முஸ்லிம் மக்கள் நன்றி மறவாதவர்கள் முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் அதாவுத

z_p14-Passing


“கேகாலை மாவட்ட முஸ்லிம்களுக்கு நான் செய்துள்ள சேவைகளை அம்மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்”’- எனத் தெரிவித்த முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரட்ன, இம்முறை தேர்தலில் அவர்கள் தம்மை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.
அண்மையில் மாவனல்லையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
கல்வியில் சிறந்து விழங்கும் மாவனல்லையை அந்நிலைக்குக் கொண்டுவருவதற்காக எனது சேவை அளப்பரியது என்பதை நன்றியுள்ள உள்ளங்கள் மறக்கமாட்டா. மாவனல்லை ஸாஹிராக் கல்லூரிக்கு கணினி அறை, கேட்போர் கூடம், கட்டடத் தொகுதிகள் மற்றும் விடுதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து தேசிய பாடசாலையாகவும் தரம் உயர்த்தினோம். அது மாத்திரமல்லாது, 60க்கும் மேற்பட்ட கணினிகளைக் கொண்ட கணனி நிலையம், வாசிகசாலை, கேட்போர் கூடம், உடற்பயிற்சி நிலையம் மற்றும் விளையாட்டரங்கு மற்றும் நவீன வகுப்பறைகளுடன் கூடிய ஆரம்பப்பிரிவு கட்டடத் தொகுதியை 8 கோடி ரூபா செலவில் பிரத்தியேகமாகவும் அமைத்துக் கொடுத்தோம். அப்பாடசாலையை சுற்றியுள்ள அனைத்து வீதிகளையும் விஸ்தீரணப்படுத்தி புனரமைத்தும் கொடுத்தோம்.

இதுபோன்று மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரி, யஹம்மாதகம அல் அஸ்ஹர் வித்தியாலயம், கன்னத்தோட்ட ஸுலைமானியா, வரக்காபொல பாபுல்ஹஸன், உயன்வத்த நூராணியா போன்ற பல பாடசாலைகளுக்கு அவ்வாறான பல அபிவிருத்திகளைச் செய்துள்ளோம்.

நாங்கள் செய்த சேவைகளை சில அரசியல்வாதிகள் மக்கள் மத்தியிலிருந்து மறக்கடிக்கப்பார்க்கிறார்கள். என்றாலும், கேகாலை வாழ் முஸ்லிம்கள் நன்றியுள்ளவர்கள். எனது சேவையை எழிதில் மறக்க மாட்டார்கள்.
அது மட்டுமல்லாது, கொரிய வேலைவாய்ப்புகளை அதிகம் மாவனல்லைக்கு பெற்றுக்கொடுத்ததுடன் அதில் முஸ்லிம் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பையும் வழங்கியிருந்தோம். நீதி அமைச்சராக இருந்தபோது நீதிமன்றங்களில் முஸ்லிம்களுக்கு நான் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்துள்ளேன்.
2001 ஆம் ஆண்டு மாவனல்லைக் கலவரத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறுகிய காலத்துக்குள் நஷ்டஈடுகளைப் பெற்றுக் கொடுத்ததுடன் முஸ்லிம் மக்கள் சார்பாக இருந்து அனைத்து நடவடிக்கைகளையும் நாமே முன்னெடுத்திருந்தோம். அதுபோன்ற ஒரு அசாதாரண சூழல் மீண்டும் ஏற்படாமல் இருக்க இன நல்லிணக்கத்தை மாவனல்லையில் ஏற்படுத்தினோம். கடந்த காலங்களில் பேரினவாதிகள் இப்பகுதிகளில் மேற்கொண்ட பல திட்டங்களும் இதனால் முறியடிக்கப்பட்டன.

பேரினவாத அமைப்புகளுக்கு எதிராக முதலில் பேசிய சிங்களத் தலைவன் நானே. தெவனகல பகுதியில் முஸ்லிம்கள் வாழ்வது கேள்விக்குறியானபோது நாங்கள் அப்பிரச்சினையைத் தீர்த்து வாழ்வதற்கான சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தோம்.

கேகாலை முஸ்லிம்களுக்கே எனது அரசியல் வாழ்வில் அதிக சேவைகளைச் செய்துள்ளேன். இதனால் பெரும்பான்மை மக்கள் என்னைப் புறக்கணித்தனர். ஆகவே மக்கள் உண்மைநிலையை அறிந்துகொள்ள வேண்டும். நன்றியுள்ள முஸ்லிம்கள் என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.- என்றார்.

ராயிஸ் ஹஸன்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *