்கை முஸ்லிம் சமூகமும் வேண்டி நிற்கும் ஒரு சிறந்த தலைவராக பரிணமிப்பதற்கான அனைத்து தகுதிகளும் கொண்ட ஒருவராக அஷ்ஷெய்க் மின்ஹாஜ் இஸ்லாஹி அவர்கள் மிளிர்கின்றார்கள்.

தன்னலம் பாராது, ஜமாத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து இரவு பகல் பாராது அயராது உழைக்கும் அமீர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் யதார்த்தத்தை உணர்ந்து, தானே முன்வந்து, முன்னின்று அடுத்த தலைமைக்கான நகர்வை ஆரம்பித்து வைக்க அல்லாஹ் அவருக்கு அருள் புரிய வேண்டும் எனப் பிரார்த்தித்து, ஜமாத்தின் பிரகாசமான எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளுடன் விடை பெறுகின்றேன்.

கத்தரிளிருந்து
நூருல் ஹக் (கொழும்பு)

 

மேற்படி விடயம் தொடர்பில் ஜமாத்தே இஸ்லாமி  விளக்கமளித்தால், அதனை பிரசுரிக்க நாம் தயாராகவே உள்ளோம். ireport@mawanellanews.com

You may also like...

2 Responses

 1. MohamedS says:

  Good article bro… But it’s a soorah dicision ont one man show of Ameer – Hajjul Akbar. It’s not exceptable such comments & suggestions as your own. If you thinking of making any confusion among members my kind advice to beware of Allah making fithnah… massalaam!

  • Esteam says:

   ஜமாத்தே இஸ்லாமியின் தலைமைப் பொறுப்பில் இருந்து ஹஜ்ஜுல் அக்பர் நீக்கப்பட்டால், அதனால் நஷ்டமடையப் போவது தவ்ஹீத் ஜமாஅத் மற்றும்ம் ஏனைய இயக்கங்களாகும்.

   ஹஜ்ஜுல் அக்பர் அமீராக இருக்கும் வரை, ஜமாத்தே இஸ்லாமி உருப்படாது, ஆனால் மற்ற இயக்கங்கள் உருபப்டியாக செயல்ல்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *