முஹர்ரம் மாதமும் அதிலிருந்து சில பாடங்களும்

May-Allah-Bless-Us-All-Muharram-Mubarakகாலங்களின் மாற்றத்துக்கு ஏற்ப மனிதனும் மாறிச்செல்லும் போக்கு காணப்படுகிறது. ஆனால் முஸ்லிமின் வாழ்வு என்பது உலகமே மாறினாலும் அவனின் இஸ்லாமிய வாழ்க்கை மாறாது. இதுவே நம்பிக்கையின் பலம். இஸ்லாத்தின் யதார்த்தம். இது சந்தர்ப்ப சூழ்நிலைகள், மனித பிரிவுகள், குழுக்கள் அனைத்துக்கும் வழிகாட்டியாகும்.

இந்நிலையில் உண்மயின் மீது நிலைத்த சிலரை பலவீனப்படுத்தி நசுக்கி அவர்களை அழிக்க நிணைத்த பலவான்களையும் பிரித்தரிவித்த ஒரு சந்தர்ப்பத்தை அல்லாஹ் எமக்கு படிப்பினையாக வைத்துள்ளான்.

இதை சிந்திப்பதற்கு மிகவும் பொறுத்தமான சந்தர்ப்பம் இந்த முஹர்ரம் மாதமாகும். இதுவோர் சடங்கோ சம்பிரதாயமோ அல்ல. சந்தர்ப்பத்துக்கு ஞாபகமூட்டும் போது அதன் தாக்கம் அளப்பரியது. அதன் படி,

அல்குர்ஆனில் அல்லாஹ் பிர்அவ்னுக்கும் மூஸா (அலை) அவர்களுக்குமிடையில் நடந்த நிகழ்வுகளை குர்ஆனில் படம் பிடித்து காட்டுகிறான். இதில் உண்மை எப்போதும் வெற்றிபெறும், உறுதியான பயணம் சரியான இலக்கை அடையச்செய்யும், உலகம் பெரிதாக இருப்பினும் அதையும் படைத்து ஆளும் ஒரு சக்தி மிக்கவன் இருக்கின்றான், தான் நாடியதை செய்பவன், அவனை மிகைக்க யாராலும் முடியாது என்றெல்லாம் பல விடயங்களை சுட்டிக்காட்டுகிறது.

அல்லாஹ்வின் கருணை விசாலமானது. அவ்வாறே அவனின் தண்டணையும் மிகப் பயங்கரமானது. தான் சக்திமிக்கவன், தான் கடவுள், இந்த நதிகள் எனக்கு கீழால் ஓடுகிறது என்றெல்லாம் அல்லாஹ்வை மறுத்து பெருமையடித்தவனை சிறுமைப்படுத்தி அனைவருக்கும் காட்சிப்பொருளாக வைத்துள்ளான்.

இவைகள் வெறுமனே கதைகளும் சம்பவங்களும் அல்ல. முழு மனித சமூகத்துக்குமான எச்சரிக்கைகளும் உபதேசங்களும் ஆகும். இவை காலங்கள் மாறுவது போல் மனிதனின் தீய நடத்தைகளை மாற்றும்.

பெருமை என்பது போலியானது. அதுவே அழிவின் விழிம்பு. படைத்தவனை மறந்து பெறுமையடித்தவனைப் பற்றிய ஒரு விடயம் குர்ஆனில கூறும் போது,

”எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலானோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது). 10:92

இந்த ஃபிர்அவ்னின் நிலைதான் அனைத்து காலத்து ஃபிர்அவ்ன்களுக்கும் எனும் எச்சரிகைகையாகும். ஆட்சி அதிகாரத்தின் சொந்தக்காரன் அல்லாஹ். அதிகாரத்தை அன்பளிப்பாக வழங்குவான். அதை தண்டனையாக எடுக்கும் போது பறித்து எடுப்பான். இவற்றை புரிந்து வாழ்பவன் வெற்றியாளன்.

உலகத்தின் ஆட்சியை வசப்படுத்தி கொடுக்கப்பட்ட ஸுலைமான் (அலை) அவர்களை நிணைவு படுத்தும் போது, குர்ஆன் சிந்தனைக்கும் படிப்பினைக்கும் இவ்வாறு முன் வைக்கிறது

“அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், ‘என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!’ என்று பிரார்த்தித்தார்.” 27:19

உண்மை என்பது பார்வைக்கு பலவீனமானதாக இருப்பினும் அதுவே பலம் பொறுந்தியது. என்றோ ஒரு நாள் ஜெயிக்கும். அதன் போது பொய்யுடையோர் கைசேதப்படுவதால் எந்த பயனும் இல்லை. இதை வரலாற்றை புரட்டிப் பார்க்கும் போது நிதர்சனமாக கண்டு கொள்ளலாம்.

அனைத்துக்கும் அல்லாஹ் ஒரு குறிப்பிட்ட அளவு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளான். அந்த சந்தர்ப்பத்தில் வாழ்க்கை என்பது முக்கியமானது. அதுவே பரீட்சைக்களம் இதில் தேர்ச்சி பெறாவிட்டால், அதன் பின்னரான கைசேதம் அளவிட முடியாது.

இறுதி நேரத்தில் பிர்அவ்ன் கூறியதை அல்லாஹ் குறிப்பிடும் போது

“மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: ‘இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்’ என்று கூறினான். ‘இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்துகொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.” 10:90, 91

1) பலவீனர்களை கொடுமைப்படுத்தி சுயநலத்தை எதிர்ப்பாரக்கும் பலவான்கள் என்றோ ஒரு நாள் அவர்களது பலமும் சுயநலப்போக்கும் அழியும்.

2) இறைவன் மீதுள்ள அசையா நம்பிக்கை எத்தகைய சக்தியையும் அசைத்துவிடும்.

3) உண்மைப் பலமானது, அதை பற்றிப்பிடிக்கும் போது பொய்யர்கள் எதிர்ப்பார்கள், இறுதியில் வெற்றி என்பது உண்மையின் பக்கம்.

4) எதையும் அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து திறம்பட செயற்படும் போது அது உச்சபயனை தரும்.

5) வாழ்வில் நிகழும் நிகழ்வுகள் வெறும் நிகழ்வுகளாக மாத்திரம் எடுத்து கொள்ளாது, அதை மாற்றத்துக்கும், சீர்திருத்ததிற்கும், இறை நெருக்கத்துக்கும் காரணிகளாக எடுத்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு நூற்றுக்கணக்கான படிப்பினைகளை இந்த சம்பவத்தை புரட்டிப்பாரக்கும் போது பெற்றுக்கொள்ள முடியும்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது யூதர்கள் (முஹர்ரம் 10-ஆம் நாளான) ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். யூதர்களிடம் அதுபற்றிக் கேட்கப்பட்டபோது அவர்கள், ‘இந்த நாள் தான் ஃபீர்அவ்னுக்கெதிராக மூஸா(அலை) அவர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் அல்லாஹ் வெற்றியளித்த நாள். எனவே, நாங்கள் மூஸா (அலை) அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அதில் நோன்பு நோற்கிறோம்” என்று கூறினார்கள்.

அப்போது இறைத் தூதர் (ஸல்) அவர்கள், ‘மூஸா(அலை) அவர்களைக் கண்ணியப்படுத்திட நாங்களே அதிக உரிமையுடையவர்கள்” என்று சொல்லிவிட்டு அந்நாளில் (தாமும் நோன்பு நோற்று) நோன்பு நோற்கும்படி (முஸ்லிம்களுக்கும்) உத்தரவிட்டார்கள். (நூல்: புகாரி எண் 3943).

மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?” என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்” என்று கூறினார்கள்.

ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.” (நூல் முஸ்லிம், எண் 2088)

இது இவ்வாறு இருக்க, இஸ்லாமிய சமூகம் தமது தனித்துவத்தையும், சத்திய மார்க்கத்தின் உத்தமர்களின் வழிகாட்டல்களையும், ஒரு சில சில்லரைக் காசுகளுக்காகவும் மனோ இச்சைக்கு அடிபணிந்தும் அன்னிய கலைக் கலாச்சாரத்தை அணுஅணுவாக பின்பற்றுவது எவ்வளவு மோசமானது. அவர்களை விடவும் திறன்பட அவற்றை முஸ்லிம்கள் பின் பற்றுவது படு மோசமானது என்பதை உணரும் போது, விடிவு என்பது எதிர்ப்பார்ப்பு. இதில் விழித்துக்கொள்ளாத போது அதுவே அழிவு என்பது உறுதி.

(அபூ உமர் அன்வார் BA மதனி)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *