மஹிந்த வாதம், மஹிந்த வதை, விராது தேரரின் வருகை

அரசாங்கம் எம்மை எமது நாட்டிலேயே அநாதையாக்கியுள்ளது. (வேரெஸ் ஆறு வேலைத்திட்டம் மூலம் அடிவாங்கும் பொரலஸ்கமுவ விவசாயிகள், லங்காதீப)

கோதாபய ராஜபக்ஷவின் அழகுபடுத்தும் திட்டங்களில் புதிய வேலைத்திட்டமானது வேரெஸ் ஆற்றை அபிவிருத்தி செய்யும் திட்டமாகும். பிரமாண்டமான கொண்டாட்டங்ளுக்கு மத்தியில் பாதசாரிகளின் மேடை மற்றும் உணவுவிடுதிகள் போன்றன இந்த மாதத்தில் திறந்து வைக்கப்பட்டது. மஹிந்த சிந்தனையை மஹிந்த விவாதமாக முன்னுக்கு கொண்டுவர வேண்டும் என்று கூறுவதற்காக முன்னர் நடிகராக இருந்து தற்போது அதிகார மோகத்தில் வீழ்ந்திருக்கும் ஜெக்ஸன் எந்தனி இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார். பொரலஸ்கமுவ விவசாயிகள் பலருக்கு மஹிந்த விவாதம் மஹிந்த தொல்லையாக மாறியுள்ளது. இந்த அழகுபடுத்தும் வேலைத்திட்டம் மூலம் தற்போது அவர்களுக்கு அவர்களின் வயல்களில் இருபோக விளைச்சலுக்கும் நீரைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது. இராணுவத்தினர் வழங்கிய ஆலோசனைக்கேற்ப வேலைகளைச் செய்ய பணம் மற்றும் உடல் உழைப்பு இல்லாமை காரணமாக விவசாயத்தை கைவிட்டு விட்டார்கள். மனைவி பிள்ளைகளுக்கு உணவு கொடுப்பதற்கு கூலி வேலையையாவது தேடிக்கொள்ள முடியாவிட்டால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள தான் வேண்டும். இவர்களைப் பார்த்துக்கொண்டே தான் அங்குள்ள பணம் படைத்தவர்கள் தமது மனைவி பிள்ளைகளுடன் பவனி வருகிறார்கள்.

2010ம் ஆண்டு நான்கு பௌத்த பிக்குமார் பிரிவுகளின் தலைமைப் பிக்குகளும் ஜனநாயகம் மற்றும் சரியான நிர்வாகம் போன்றன பற்றி உரையாட கருத்தரங்கொன்றை நடத்துவதற்கு தீர்மானித்தனர். ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத் தளபதிக்கு தண்டனை வழங்குவதை நிறுத்துமாறு உத்தியோகபூர்வமாக அறிவிக்க பௌத்த பிக்குகள் முடிவெடுத்தனர். ராஜபக்ஷாக்கள் இதனால் பயமடைந்தனர். இந்த செயற்பாடானது சில பிக்குகளின் ஒற்றுமையன்றி முழு பௌத்த சம்மேளனமும் முன்னெடுத்துச் செல்லும் மாபெரும் ஒரு கருத்தரங்காகும். இதற்கு அரச ஊடகங்கள் சேறு பூசுவதற்கு ஆயத்தமானதோடு கருத்தரங்கை தடை செய்வதற்கும் சூழ்ச்சிகளை நடத்தின.

கடைசி நேரத்தில் கருத்தரங்கு இரத்து செய்யப்பட்டது. மல்வத்த தேரர் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என அத்தங்கனே ரதனபால தேரர் கூறினார். அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு சார்பாக இருக்கும் பிக்குமார் ஆகியோர் இந்த கருத்தரங்கை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தினர். மிஹின்தலை விகாரையின் தலைமைப் பிக்குவும் நேரடியாகவே கூறினார். பௌத்த பிக்குகள் 45 பேரைக் கொண்ட குழுவொன்று மல்வத்து தலைமைப் பிக்குவிடம் வந்து, தலதா மாளிகைக்குள் இரண்டு குண்டுகள் வெடிக்கும், அதற்கான பொறுப்பை நீரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அந்த பிக்குகள் குழுவில் களனி பல்கலைக்கழக வேந்தர் வெலமிடியாவே குசலதம்ம தேரர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக, தற்கொலை செய்துகொண்ட யசஸ்ஸி மற்றும் ரெகவ ஜினரத்ன ஆகிய தேரர்களும் இருந்துள்ளனர். தாம் பௌத்த சம்மேளனத்திலிருந்து நீங்குவதாகவும் அவர்கள் பயமுறுத்தியுள்ளனர். அவ்வாறு பயமுறுத்தி கருத்தரங்கை நிறுத்த முற்பட்டதும் பயனற்றுப் போனதால் இதனை ஜனாதிபதியிடம் தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் தலைமைப் பிக்குகளை தொடர்பு கொண்டு கருத்தரங்கை நிறுத்துமாறு கூறியுள்ளார். கருத்தரங்கை நிறுத்த முடியாது என்று கூறிய சந்தர்ப்பத்திலேயே குண்டு போடுவதாக மிரட்டியுள்ளனர். மகா சங்கத்தினர் மற்றும் தலதா மாளிகை போன்றவற்றின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு கருத்தரங்கை தள்ளிப்போட்டுள்ளதாக தலைமைப் பிக்கு அறிவித்தார். ராஜபக்ஷாக்கள் தங்களுக்குக் கீழ்படியாத பிக்குகளை இவ்வாறு தான் கவனித்துள்ளார்கள்.

இந்த வாரத்தில் பயங்கரவாத விசாரணை பிரிவு, ஜீவனோபாய வெப்தள ஊடகவியலாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த ‘இணையதள பாதுகாப்பு’ சம்பந்தமான வேலைத்திட்டத்தை தடை செய்தனர். ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், மற்றும் அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் ஆகியோரின் கூட்டிணைவில் இயங்கும் பயங்கரவாத விசாரணை அமைப்பின் செயலமர்வை நடாத்துவதற்கு திட்டமிட்டிருந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் ‘ஹோட்டலை சுற்றிவளைக்க உள்ளார்கள், எனவே செயலமர்வில் பங்குகொள்பவர்களின் பாதுகாப்பிற்கு தங்களால் உத்தரவாதமளிக்க முடியாது’ என்று கூறியுள்ளார்கள். தலைமைப்பிக்கு போன்றே ஹோட்டல் நிர்வாகத்தினரும் செயலமர்வை இரத்துச் செய்தனர். ஆனால், பொதுபலசேனாவின் செயலமர்வுகளுக்கு இவ்வாறான எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை. அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடன் அவை இடம்பெறுவது சுகததாஸ விளையாட்டரங்கிலாகும். விரோதத்தை விதைக்கும் பர்மாவின் பிக்குவாகிய விராது தேரரின் வருகைக்கு ஒரு நூலளவிலாவது எதிர்ப்புகள் இருக்கவில்லை. முஸ்லிம்கள் ஆரம்பத்திலிருந்தே கெட்டவர்கள். அவர்களுக்கு யாரை வேண்டுமானாலும் கொல்வதற்கு முடியும். இஸ்லாம் என்பது கள்வர்களின் சமயம். அவர்கள் சமாதானத்தை விரும்பாதவர்கள் போன்ற கதைகளைக் கூறி குழப்பங்களை ஏற்படுத்தும் காவியுடை அணிந்தவரின் வருகையைப் பற்றி பொதுபலசேனா முகப்புத்தகத்தில் மிகப்பெரிய பிரச்சாரங்களை செய்திருந்தது. விசேட விருந்தினர்களை அழைத்துச்செல்லும் கதவு வழியாக மிகவும் மரியாதையுடன் வரவழைக்கப்பட்ட அவர் பாதுகாப்பான ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பொதுபலசேனாவின் இந்த மாபெரும் கூட்டத்திற்கு நேரடியாகவே ராஜபக்ஷாக்களின் பண உதவியும் மற்றும் தேரர்களின் வருகையும் அழைப்பும் இடம்பெற்றதோ என்பது தெரியாது. என்றாலும் செயலமர்வு மிகவும் சிறப்பாக இடம்பெறுவதற்கு அவர்களின் அனுமதி கிடைத்தது என்று சந்தேகமின்றி கூறலாம். 2010ம் ஆண்டு தலதா மாளிகையில் இடம்பெறவிருந்த தேரர்களின் மகா சம்மேளனத்தில் குண்டு வைக்கப்படும் என அச்சுறுத்தி நிறுத்திய அரசாங்கம் பொதுபலசேனாவின் செயலமர்வை மிகவும் சிறப்பாக செய்வதற்கு இடமளித்தமையானது பொதுபலசேனாவிற்கு அரசாங்கத்தினால் இருக்கும் ஆசிர்வாதத்தையே காட்டுகின்றது.

பாப்பாண்டவரின் வருகைக்கு முன் 2015ம் ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்பது உறுதியாகிவிட்டது. ஊவாவில் ராஜபக்ஷாக்கள் கொஞ்சம் பின்வாங்கி உள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வாறான ஒரு நிலைமையில் சகோதரர்களை போஷிக்கும் பிக்குகளின் கூட்டத்திற்கு இடமளித்துள்ளனர்.

அதிகமான தமிழர்களும் முஸ்லிம்களும் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என ராஜபக்ஷாக்களுக்கு தெரியும். அவர்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் பெரும்பான்மை மக்கள் பிரிந்து செல்லாது அவர்களை தம்முடனேயே வைத்துக் கொள்வததேயாகும். தேர்தல் களத்தை சமச்சீரற்ற வகையில் சிதைவுறச் செய்துள்ளார்கள். பயங்கரவாதம் மற்றும் ஊழல் போன்றவற்றைச் செய்வதற்கு சகோதரர்கள் எப்போதும் பின்வாங்குவதில்லை. என்றாலும் ஊவா தேர்தலின் போது இடம்பெற்றது போல் இந்தத் தேர்தலின் போதும் அவர்களுக்கு கிடைக்கப்போவது சிறியளவிலான அதுவும் நேர்மையான முறையிலற்ற ஒரு வெற்றியாகும். பெரியதொரு வெற்றியைப் பெற வேண்டுமானால் சிங்கள பௌத்தர்களை தூண்டி விடவேண்டி வரும். எஞ்சியிருக்கும் மாதங்களில் புதிய பொருளாதார நன்மைகள் கிடைக்கும். என்றாலும் அவை காலதாமதமாகாது. கிராம மக்கள் இருக்கும் ஊவாவின் சிங்கள மக்களைக் கூட இந்த வித்தைகளால் ஏமாற்ற முடியாமல் போனது. இதற்கு வேறு மார்க்கங்களை தேட வேண்டி வரும்.

சிங்கள பௌத்தர்களுக்கு அவர்கள் பாதுகாப்பின்றி இருப்பதை மறைத்து அவர்களை பாதுகாப்பதற்கு அதிகாரத்தில் உள்ள ஒருவரின் பாதுகாப்பு தேவை என்பதை தெரியப்படுத்த வேண்டும். மக்களை மேலும் மேலும் தீவிரவாதிகளாக்கி, அந்த தீவிரவாதத்தை தங்களின் இலாபத்திற்கு பயன்படுத்திக்கொள்வதே ராஜபக்ஷாக்களின் எதிர்பார்ப்பாகும். சிங்கள மக்களின் பொருளாதார கஸ்டங்களை மறக்கடித்து, நாடு, இனம், மதம் போன்றவற்றிற்கு இருக்கும் அச்சுறுத்தல்களை மக்களுக்கு தெளிவுபடுத்த விராது-பொதுபலசேனா கூட்டு மிக தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. எதிர்வரும் தேர்தல் காலங்களில் மக்கள் மனங்களில் இனவாத தேர்தல் நிலைமையொன்றை உருவாக்குவதற்கு பொதுபலசேனாவின் இந்த கூட்டம் மிகப்பெரிய அடிக்கல்லாக இருந்தது. புலிகளின் மீள் வருகை, ஜிஹாத் அச்சுறுத்தல் மற்றும் கிறிஸ்தவர், கத்தோலிக்க பிரச்சினைகள் தொடர்பில் உரத்த குரலில் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியும்.

2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர், பௌத்த பிக்குகளுக்கு எயிட்ஸ் நோயை ஏற்படுத்துவதற்காக கிறிஸ்தவ சமயத்தவர்கள் திட்டமிட்டுள்ளர்கள் என்று கூறினார். குருநாகலில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் அவர்கள் இந்த நாட்டிலிருந்து பௌத்த மதத்தை இல்லாமல் செய்வதற்கு முடிவெடுத்திருக்கிறார்கள். அதில் ஒரு அங்கமாக பிக்குகள் இரத்தப் பரிசோதனைக்குச் சென்ற சமயத்தில் எச்.ஐ.வி. வயிரஸை சேர்க்கிறார்கள்.

தேர்தல்கூட்டங்களில் இவ்வாறான கதைகளை பரப்புவது ராஜபக்ஷாக்களுக்கு தேவையாக இருக்கிறது. உண்மை வாழ்க்கையில் பொருளாதார, அரசியல், சமூக பிரச்சினைகளை கீழ் தள்ளி சிங்கள பௌத்தர்களை தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு எதிராக சந்தேகம், பயம், கோபம் மற்றும் வைராக்கியத்தால் நிரப்புவார்கள். இதற்காக ஒரே மூச்சில் பாய்வதற்கு பர்மாவின் பௌத்த பின்லாடனைத் தவிர வேறு தகுதியானவர் யார்?

நன்றி ராவய

– திசரணி குணசேகர-

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *