மன நலம் என்றால் என்ன?

1. மன நலம் என்றால் என்ன?

சமூகத்தில் வாழும் ஒருவர் தனது பலங்களையும் பலவீனங்களையும் இனங்கண்டு வாழ்க்கையில் வரக்கூடிய அனைத்து இன்ப துன்பங்களையும் அறிந்து தனக்கும் தன்னைச்சார்ந்திருப்பவர்களுக்கும் எவ்விதத்திலும் பாதிப்புக்கள் ஏற்படாதவாறு தனது வாழ்க்கைக்கான முடிவுகளை தானே பெற்று முழுமையான மன ஆரோக்கியத்துடன் வாழ்வதே மனநலமாகும். ஒருவனுடைய நல்வாழ்விற்கான அத்திவாரமாகக்கருதப்படுவதே மன நலமாகும். அவனது வீடும் நாடும் பயன்மிக்கதாக செயற்படுவதற்கும் அதுவே வழிவகுக்கிறது. ஒருவனது உடல், உள்ளம், சமூகம், சூழல், ஆன்மீகம் போன்ற அனைத்திலும் சமநிலை பேண உதவுவதும் மனநலமேயாகும்.

11998974_1682541628644829_1533883993230293479_n
2. மனநலம் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்கள்

மனநலப்பாதிப்பு ஒருவருக்கு வயது வித்தியாசமின்றி எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்படலாம்.
சிறு வயதிலிருந்து வயோதிபம் வரைக்குமுள்ள ஒவ்வொரு பருவங்களிலும் ஒருவன் உளப்பாதிப்பிற்கு உற்படுவான்.
உதாரணமாக,
• சிறு வயதில் பெற்றோரின் அன்பு அரவணைப்பு கிடைக்காமை
• வீட்டில் ஏற்படும் சண்டை சச்சரவுகள்
• அளவுக்கு அதிகமாக வற்புறுத்துதல்
• தனக்கு வேறுபாடு காட்டுதல் என்ற உணர்வு
• தொடர்ந்து உடல் நோய்களுக்கு உட்படுதல்
• உடற் குறைபாடுகள்
• வீட்டிலும் மற்றவர்களாலும் விமர்சிக்கப்படுதல்
• கணவனால் மனைவிற்கும் மனைவியால் கணவனுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள்
• பொருளாதாரப்பிரச்சினைகள்
• சூழல் மாற்றம்
• பிரிவு
• விவாகரத்து
• மாணவர்களாயின் பாடசாலையில் நண்பர்களால் ஏற்படும் பிரச்சினைகள்
• படிக்க முடியாமை அல்லது படிப்பு வராமை
• சரியான தொழிலை தெரிவு செய்யாமை
• புகைப்பிடித்தல், போதைப்பொருள் பாவனை
• திருமணம் தாமதமாதல்
• பொருந்தாத திருமணங்கள்
• திருமணம் செய்ய வசதியின்மை
• குழந்தையின்மை
• பெற்றோரை குழந்தைகள் மதிக்காமை, கவனிக்காமை
போன்ற மேலும் பல காரணங்களினால் ஒருவரது மனநலம் பாதிக்கப்படலாம்
3. மேற்குறிப்பிட்ட காரணங்களினால் ஒருவரது மன நலம் பாதிக்கப்பட்டால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும்?

ஒருவர் இங்கு குறிப்பிட்ட ஒரு பிரச்சினையாலோ அல்லது பலவற்றாலோ தொடர்ந்து பாதிக்கப்பட்டு அவருக்கு முறையான தீர்வு கிடைக்காவிட்டால் அவர் அதைப்பற்றி பலவிடுத்தம் யோசிக்க ஆரம்பித்து பிரச்சினைகள் அதிகமாகி உள ரீதியான தாக்கங்களால் அவதிப்படவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்.
மனஉழைச்சல், மனச்சோர்வு, மன அழுத்தம், தேவையற்ற முன்கோபம், பதற்றம், உரக்கமின்மை, பயம், தெளிவற்ற எண்ணம், தான் பெருமதியில்லை என்ற உணர்வு, தற்கொலை எண்ணம், தெளிவற்ற பேச்சு, நடத்தை போன்ற உளத்தாக்கங்கள் ஏற்படலாம்.

4. மனத்தாக்கத்திற்கு உற்பட்ட ஒருவரின் சிந்தனை எவ்வாறு வெளிவரும்?

மனநலப்பாதிப்பிற்கு உட்டபட்ட ஒருவரது சிந்தனையில் நேர் எதிரான எண்ணங்களே அதிகமாக ஏற்பட வாய்ப்புண்டு
உதாரணமாக,
• கதறி அழ வேண்டும் என்ற எண்ணம்
• ஏன் பிறந்தேன் என்ற எண்ணம்
• என்னை புரிந்து கொள்ள இந்த உலகத்தில் யாருமே இல்லை என்ற எண்ணம்
• குழந்தைகளுக்காவதாவது வாழ்வோம் என்ற எண்ணம்
• எங்காவது போய்விட்டால் நல்லம் என்ற எண்ணம்
• தனியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்
• இறந்து விடுவது நல்லது என்ற எண்ணம்
• தனிமைப்பட்டு விடுவேனோ என்ற எண்ணம்
• யாரும் என்னைப் புரிந்து கொள்வதில்லை எனும் மனநிலை
• என் பிரச்சினைக்கு தீர்வேயில்லையா? என்ற எண்ணம்
போன்ற எண்ணங்களில் ஒன்றோ பலவோ அவர்களின் சிந்தனையில் சுழன்று கொண்டிருக்கலாம்
5. இன்று பலர் மனஇருக்கம் அல்லது மனஅழுத்தம் (tention or stress) என்ற வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்துவதைக் கேள்விப்படுகிறோம். இந்ந மன அழுத்தத்தை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ளலாம் அதன் அறிகுறிகள் என்ன?

மருத்துவ ஆய்வுகளின் படி இன்று நால்வரில் ஒருவருக்கு மன நலம் தொடர்பான பிரச்சினைகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவை பெரிய பிரச்சினைகளாக அல்லது சிறிய பிரச்சினைகளாக இருக்கலாம். ஆனால் தனக்கு மனநலம் தொடர்பான ஒரு பிரச்சினை இருப்பதாக தெரிந்து கொண்டாலும் அதற்கு தேவையான பரிகாரம் காணாமல் அல்லது அதை இன்னுமொருவரிடம் சொல்லாமல் மனதிற்குள்ளே பூட்டிவைத்துக்கொண்டு அவதிப்படுபவர்கள் ஏறாளமாக உள்ளனர். காலம் போகப்போக அது சில சமயம் உடல் உபாதைகளாக வெளிவரும் போது அதற்கு மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியர்களை நாடிச்செல்லவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்படுகிறார்கள்.
அதில் மன அழுத்தம் என்பது அதிகளவில் காணப்படும் ஒரு மனத்தாக்கம் ஆகும்.

6. மன அழுத்தம் காரணமாக உடல் நோய்கள் அல்லது உடல் உபாதைகள் ஏற்படலாமா?

மன அழுத்தம் உள, உடல் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். உயர் இரத்த அழுத்தம் ஏற்படுதல், இதய இரத்த நாள அடைப்பு ஏற்படுதல், வயிற்றுவலி அல்லது வயிற்றுப்புண்கள் ஏற்படுதல், தசை விரைப்பு, தாடைப் புண்கள், தலைவலி, இதயத்துடிப்பு அதிகரித்தல் போன்ற உடல் நோய்களைப்போன்று திருப்தியில்லாத மனநிலை, ஞாபகசக்தி குறைதல், கவலை, தவிப்புடன் இருத்தல், எளிதில் கோபமடைதல் போன்ற மனத்தாக்கங்களும் ஏற்படுவதாக குறிப்பிடுகிறார்கள். இவற்றுடன் எதிர்பார்ப்பற்ற தன்மை, உற்சாகமின்மை, வேலைகள் மீது மனதை ஈடுபடுத்த முடியாமை, ஏமாற்றம், அன்றாட செயற்பாடுகளில் ஆர்வமின்மை, தீர்மானம் எடுக்க முடியாமை, குற்ற உணர்வு, தன்னையே விமர்சித்துக்கொள்ளல், மற்றவர்களைவிட தான் பின்னடைந்த மனநிலை, என்பனவும் மன அழுத்தத்தின் அறிகுறிகாளாக கருதப்படுகின்றது.

7. இவ்வாறான மன நலம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் எவ்வாறான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்?

உளரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டால் முதலில் எமது குடும்ப வைத்தியரை நாடி அவை சம்பந்தமாக உரையாடலாம். அவர்கள் பிரச்சினையின் ஆழத்தை அறிந்து அதற்கேற்றாற்போல் சிகிச்சை மேற்கொள்வார்கள். மேலதிக சிகிச்சை தேவைப்படுபவர்களை மன நல ஆலோசகரிடம் அல்லது மன நல வைத்தியரிடம் அனுப்பிவைப்பார்கள். அல்லது நேரடியாகவே மனநல வைத்தியர்களை நாடி மருந்து முறையிலான சிகிச்சைகளையும் மன நல ஆலோசகார்களை நாடி மன நல ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
8. மன நல ஆலோசனை என்றால் என்ன?

மன நல ஆலோசனை என்பது வெறுமனே ஆலோசனை கூறுவதோ, வழிகாட்டுவதோ அல்லது பிரச்சினைக்கு தீர்வு கூறுவதோ அல்ல. மன நல ஆலோசனை என்பது ஒருவர் ஏதோ ஒரு விடயத்தால் பாதிப்பிற்கு உட்பட்டு அதிலிருந்து மீள்வதற்காக வேண்டி பயன்படுத்துகின்ற உளவியல் ரீதியான செயல்முறையாகும். மனநல ஆலோசனையின் மூலம் ஒருவருடைய உள உடல் நடத்தை தொடர்பான சிக்கல்களை விஞ்ஞான ரீதியாக பகுப்பாய்வு செய்து அவருக்கு தீர்மானம் எடுப்பதற்கு துனை புரிவதும் அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பதும் அத்துடன் பொருத்தமானவர்களுடன் சென்று மனநலம் பெருவதற்கு உட்படுத்துவதுமாகும்.

9. மன நல ஆலோசகர் என்பவர் யார்? (psychological counsellor)

மனநல ஆலோசகர் என்பவர் எமது மன நலம் சார்ந்த பிரச்சினைகளையெல்லாம் நொடிப்பொழுதில் தீர்த்து வைக்கும் உடனடித்தீர்வாளர் அல்ல. மருந்து மாத்திரைகளைக்கொடுத்து நோயைக் குணப்படுத்தும் மருத்துவருமல்ல. பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையின் தீர்மானங்களில் ஆதிக்கம் செலுத்தி முடிவுகளை எடுப்பவரும் அல்ல. மாறாக மன நல ஆலோசகர் என்பவர் மனதைப்பற்றி விரிவாகவும் ஆழமாகவும் அங்கீகரிக்ககப்பட்ட கற்கை நெறியொன்றை பூர்த்தி செய்தவரும் பதிவு செய்யப்பட்ட மனநல ஆலோசகர் சங்கத்தின் உறுப்பினராகவும் அவர்களின் மேற்பார்வையில் செயற்படக்கூடியவரும் ஆவார்.

மனநல ஆலோசகரை சந்திக்க வருபவருக்கு கதைப்பதற்கு அல்லது அவரது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு பொருத்தமான சூழலை ஏற்படுத்திக்கொடுத்து அவர் சொல்லுகின்ற விடயங்களுக்கு ஆழமாக செவிமடுத்து அவரது மனப்பாதிப்புக்களை புரிந்து கொள்வார். அத்துடன் பாதிக்கப்பட்டவருடைய பாதிப்புகளுக்கு பொருத்தமான பல்வேறு விதமான மனோ தத்துவ விதிமுறைகளை அல்லது நுற்பங்களை பயன்படுத்தி பாதிப்பிலிருந்து வெளிவருவதற்கு தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பார்.
10. மன நல ஆலோசகரிடம் செல்வதானால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

எமக்கு ஏற்படும் மனத்தாக்கங்களில் இருந்து மீள்வதற்கான ஒரு முறை எமது கவலைகளை ஆழமாக புரிந்து கொள்ளக்கூடிய ஒருவரிடம் சொல்வதாகும். ஆனால் இன்றைய சமூகத்தில் எதிர்பார்ப்புடனும் விசுவாசத்துடனும் சொல்லி பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த நன்பர்களை தேடிக்கொள்வது மிகவும் கடினமான விடயம். அதனால் தேர்ச்சி பெற்ற தொழில் சார்ந்த மன நல ஆலோசகரிடம் சென்று எமது மனநலம் தொடர்பான பிரச்சினைகளை வெளிப்படுத்தும் போது அதற்கு சரியான தீர்வை பெற்றுக்கொள்வதற்கான அவகாசம் கிடைக்கும். அத்துடன் எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தகமையும் திறனும் எம்மிடமே உள்ளது என்பதை மன நல ஆலோசனையின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அவ்வாறே எமது திறமைகளுக்கு தக்கவாறு எதிர்கால இலட்சியங்களை அமைத்துக்கொள்ளவும் மனதை ஒரு நிலைப்படுத்தவும், சமநிலைப்படுத்திக்கொள்வதற்கும் மன நல ஆலோசனை துனைபுரியும். எந்த ஒரு சூழ்நிலையிலும் மனநல ஆலோசனையை நாடிச்செல்பவருடைய இரகசியங்கள் பாதுகாக்கப்படும். எமது நிறை குறைகளை ஒளிவு மறைவின்றி உண்மையாகவே வெளிப்படுத்த முடியும்.
நாமே எங்களை நன்கு ஆராய்ந்து எங்களுக்கே உரித்தான வழிமுறையினை தெரிவு செய்ய ஊக்குவிற்கப்படும்.

11. மன நல ஆலோசனையின் வகைகள் என்ன?

மன நலம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து இழகுவாக வெளிவருவதற்கு மன நல ஆலோசகரின் உதிவ தேவை என்பதை நாம் புரிந்து கொண்டோம். ஒருவனது வாழ்க்கையின் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மன நல ஆலோசனைகள் தேவைப்படலாம். அதனால் சந்தர்ப்பத்திற்கு தக்கவாறான மனநல ஆலோசனை வகைகள் காணப்படுகின்றன.

 

அஸ்ஹர் அன்ஸார்

M.S Psych.C (Ind), A.D.Psycho.C (SL), D.Psy.C (SL), D.Y.T (Ind), FRSPH (UK)

சிரேஷ்ட மனநல விருத்தி ஆலோசனை நிபுணர்
துணைத்தலைவர்
இலங்கை உளவள ஆலோசக நிபுணர்கள் சங்கம்
இலங்கை மன்றம்.

www.azharansar.com

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *