இந்த நாட்டில் அரச ஆதரவுடன் முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டப்பட்டு வந்த இனவாதத் தீ, ஜனநாயக வாக்குப் பலத்தின் மூலம் படிப்படியாக அணைக்கப்பட்டு பாராளுமன்றத் தேர்தலுடன் முற்றாக அணைக்கப்பட்டுவிட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட வேளையில், இரண்டு நாட்களுக்கு முன் ஹெம்மாதகமவில் SLTJ மேற்கொண்ட அவசியமற்ற ஒரு செயற்பாடு காரணமாக மீண்டும் கொழுந்துவிட ஆரம்பித்து விட்டது.
மார்க்க விடயங்கள் ஆகட்டும், பொது விடயங்கள் ஆகட்டும், எதிலுமே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எவ்வித நிதானப் போக்கும் இல்லாமல் செயல்படும் அமைப்பாகவே SLTJ இதுவரை காணப்படுகின்றது. தமிழ்நாட்டில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இவ்வமைப்பினர், இந்த நாட்டிற்குப் பொருத்தமற்ற முறையில் தமது நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இனவாதத் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருந்த அச்சமான சூழ்நிலையிலும் மாதம்பையில் 5 பேருக்காக அடாத்தாக ஜும்மா ஆரம்பித்து ஜமாத்தே இஸ்லாமியினரை வம்புக்குத் தூண்டியமை, எவ்வித முன்யோசனையும் இன்றி புத்தர் மனித மாமிசம் உண்டார் என்று பகிரங்கமாக கூறியமை (பின்னர் அதனை வாபஸ் வாங்கினாலும், அது சிங்கள மக்களிடம் எடுபடவில்லை) என்று முஸ்லிம்களின் இருப்புக்கு வேட்டு வைக்கும் விதமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்கின்ற பெயரில் PJ நடாத்திப் புகழ் பெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி, உண்மையில் ஒரு மதம் மாற்றும் நிகழ்ச்சியாகவும் கூட நடைபெற்று வந்துள்ளது. மதச்சார்ப்பினையை கடைப்பிடிக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், திராவிட பாரம்பரியத்தில், பெரியாரின் சிந்தனைப் புரட்சியின் தாக்கத்தில் உள்ள தமிழகத்தில் இந்நிகழ்ச்சி ஒரு பொருட்டாக பார்க்கப் படாவிட்டாலும், தமிழ் நாட்டைப் பின்பற்றி இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை இலங்கையில் நடாத்துவது, இலங்கையின் பெளத்த சூழலுக்கு எவ்விதத்திலும் பொருத்தமற்றது ஆகும்.
தமிழகத்தின் சினிமாக்களில் மணிவண்ணன், விவேக் என்று நடிகர்கள் கடவுளைக் கிண்டல் பண்ணுவது பொதுவாக ஏற்றுக்கொள்ளப் பட்ட விடயம் ஆகும். எனினும் இலங்கையின் பெளத்த கலாச்சாரத்தில் புத்தர் மட்டுமல்ல, சிவுர என்கின்ற காவி உடையை அணிந்த மனிதர் கூட புனிதமானவராகவே மதிக்கப்படுகின்றார். இவை குறித்த எவ்வித கரிசனையும் அற்ற நிலையில் SLTJ அமைப்பினர் தமது செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சூனியம், பிறை போன்ற விடயங்களில் கூட ஏனைய முஸ்லிம்களை புறக்கணித்து, விவாதம், முஷ்ரிக் பட்டம் என்று பகிரங்கமான பிளவை உண்டுபண்ணும் இவர்களின் செயல்பாடு, முஸ்லிம்கள் என்கின்ற எல்லையை தாண்டி, பெளத்தர்களை குறி வைக்கும் பொழுது, அது இலங்கையில் இன்னொரு பாரிய முஸ்லிம் – சிங்கள இனக் கலவரத்திற்க்கான தூண்டுகோலாக அமையும் என்பதையே ஹெம்மதகமை சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.
ஹெம்மாதகமை சம்பவம் குறித்து SLTJ அமைப்பினர் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர்களை தாக்க முயலும் பெளத்த தேரர்களும், அவர்களுடன் வந்தவர்களும் “புத்தர் மனித மாமிசம் சாப்பிட்டார் என்று சொன்னவர்களை விடமாட்டோம்” என்று கூச்சலிடுவதை பல தடவைகள் கேட்கக் கூடியதாக உள்ளது.
நாட்டின் முஸ்லிம் புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள், ஜமியத்துல் உலமாவினர், மற்றும் ஏனைய தலைவர்கள் உடனடியாக செயற்பட்டு SLTJ யினரின் செயற்பாடுகளை ஒரு கட்டுப்பட்டிற்குள் கொண்டுவராவிட்டால் முஸ்லிம் – சிங்கள கலவரங்கள் உருவாக ஏதுவாக அமைவதை தவிர்க்க முடியாமல் போவதுடன், இந்த நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் இருப்பும் கேள்விக்குறியாக மாறும். ரோஹிங்க்யா முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது போன்ற ஒரு நிலைமை இங்கு ஏற்பட ஒருபோதும் சந்தர்ப்பங்களை வழங்கிவிடக் கூடாது.
ஏற்கனவே அளுத்கமை வன்முறையின் தாக்கங்களில் இருந்து முற்றாக மீட்சியடையாத நிலையில், நாடளாவிய ரீதியில் முஸ்லிம்கள் மீது மீண்டும் வன்முறை தூண்டப்படுவதை தவிர்க்க வேண்டுமானால், உடனடி நடவடிக்கை அவசியமாகும்.
ஆட்சி மாற்றத்துடன் ஏற்பட்ட அமைதியான சூழ்நிலை, ஹெம்மாதகமை குழப்பத்தின் மூலம்அநியாயமாக மாசு படுத்தப் பட்டுள்ளது, அது தொடர்வதற்கு முஸ்லிம் புத்திஜீவிகளும், தலைமைகளும் இடம் கொடுக்கக் கூடாது.
– சுவைர் மீரான்-