மூன்று பள்ளிவாசல்களில் தொழுகைகளை இடைநிறுத்துமாறு பொலிஸார் உத்தரவு

கொழும்பிலுள்ள மூன்று பள்ளிவாசல்களில் தொழுகைகளை இடைநிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.  தெஹிவளை, அத்திடிய மஸ்ஜிதுல் ஹிபா, களுபோவில மஸ்ஸிதுல் தாருல் சாபீய், தெஹிவளை தாருல் அர்க்கம் ஆகிய பள்ளிவாசல்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த பள்ளிவாசல்களுக்கு சென்ற பொலிஸார் தொழுகைகளை நடத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவு தொடர்பில் பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் கொழும்பு பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் கவனத்திற்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் கொண்டுவந்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கடந்த இரு தினங்களுக்கு முன்னர்  குறித்த மூன்று பள்ளிவாசல்களுக்கு சென்ற பொலிஸார் தொழுகை நடத்தக்கூடாது என்று பள்ளி பாரிபாலன சபையினரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகத்தினர் எனது கவனத்திற்கு கொண்டுவந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்ட அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்”.

“மதத் தலங்கள் மீது மீண்டும் ஆரம்பிக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகளால் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இவ்வாறான மத விடயங்கள் தொடர்பில் தலையீடு செய்வதானது சட்டத்திற்கு முரணானதாகும். பள்ளிவாசல்கள் தொடர்பில் அவற்றை நிர்வாகம் செய்வது வக்பு சபையாகும். நாடாளுன்றத்தில் நிறைவேற்றப்ட்ட சட்டங்களுக்கு அமைய இந்த வக்பு சபை ஸ்தாபிக்கப்பட்டது.

இதனை மீறி பள்ளிவாசல்களை மூடுவதற்கும் அங்கு தொழுகை நடத்துவதற்கும் தடைகளை ஏற்படுத்துவது தொடர்பில் உரிய நடவடிக்கையினையெடுக்க வேண்டும்’ என  பொலிஸ்  மா அதிபரிடம் தெரிவித்துள்ளேன். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெஹிவளை பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் நிர்வாகத்திற்கு விடப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் பாதுகாப்பு தரப்பின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. (TM)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *