விடுமுறையில் சுற்றுப் பிரயாணங்கள் செல்வதை குறைத்துக் கொள்ளுங்கள்- ஜம்இய்யத்துல் உலமா

விடுமுறை தினங்களை நாட்டின் அமைதிக்காகவும், சகவாழ்வுக்காகவும் பயன்படுத்துவோம்.

எதிர்வரும் விடுமுறையைக் கழிப்பதற்காக நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சுற்றுப் பிரயாணங்கள் செல்ல உத்தேசித்துள்ள முஸ்லிம்கள் முடியுமான வரை நாட்டின் தற்போதைய நிலைமையைக் கவனத்தில் கொண்டு அவற்றைக் குறைத்துக் கொள்ளுமாறும், அவ்வாறு செல்பவர்கள் இஸ்லாத்தின் வரையறைகளைப் பேணி நடந்து கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழமை போன்றே இம்முறையும் அனைத்து முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றது.

கடந்த காலங்களில் இவ்வாறான சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டவர்களிற் சிலர் இஸ்லாத்திற்கு முரணான காரியங்களிலும், வீணான பிரச்சினைகளிலும் சம்பந்தப்பட்டதனால் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது என்பதையும் நினைவுபடுத்துகின்றோம்.

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய நல்லெண்ணத்திற்கு கலங்கம் ஏற்படும் வகையிலான எவ்விதமான செயற்பாடுகளிலும் முஸ்லிம்கள் ஈடுபடக் கூடாது என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

இந்நாட்டில் அமைதியைக் குழப்பும் சக்திகளுக்கு பலம் சேர்க்கின்ற நடவடிக்கைகள் இடம்பெறாவண்ணம் அவதானமாக நடந்து கொள்வது பற்றி பொதுமக்களுக்கு விழிப்பூட்டுமாறு கதீப்மார்களையும், இஸ்லாமிய அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

 

அஷ்-ஷெக் எம்.எம்.ஏ. முபாரக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Media Trip

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *