மாவனல்லை சம்பவம் தொடர்பாக அஸாத் சாலி விடுத்துள்ள ஊடக அறிக்கை

பத்து தினங்களுக்குள் இரண்டு முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தீக்கிரை. யார் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை

அஸாத் சாலி

அளுத்கமை நகரில் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒரு கடை காடையர்கள் கும்பலால் எரித்து சாம்பராக்கப்பட்டு சரியாக பத்து தினங்கள் கழிவதற்குள் மாவனல்லை நகரிலும் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான இரும்பு மற்றும் கட்டிட நிர்மாணப் பொருள்கள் விறபனை செய்யப்படும் ஒரு கடை தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கடையின் பின்பக்க மதிலை உடைத்துக் கொண்டு நள்ளிரவு வேளையில் உள்ளே புகுந்த நபர்கள் இந்தக் கடைக்கு தீ வைத்து நாசமாக்கியுள்ளனர். இந்தக் கடைக்கு தீ மூட்டுவதற்கு முன் அதில் உள்ள பொருட்கள் பலவும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சம்பவம் நடந்த அன்று (18.05.14) ஞாயிறு அதிகாலை இந்த வழியாக அந்தப் பிரதேசத்தின் விகாரையின் பெரஹராவும் இடம்பெற்றுள்ளது.

பக்தியை முதலில் வெளிப்படுத்திவிட்டே அயோக்கியத்தனத்தையும் அரங்கேற்றியுள்ளனர்.மக்கள் கூட்டம் மிக்க நகரங்களில் முஸ்லிம்களின் பிரபலமான வர்த்தக நிலையங்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுவது கண்டிக்கத்தக்கதாகும் என்று தெரிவித்துள்ளார் மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அஸாத் சாலி.இது சம்பந்தமாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

பத்து தினங்களுக்குள் அளுத்கம நகரிலும் மாவனல்லை நகரிலும் முஸ்லிம்களுக்கு சொந்தமான இரண்டு கடைகள் அடுத்தடுத்து எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன.

அளுத்கமை கடையைப் போலவே இந்தக் கடையின் உரிமையாளரும் கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ளார்.கடந்த மார்ச் மாதத்தில் மாவனல்லை பிரதேசத்தில் காலாகாலமாக முஸ்லிம் பெயரில் இருந்து வந்த ஒரு வீதியை பௌத்த பிக்குகள் பலர் ஒன்று சேர்ந்து அந்த வீதிக்கு சிங்களப் பெயர் ஒன்றை இட்டுச் சென்றனர். அப்போது அங்குள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. இவற்றை நாம் அப்போதே அரசாங்கத்தின் கவனத்துக்கும் கொண்டு வந்தோம். ஆனால் அவை எல்லாமே இன்று வரை செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டது. நியாயமான விலையில் தரமான பொருள்கள் கிடைத்தால் அந்த வர்த்தக நிலையத்துக்கு மக்கள் வருவதை எந்த சக்தியாலும் தடை செய்ய முடியாது. இதுதான் இங்கும் நடந்துள்ளது.

முஸ்லிம்களுடனான வர்த்தக போட்டியை நியாயமான முறையில் சமாளிக்க முடியாத தீய எண்ணம் கொண்ட வர்த்தகர்களே இனவாத கங்கனம் கட்டி அலையும் கும்பலைத் தூண்டிவிட்டு முஸ்லிம்களின் சொத்துக்களை அழித்து வருகின்றனர். அளுத்கமை கடை எரிப்பும் மாவனல்லை கடை எரிப்பும் ஒரே பாணியில் இடம்பெற்றுள்ளமை அவதானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.முஸ்லிம்களால் நிம்மதியாக வாழவும் முடியாது. வழிபாடுகளில் ஈடபடவும் முடியாது. வர்த்தகம் செய்யவும் முடியாது என்ற இக்கட்டான நிலை தொடருகின்றது. இந்த நாட்டில் சமய ரீதியான இன ரீதியான பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று ஜனாதிபதி வலியுறுத்திக் கூறி வருகின்றார்.

அப்படியாயின் பிரதான நகரங்களில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மட்டும் குறி வைத்து தீக்கிரையாக்கப்படுவதன் மர்மம் என்ன? முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்படுவதன் பின்னணியில் செயற்படும் கும்பலை இதுவரை பொலிஸாரால் கண்டு பிடிக்க முடியாமல் இருப்பதன் மர்மம் என்ன? மிகக் கொடிய குற்றவாளிகளை எல்லாம் ஒரு சில தினங்களிலேயே கண்டு பிடித்து அவர்களின் கதைகளை மிக அழகாக சோடித்து முடித்து விடும் பொலிஸாரால் முஸ்லிமகளின் பள்ளிவாசல்களையும் வர்த்தக நிலையங்களையும் தாக்கியும் எரித்தும் வரும் கும்பலில் ஒருவரைக் கூட இதுவரை கைது செய்ய முடியாமல் இருப்பது ஏன்?

இந்த சம்பவங்களின் பின்னணியில் அரச உயர் மட்டத்தில் இருக்கும் ஒரு நபர் அல்லது நபர்கள் செயற்படுகின்றார்கள். அல்லது இந்தக் கும்பலுக்கு அரச உயர் மட்டத்தின் ஆதரவு உள்ளது என்ற முஸ்லிம் சமூகத்தின் நியாயமான சந்தேகம் இங்கு மேலும் வலுவடைகின்றது.

1915ல் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதன் 100வது ஆண்டை 2015ல் அனுஷ்டிக்க வேண்டும். அதனை நினைவு கூறும் வகையில் முஸ்லிம்களுக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என்று பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்தவர் இன்றும் இந்த அரசின் மாகாண சபை அமைச்சராக இருக்கின்றார். அவரின் காலக்கெடு நெருங்க நெருங்க முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டு வருகின்றன. மேல் மாகாண சபையில் இருக்கின்ற இனவாத போக்குள்ள இந்த அமைச்சரை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அவர் பசுத்தோல் போர்த்தியாக புலியாக இருந்து கொண்டு தனது முன்னைய கூற்றை நிறைவேற்றும் வகையில் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றாரா என்பது கண்டறியப்பட வேண்டும்.

இனிமேலும் அரசு இந்த விடயத்தில் தாமதிக்கக் கூடாது. சட்டம் தன் கடமையை செய்ய அனுமதிக்க வேண்டும். வெறுமனே பொலிஸ் பிரிவுகளை ஏற்படுத்தி மக்களையும் உலக நாடுகளையும் ஏமாற்றும் கைங்கரியத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். எதிர்க்கட்சிகள் எவ்வளவு தான் கோஷமிட்டாலும் அரசு அவற்றை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் இனவாத சக்திகளின் அட்டகாசத்துக்கு தொடர்ந்தும் மௌனமாக அனுமதி அளித்து வருகின்றது. இந்த நிலை மாற வேண்டும். முஸ்லிம்களின் உயிர்களும் உடைமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

விரைவில் ஏதோ ஒரு வகையில் இந்த நாடு ஒரு தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அப்போது இந்த அரசின் சார்பாக முஸ்லிம்களிடம் வாக்குகளைக் கேட்டு வருபவர்களை முஸ்லிம்கள் கேள்விக்கு உட்படுத் வேண்டும். அதற்கு ஏதுவாக ஒவ்வொரு பிரதேசத்திலும் புத்திஜீவிகள் எமது சமூகத்துக்கு எற்படுகின்ற இழப்புக்களை ஆதாரத்துடன் பதிவு செய்து வர வேண்டும். இந்த சம்பவங்களை மறந்து விட்டு நாம் தேர்தல் காலத்தில் இவர்களின் பின்னால் அற்ப சொற்ப சுகங்களுக்காக கைகோர்த்து நின்றால் நிச்சயம் மறுமையில் நாம் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை அன்புடன் நினைவூட்டிக் கொள்கிறேன்.

இப்படி நடப்பவை எல்லாம் சிறு சிறு சம்பவங்களே தவிர பெரிய விடயங்கள் அல்ல என்று ஜனாதிபதி மீண்டும் மீண்டும் கூறுகின்றார். அப்படியானால் அவர் சிறு சம்பவங்களாகக் கருதும் இப்படிப்பட்ட கொடிய நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கலாம் என்ற அனுமதியை அளித்துள்ளாரா? என்பதே நாம் மீண்டும் மீண்டும் கேற்க விரும்பும் கேள்வியாகும்.முஸ்லிம்களினதும் அவர்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் சொத்துக்கள் மீதான பாதுகாப்பை இந்த அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு நியாயப10ர்வமான நட்ட ஈடுகள் வழங்கப்பட வேண்டும்.பொலிஸார் இந்த விடயத்திலாவது தமது கடமையை சரியாக நிறைவேற்றி சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

அவர்கள் யாராக இருந்தாலும் சரி எந்த ஆடைக்குள் தம்மை மறைத்துக் கொண்டிருந்தாலும் சரி சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. இந்த சட்ட ஒழுங்கின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் விதத்தில் பொலிஸார் நடந்து கொள்ள வேண்டும்.

1417694_747246245303143_943548111_o

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *