மு.காவின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் நீக்கம்? கட்சிப் பணிகள் சபீக் ரஜாப்தீனிடம் ஒப்படைப்பு

கேகாலை மாவட்டத்தில் மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டுமாயின் கட்சியின் மாவட்ட அமைப்பாளரை நீக்குமாறும், கட்சியை வளர்ப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ளுமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மாவனல்லை வாழ் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகால போராளிகளுடனான கலந்துரையாடல் மாவனல்ல, மஹவத்தை பிரதேசத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை முன்னான் மாவனல்லை பிரதேச சபை உறுப்பினர் அமீனுல்லா தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. மேற்படி கலந்துரையாடலின்போதே இக்கோரிக்கை விடுக்கப்பட்டது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கேகாலை மாவட்ட அமைப்பாளராக மாவனல்லயைச் சேர்ந்த MT. மல்ஹர்டீன் அவர்கள் நீண்டகாலமாக பதவி வகித்து வருகின்றார். கேகாலை மாவட்டத்தில் அதிக முஸ்லிம் வாக்குகளைக் கொண்ட மாவனல்ல தேர்தல் தொகுதியில் ஆரம்ப காலத்தில் அவரது தலைமையில் சிறப்பாக கட்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் கேகாலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வளப்படுத்த குறித்த அமைப்பாளர் எந்த நடவடிக்கையும் எடுக்காமையால் 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் கட்சி சின்னாபின்னமாகியுள்ளதாகவும், மாவனல்ல நகரில் கட்சியின் அடையாளம் இல்லாது போயுள்ளதாகவும் இதன்போது குற்றஞ்சாட்டிய ஆரம்பகால போராளிகள், மாவனல்ல நகரில் மீண்டும் மரம் வேர்விட வேண்டுமாயின் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு வேறு ஒருவர் அவ்விடத்துக்கு நியமிக்கப்படவேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து, கேகாலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்துவாழும் மாவனல்ல, ஹெம்மாதகம, ரம்புக்கனை உள்ளிட்ட பிரதேசங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவருமான சபீக் ரஜாப்தீனிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்படும் என கட்சித் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அவர் இதன்போது மேலும் கூறியதாவது:

மாவனல்ல நகரில் 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாரிய பின்னடைவைச் சந்தித்தது. எனினும், எதிர்வரும் காலங்களில் இப்பகுதியில் கட்சியை வளப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சபீக் ரஜாப்தீன் தலைமையில் இப்பகுதியில் கட்சி விஸ்தீரனப் பணிகள் மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும்.

அவர் மாவனல்ல மாத்திரமல்லாது, கேகாலை மாவட்டத்திலுள்ள ஏனைய பகுதிகளுக்கும் விஜயம் செய்து கட்சியை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவார். அத்துடன், இப்பகுதியில் வீட்டுக்கு வீடு மரம் நடும் திட்டத்தையும் விரைவில் மேற்கொள்ளவுள்ளோம்.

மாவனல்ல நகரிலுள்ள சில பகுதிகளில் குடிதண்ணீர்ப் பிரச்சினை காணப்படுகின்றது. அவற்றைத் தீர்த்துவைப்பதற்காக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் இப்பகுதியில் விசேட செயலமர்வொன்றையும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதேவேளை, இளைஞர் யுவதிகளது பிரச்சினைகள் குறித்தும் நாங்கள் ஆராய்வோம்” என்றார்.

(ஆர். எஸ். மஹி)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *