பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் சம்பந்தமாக அரசாங்கம் இதுவவரை எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நேற்றைய முன்தினம் (09) நடந்த சம்பவம் தொடர்பில் கொழும்பில் நேற்று (10) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுபல சேனா அமைப்பு நேற்று நடந்து கொண்ட அராஜகமான நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் இதுவவரை வாய்த்திறக்கவில்லை. ஜாதிக பல சேனா அமைப்பு நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு புகுந்த பொதுபல சேனா அமைப்பினர் அதனை குழப்பினர். இந்த சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்கவேண்டும்.
இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் இரத்தம் சிந்தும் சூழ்நிலைகளை உருவாக்கும். பயங்கரவாதத்தில் இருந்து விடுதலை செய்த நாட்டிற்குள் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கம் வளர்ந்து வரும் நிலையில், மீண்டும் இனவாதத்திற்கு பாதை அமைக்கும் இப்படியான சம்பவங்களை அனுமதிக்க முடியாது.
பொதுபல சேனா இதற்கு முன்னர் பல முறை இவ்வாறு நடந்து கொண்டது. மேற்படி சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் செயற்படும் விதத்தை வன்மையாக கண்டிக்கிறோம். பாராளுமன்றத்தை பகிஷ்கரிக்க போவதாக முஸ்லிம் அமைச்சர்கள் கூறுகின்றனர். என்றோ ஒரு நாள் பாராளுமன்றத்திற்கு வரும் இந்த அமைச்சர்கள், புதிதாக பாராளுமன்றத்தை பகிஷ்கரிக்க வேண்டியதில்லை.
முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கத்தின் சிறப்புரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண முயற்சிப்பதில்லை. தீர்வை காண முயற்சிக்காத முஸ்லிம் அமைச்சர்கள், பிரச்சினையை வைத்து அரசியல் செய்ய முயன்று வருகின்றனர் எனவும் கபீர் ஹசீம் குற்றம் சுமத்தியுள்ளார்.