மாவனல்லை பிரதேச சபையை ஆளப்போவது யார்? தீர்மானமிக்க முதலாவது சபை அமர்வு திங்களன்று…

மாவனல்லை பிரதேச சபையை ஆளப்போவது யார்?

தீர்மானமிக்க முதலாவது சபை அமர்வு திங்களன்று…

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களைக் கொண்ட மாவனல்லை பிரதேச சபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை காலை கூடவுள்ளது. அன்றைய தினம் மாவனல்லை பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பொது ஜன பெரமுன இடையே கடும் போட்டி நிலவுகின்றது.

கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி தொகுதிவாரி முறையில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலின் முடிவுகளுக்கு அமைய 40 ஆசனங்கள் கொண்ட மாவனல்லை பிரதேச சபையின் அதிகாரத்தை எந்தக் கட்சியாளும் கைப்பற்ற முடியவில்லை.
ஆட்சியமைப்பதாயின் பெரும்பான்மை 21 ஆசனங்கள் அவசியம் என்றிருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பொது ஜன பெரமுன ஆகியன தலா 16 ஆசனங்கள் வீதமே கைப்பற்றின.

அத்துடன், தேசிய பட்டியல் ஆசனம் மூலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 5 ஆசனங்களும், மக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் கட்சி மற்றும் மான் சின்னத்தில் போட்டியிட்ட சுயற்சைக் குழு என்பன தலா ஒவ்வொரு ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன.

இதனால் மாவனல்லை பிரதேச சபையின் அதிகாரத்தை ஏனைய கட்சிகளுடன் இணைந்து தம்வசப்படுத்திக் கொள்ள ஐ.தே.க. மற்றும் பொது ஜன பெரமுன என்பன மற்றைய கட்சிகளுகளுடன் பேச்சுக்களை நடத்தி வந்தது.

இந்நிலையில், 5 ஆசனங்களைக் கொண்ட தீர்மானமிக்க சக்தியாக உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் பொது ஜன பெரமுனவுடன் இணைந்து பயணிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அதற்கு கட்சி உயர் பீடம் அனுமதி வழங்குவமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இதவேளை, மான் சின்னத்தில் போட்டியிட்ட சுயற்சைக் குழு தேர்தல் முடிவுகளின் பின்னர் தமக்கு கிடைத்த ஒரு போனஸ் ஆசனத்துக்கு குழுவின் தலைவர் நபீர் கானை தெரிவு செய்திருந்தது. பின்னர், நபீர் கான் தான் பிரதேச சபையில் எந்தக் கட்சிக்கு ஆதரவளிக்காது சுயாதீனமாக செயற்படப்போவதாக அறிவித்திருந்தார்.

அத்துடன், மக்கள் விடுதலை முன்னணி தமக்குக் கிடைத்த ஒரு போனஸ் ஆசனத்துக்கு ஜயந்த குமாரவை தெரிவு செய்திருந்ததுடன், கட்சித் தீர்மானத்துக்கு அமைய அவர் சுயாதீனமாகவே செயற்படவுள்ளார்.

தேர்தலுக்கு முன்னிறுத்திய வேட்பாளர்கள் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையால் சட்டப்பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ள தேசிய மக்கள் கட்சி தமக்கு கிடைத்துள்ள ஒரு போனஸ் ஆசனத்துக்கு ருவன் குமார தயாரத்ன என்பவரை தெரிவு செய்துள்ளது.

அவர் ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியுடன் நெருங்கமான உறவை வைத்திருந்தவர் என்பதாலும், தமது கட்சிக்கு எதிராக ஐ.தே.க. ஆதரவாளர்கள் சிலரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால் பிரச்சினைகளை சுமூகமாக முடித்துக் கொள்வதற்காக வேண்டியும் ஐ.தே.கவுக்கு ஆதரவு வழங்கக் கூடிய அதிக வாய்ப்புள்ளது.

எது எவ்வாறாயின் எதிர்வரும் மார்ச் 26ஆம் திகதி திங்கட்கிழமை பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் மாவனல்லை பிரதேச சபையின் அதிகாரம் ஐ.தே.க. அல்லது பொது ஜன பெரமுனவின் கைகளுக்கு செல்லும் அதேவேளை, அன்றைய தினம் மாவனல்லை பிரதேச சபைக்கான தலைவர், உப தலைவர் ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *