முஸ்லிம்களையே முட்டி மோத வைப்பதால் இஸ்லாம் எப்படி வளரும்?

முஸ்லிம்களையே முட்டி மோத வைப்பதால் இஸ்லாம் எப்படி வளரும்? மாற்று மதத்தவருக்கு இஸ்லாத்தின் மீது அச்சம் அல்லவா ஏற்படும்?

முஸ்லிமின் பணி நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது. அது கூட்டாகவோ, தனிநபராகவோ, இயக்கமாகவோ நடைபெறலாம். அந்தப் பணியை நாம் மனதார ஏற்கின்றோம்.Untitled

இந்த நல்ல பணிக்காக உருவான இயக்கங்கள் காலப்போக்கில் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டும் அடித்துக் கொண்டும் வெளிநாட்டுப் சதிகளுக்கு விலைபோவதுதான் வேதனைக்குரியது.

சில இயக்கங்கங்கள் ஊழல்களின் கூடாரமாக மாறியிருப்பதன் இரகசியம் சிலவேளை எமக்கு அறியாமலே இருக்கலாம். மாற்றுக் கருத்தை ஆதரிப்பவன் என்ற ரீதியில் ஒரு சில கருத்துக்களை பகிரலாம் என நினைக்கின்றேன்..

என்னுடைய கருத்தில் பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டவும். அல்லாஹ் நம் அனைபேருக்கும் நேர்வழி காட்டுவானாக.

பீ, ஜே யின் வருகை சம்மந்தமாக இலங்கை தஃவா இயங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் குடும்பிச் சண்டையில் இலங்கை ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகம் ஆடிப்போயுள்ளது!

எமது பிரதேசங்களில் தவ்ஹீத்வாதிகள் எனக்கூறிக் கொள்பவர்களால் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளன, அவைகளை யாரும் இங்கு மறுப்பதற்கில்லை. இம் மாற்றங்களைக் கடந்து மிகவும் வெட்கப் பட வேண்டிய விடயங்களும் நடந்து கொண்டிருக்கின்றன‌, அதுதான் ஒற்றுமை இன்மை, சகோதரத்துவம் பேணாமை, பணிவு இல்லாமை, இஸ்லாமிய உலகில் செல்வாக்குப் பெற்று விளங்கும் மாண்புமிகு அறிஞர்களையும் உலகளாவிய இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காகப் பாடுபடும் அமைப்புக்களையும் இஸ்லாமிய மரபுகள் அனைத்துக்கும் அப்பால் நின்று விமர்சித்து தூற்றிக் கொண்டிருக்கினறனர்.

மற்றும் ஓரிரு அமைப்பினர் சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் வகையில் கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றனர், ஆசாத் சாலி அவர்களின் சகோதரர், ரியாஸ் சாலி போன்றார்தான் ஆரம்பத்தில் மஹிந்த குடும்பத்தினரிடம் கூட்டுறவு வைத்துக் கொண்டு ஒரு பாரிய காட்டிக் கொடுப்பை செய்தவர்கள். இலங்கையில் வஹாபிகள் ஊடுறுவல் இருப்பதாக தவ்ஹீத் ஜமாத்தினர் பற்றிய தகவலைத் திரட்டிக் கொடுத்தவர்களும் இவர்கள்தான். இந்நிகழ்வு 2010 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் அருவடையைத்தான் அதன் பின்னர் வந்த காலங்களில் நாம் அனுபவித்தோம். http://www.adaderana.lk/news.php?nid=9870
மீண்டும் ஒரு தர்காடவுனை உருவாக்க இவர்கள் முயற்சி செய்கின்றனர் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.

இந்த இஸ்லாமிய அமைப்புக்கள் தத்தமது இயக்கங்களைச் சாராத அமைப்புக்களையும் அதன் அறிஞர்களையும் விமர்சிப்பதற்கும் தூற்றுவதற்கும் கையாளும் உத்திகள் பண்பாட்டு வீழ்ச்சியின் இறுதி எல்லைக்கே இவர்கள் சென்று விட்டார்கள் என்பதைக் காட்டுகின்றன.

இன்று எம‌து பிரதேசங்களில் தஃவா ப‌ணி எவ்வாறு ந‌டக்கின்ற‌து?, ஒற்றுமையை உரத்துப் பேசி பேசி ஒருவரின் உதிரத்தை மற்றவர் உறிஞ்சி உறிஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தவ்ஹீத் அமைப்பினரோ எதற்கெடுத்தாலும் ஆதாரம் என்று பேசும் இவர்கள், ச‌கோத‌ர‌த்துவ‌ம் ப‌ற்றி க‌வ‌லையே ப‌டுவ‌தில்லை. சகோதரத்துவம் பேணுவது முஸ்லிம்கள் ஒவ்வொருவருவர் மீதும் கடமை என்பதை உணர்வோம். இந்த விஷயத்தில் அல்லஹ்வை இயன்ற அளவு அஞ்சிக்கொள்ளுங்கள்.

இஸ்லாம் என்று ஒரு பிரச்சினை வரும் பொழுது உலகளாவிய அளவில் பல்வேறு விஷயங்களுக்காக எதிர், எதிர் கொள்கைகளில் இருக்கும் மாற்று மதத்தினர் கூட ஓர் அணியில் சேர்ந்து ஒரே சக்தியாக நின்று கொண்டிருப்பதை இன்று நாம் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கிறோம். நிராகரிப்பாளர்களில் ஒவ்வொரு கூட்டத்தினரும் இஸ்லாத்தின் விஷயத்தில் ஏனைய கூட்டத்தினருடன் நட்புடனும், விசுவாசமாகவும் செயல் படும் பொழுது நம்பிக்கை, ஈமான் கொண்டவர்கள் நாம் ஒருவருக்கொருவர் விரோத மனப்பான்மையுடன் மோதிக் கொள்வது மிகப் பெரும் அநீதியாகும்.

இது குறித்து இறைவன் தனது திருமறையில் எச்சரிக்கிறான்:

“நிராகரிப்பவர்களில் சிலருக்கு சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; நீங்கள் இதனைச் செய்யாவிட்டால், அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டு இருக்கும்”(அல் குர்ஆன் 8:73)

எனவே உடனடியாக முஸ்லிம் சமூகத்திற்கு சமூக ஒற்றுமையும், பரஸ்பர பாதுகாப்பும் மிக இன்றியமையாததாகும். இதையே இறைவன்,”… விசுவாசிகளே! நீங்கள் ஒருவரையொருவர் பலப் படுத்திக் கொள்ளுங்கள்….”(அல் குரான் 3:200)

”நீங்கள் பிரிந்து விடாதீர்கள்”(அல் குர்ஆன் 3:103) என்று தனது திருமறையில் குறிப்பிடுகிறான்.

மேலும், ”நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்கள்; ஆகவே உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சுங்கள்;”(அல் குர்ஆன் 49:10)

முஃமின்கள் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதிலும், இரக்கம் கொள்வதிலும், ஒருவருக்கொருவர் கருணை காட்டுவதிலும் ஓர் உடம்பைப் போன்றவர்களாக இருக்க வேண்டும். அந்த உடம்பின் ஓர் உறுப்பு நோயால் அவதிப் பட்டால் ஏனைய உறுப்புக்கள் காய்ச்சல், விழித்திருத்தல் என்பனவற்றின் மூலம் அந்நோயில் பங்கு கொள்கின்றன.” (புகாரி, முஸ்லிம்)

“முஸ்லிம் மற்றைய முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவன் அவனுக்கு அநீதி இழைக்க மாட்டான். அவனை அவன் கைவிடவும் மட்டான்.”(புகாரி, முஸ்லிம்)

“ஒருவருக்கொருவர் நீங்கள் வெறுப்பு கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் உறவுகளை துண்டித்து நடக்காதீர்கள். ஒருவருக்கொருவர் நீங்கள் பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கட்டளை இட்டிருப்பது போல் அல்லாஹ்வின் அடியார்களாக – சகோதரர்களாக இருங்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் (பகைத்து) ஒதுக்கி வாழலாகாது.”(புகாரி, முஸ்லிம்)

“கருத்து முரண்பாடு கொள்ளாதீர்கள். ஏனெனில் உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் கருத்து முரண்பட்டு கொண்டார்கள். அதனால் அழிந்து போனார்கள்.” (புகாரி) என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.

மேற்கண்ட இறைவசனம் மற்றும் நபி மொழிகளிலிருந்து சமூக ஒற்றுமை, சகோதரத்துவம் பேணுவது முஸ்லிம்கள் ஒவ்வொருவருவர் மீதும் கடமை என்பதை அறிந்திட கொள்ள முடியும். தற்போதைய காலத்தின் அவசியமும் அதுதான்.

ஒருவர் மீது ஒருவர் குறை காண்பதை விட்டு விடுங்கள். சண்டைகள் வேண்டாம், சில்லறைப் பிரச்சினைகளை பெரிது படுத்த வேண்டாம், அண்மையில் ஆசாத் சாலி அவர்களின் அறிக்கையினைத் தொடர்ந்து SLTJ யின் தலைவருடைய அறிக்கையை பார்க்கும் போது சிருபான்மையினராக இருக்கும் நாம் எங்கள் இருப்பினை கேள்விக் குறியாக்கும் ஒரு கைங்கரியத்தை செய்து கொண்டிருக்கின்றோம். “எலி அறுக்குமாம் தூக்க மாட்டாதாம்” என்ற ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகின்றது.

-சபூர் அதம், அக்கரைப்பற்று-

You may also like...

1 Response

  1. abdur rahuman says:

    Ok your comments however some jam’ath doing shrk and bidhath. How could we make them together. So we can do one thing don’t do the shrk and bidhaah so in shaa allah as we together as real muslim

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *