அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் மாவனல்லைக்கு இன்று விஜயம் மேற்கொண்டு தீப்பற்றிய வர்த்தக நிலையத்தினை நேரில் பார்வையிட்டார்.
அமைச்சருடன் தொலைத்தொடர்பு சேவைகள் அமைச்சர் ரஞ்சித் சியம்பிலாப்பிட்டிய மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் ஆகியோர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
மாவனெல்லை சந்தியில் அமைந்துள்ள முஸ்லிம் கடையொன்று தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை விரைவுபடுத்தும் படி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மாவனெல்லை பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மாவனெல்லை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் சூத்திரதாரிகளினை கண்டறியும் பொருட்டு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன எனவும் இந்த தீ வைப்புச் சம்பவத்திற்கான காரணங்களை கண்டறிந்து கொள்வதற்காக இரசாயனப் பகுப்பாய்வாளர்களும் ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பொலிஸ் பிரிவினர், அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் தெரிவித்தனர்.
இதன் பின்னர் மாவனல்லை நியூஸ் இணையத்தளத்திற்கு கருத்து தெரிவித்த அமைச்சர் றிசாத்,
‘மாவனெல்லையில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான வன்பொருள் (காட்வெயார்) கடையொன்று மே மாதம் 18ஆம் திகதி தீ வைக்கப்பட்டது. நான் இந்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற போது, அந்த பகுதியில் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் பதற்றம் உருவாக்கியிருந்தது.
முஸ்லிம்களுக்கு எதிரான விரோத சக்திகள் இந்த நாசகார வேலையினை செய்திருப்பதாக அப்பிரதேச மக்கள் என்னிடம் குற்றம் சாட்டினர். இச்சம்பவத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்னை வலியுறுத்தினர். அண்மைகாலமாக முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன. இத்தகைய செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் என்ற ரீதியில் உயர்மட்ட அரச தரப்பினரிடம் கேட்டுக்கொள்கின்றேன்’ என்றார்.
“மாவனல்லை பிரதேச சபையின் தீயணைக்கு இயந்திரம் செயலிந்தமையினாலேயே இந்த தீயிணை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது. குறித்த இயந்திரம் இருந்திருந்தால் 20 சதவீதமான சேதமே ஏற்பட்டிருக்கும்.
இந்த தீயினால் சுமார் ஒரு கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்தார். குறித்த வர்த்தக நிலையம் காப்புறுதி மேற்கொள்ளப்படாமையினால் அரசாங்க நட்டஈடு பெற்றுக்கொடுக்க முயற்சிப்பேன்” என்றார்.