விடைபெறுகிறார் சோபித தேரர்

பௌத்த கோட்பாட்டின் உதாரண புருஷர்

தனியொரு இனத்திற்கு சொந்தமானதல்ல இந்நாடு

எமது நாட்டின் பெரும்பான்மை சமூகத்திலிருந்து நல்லிணக்கத்துக் காகவும் நீதிக்காகவும் ஓங்கி ஒலித்த குரலொன்று தனது மூச்சை நிறுத்திக் கொண்டுள்ளது.

சோபித தேரர் அவர்களின் மறைவானது இந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு மாத்திரமன்றி பெரும்பான்மையின தரப்பில் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஜனநாயகத்தையும் நேசிக்கின்ற மக்களுக்கும் துயரம் தருகின்ற செய்தியாக அமைந்து விட்டது.sobitha

சிங்கள இனத்தைச் சேர்ந்த குடிமகன் ஒருவனின் மறைவுக் காக தமிழர்களோ அல்லது முஸ்லிம் களோ இதுகால வரை இவ் வாறு மன முருகி வேதனைப் பட்டது கிடையாது. அன்புள்ளம் கொண்ட ஒரு மாபெரும் மனிதனை இழந்து விட்டோமென்று சிறுபான்மையினர் துயரம் கொள்கின்றனர். அதேசமயம் நாட்டின் இன்றைய அரசியல் சூழலில் இழக்கக் கூடாத ஒருவரை இழந்து விட்டோமென்ற வேதனையும் சிறுபான்மை மக்களுக்கு உண்டு.

பெளத்த காருண்யத்தின் ஒரு அடையாளமாகவே சோபித தேரரை நாமெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது. மதத்துறவி ஒருவர், தான் சார்ந்த மதத்தைப் பின்பற்றும் மக்களுக்கு மாத்திரம் சொந்தமானவரல்லர். அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களின் காவலனாகவும், ஏனைய மதங்களை மதிப்பளித்தும் பேணும் மனப்பக்குவம் உடையவராகவும் விளங்குதல் வேண்டும். மதங்கள் வலியுறுத்துகின்ற பொதுவான கொள்கை இதுதான்.

இக்கொள்கைக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர் அவர். ‘இந்நாடு அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. அனைத்து மதங்களையும் அனைத்து மொழிகளையும், அனைத்து இனங்களையும் சார்ந்த மக்கள் சகலருமே இந்நாட்டுக்கு உரித்துடையவர்களாவர். பெரும்பான்மை மக்கள் கொண்டுள்ள அனைத்து விதமான உரிமைகளும் சலுகைகளும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் உள்ளன. இவ்வுரிமைகளை மறுப்பது அநீதி; ஜனநாயக விரோதம்’.

இவ்வாறான கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் பகிரங்கமாக எடுத்துக் கூறியவர் சோபித தேரர். இதன் காரணமாகவே பெரும்பான்மை சமூகத்தில் உள்ள இனவாதிகளால் அவர் வித்தியாசமாக நோக்கப்பட்டார். இன ஐக்கியத்தின் மீது அவர் கொண்டிருந்த மனவுறுதிக்கு வேறு விதமான சாயம் பூசினார்கள் இனவாதிகள். சிங்கள இனத்தின் விரோதியாக அவரைப் பார்த்தவர்களும் உள்ளனர்.

எனினும் சோபித தேரர் எதற்குமே அஞ்சியதில்லை. தனது கருத்துகள் காரணமாக சிங்கள மக்கள் தன்னை முழுமையாகவே விரோதமாக நோக்கக்கூடுமென்ற அச்சம் அவரிடம் இருந்ததில்லை. கூற வேண்டிய கருத்துக்களை எவருக்குமே அஞ்சாமல் பகிரங்கமாகவே கூறினார்.

‘இலங்கையின் ஜனாதிபதியாக இரா. சம்பந்தன் கூட ஒருநாள் வரலாம். அதில் தவறு கிடையாது’ என்று கூறுவதற்கு பெரும்பான்மை இனத்தில் எந்தவொரு குடிமகனுக்குமே இதுவரை துணிச்சல் இருந்ததில்லை. சோபித தேரர் மாத்திரமே அவ்வாறான கருத்தைக் கூறினார்.

இவ்வாறானதொரு கருத்தானது இனவாத அரசியல்வாதிகளால் எவ்வாறு கையாளப்படப் போகின்றது என்பதையிட்டோ சிங்கள மக்கள் மத்தியில் இக்கருத்து எத்தகைய தாகத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பது குறித்தோ அவர் தயக்கமோ அச்சமோ கொண்டதில்லை. அனைத்து இனங்களையும் அவர் சமமாக மதித்தார் என்பதற்கு இதனை விட வேறு உதாரணம் அவசியமில்லை.

இன்றைய நல்லாட்சி உதயமானதில் சோபித தேரருக்கும் முக்கிய பங்கு உண்டு. ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம், சர்வாதிகாரம் நிறைந்த ஆட்சி ஒழிக்கப்பட்டு ஜனநாயகத் தன்மையும் நீதியும் நிறைந்த ஆட்சியொன்று மலர வேண்டுமென்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர் அவர்.

முன்னைய ஆட்சியின் தவறான செயல்களை வெளிப்படையாகக் கூறுவதிலும் அவர் தயங்கியதில்லை. சோபித தேரரின் கருத்துகள் பெரும்பான்மை மக்களைச் சென்றடைந்தமையும் ஆட்சியை மாற்றுவதற்கான மக்களின் மனமாற்றத்துக்கான காரணங்களில் ஒன்றெனக் கூறலாம்.

ஜனநாயகத்தை மீண்டும் மலரச் செய்ய வேண்டு மென்ற தனது குறிக்கோளுக்காக அரசியல் தலைவர் களுடன் அவர் நெருக்கமான உறவையும் கொண்டிருந்தார்.

வரலாற்றுப் பாரம்பரியங்கள் கொண்ட இலங்கையில் பெளத்தமும் அரசியலும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்தே இருந்து வந்துள்ளன. எமது நாட்டின் பண்டைய மன்னர்கள் பெளத்த மதத்தை வளர்ப்பதில் அரிய பணிகளைப் புரிந்துள்ளனர்.

அதேசமயம் ஆட்சியாளனை நல்வழிப்படுத்துபவர்களாக பெளத்த குருமார் இருந்து வந்துள்ளனர். பண்டைய மன்னர்களின் அரசாட்சி நீதிநேர்மையுடன் விளங்கியமைக்கு பெளத்த குருமார் பின்புலமாக இருந்ததை இலங்கையின் வரலாறு கூறுகிறது.

சோபித தேரர் ஆற்றியுள்ள பணிகளையும் இவ்வாறான கோணத்திலேயே நாம் நோக்க வேண்டும். இந்நாடு சிங்களவர்களுக்கு மாத்திரமே சொந்தமென்று அவர் கூறவில்லை. தமிழர்களும் முஸ்லிம்களும் இந்நாட்டுக்குச் சொந்தம் கொண்டாட முடியாதென அவர் கூறவில்லை. இந்து, இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் மீது அவர் வெறுப்புக் கொள்ளவில்லை.

இங்குள்ள தமிழர்கள் தமிழ் நாட்டுக்குச் சென்று விட வேண்டுமென்றோ முஸ்லிம்கள் அரபு தேசத்துக்குச் சென்று விட வேண்டுமென்றோ சோபித தேரர் கூறியதில்லை. அனைத்து இன மக்களும் இந்நாட்டின் பிள்ளைகள் என்றே அவர் கூறினார். அனைத்து இனமும் இன, மத, மொழி பேதங்களைக் கடந்து ஒரே நாட்டில் ஐக்கியமாக வாழ வேண்டுமென அவர் விரும்பினார்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினைத் தீர்வை வலியுறுத்திய சோபித தேரர், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் குரல் கொடுத்தவர்.

சோபித தேரர் மறைந்த செய்தியறிந்ததும் தமிழ் அரசியல் கைதிகள் இரங்கல் செய்தி வெளியிட்டதை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது.

பெளத்த மதத் தலைவர்கள் மீது சிறு பா ன்மை மக்கள் கொண்டி ருந்த எண் ணத்தை மாற்றியமை த்தவர் சோபித தேரர். அவரது கொள்கைகள், செயற் பாடுகளுக்கேற்ப சாந்தமான தோற்றத்தையே எப்போதும் வெளிப்படுத்தி வந்தார்.

அன்னாரின் இடம் உண்மையிலேயே நிரப்பப்பட முடியாது. ஐக்கியத்துக்கும் ஜனநாயகத்துக்குமான பயணம் தொடருகின்ற வேளையில் அவரைப் போன்ற மனிதத்துவம் நிறைந்தோரின் இழப்பு துயரம் அளிக்கிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *