ஷவ்வால் தலைப்பிறை சாட்சியங்கள் – ஆய்வு நோக்கு

மற்றுமொருமுறை ஷவ்வால்
தலைப்பிறை இலங்கை முஸ்லிம்
சமூகத்தை பிளவு படுத்தியிருக்கின்றது.
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும்
உங்களது தலைமைக்கும் கட்டுப்படுங்கள்
எனும் இறை கட்டளை மீறப்பட்டதனால்
இந்நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

தலைப்பிறையைக் கண்டதாக
கிண்ணியாவைச் சேர்ந்த
சகோதரர்கள் பலர் சாட்சி
சொன்னதாக நாட்டின் சில
பிரதேசங்களில் பள்ளிவாயல்களில்
அறிவித்தல் விடுக்கப்பட்டு
பெருநாள்பிரகடனப்படுத்தப்பட்டது.
கிண்ணியாவில் பிறை பார்த்தவர்கள் தொடங்கி பள்ளிவாயல்களின் அறிவிப்புக்கிணங்க பெருநாள் அனுஷ்ட்டிக்கப்பட்து வரையான நிகழ்வுகளின் “உம்மத்” எனும் கருத்துநிலை பேணப்பட்டிருக்கின்றதா எனும் வாதப்பிரதிவாதங்கள் ஒரு புறமும், கிடைக்கப்பெற்ற சாட்சியத்தை பிறைக் கமிட்டி நிராகரித்தமை பற்றிய விமர்சனங்களும் வாய்களிலும், சமூகவலைத்தளங்களிலும் எல்லையில்லாமல் பிரவாகித்து ஓடுகின்றன.

இந்த நிலையில் கிண்ணியாவில் தலைப்பிறை காண்பதற்கான வானியல் நிலைமைகளைச் சற்று நோக்குவோம். கிண்ணியா நெட்டாங்கு:81:11:22.0, அகலாங்கு:08:29:56.0, நேரவலயம்:5.50 இல் அமைந்திருக்கும் இடமாகும். கடல் மட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு பிரதேசமாக இதனைக் கருதும்போது07.08.2013ம் திகதி புதன் கிழமை சூரிய அஸ்த்தமனம் மாலை 06.24 மணிக்காகும். கிண்ணியாவுக்கான அமாவாசை இத்தினம் அதிகாலை 2.12 மணிக்காகும். எனவே சூரியன்அஸ்த்தமிக்கின்றபோது அமாவாசைக்குப் பின்னான சந்திர வயது 16 மணித்தியாலங்களும் 13 நிமிடங்களுமாகும். இதே நேரத்தில் சந்திரனின் பிரகாசம் (Illumination) முழுநிலவின் பிரகாசத்தின்0.52 வீதம் மாத்திரமே. இன்னும் சூரியன் அஸ்த்தமிக்கின்றபோது சந்திரனானது சூரியனுக்கு மிக அண்மித்ததாக தொடுவானைத் தொட்டுக்கொண்டிருக்கும். அதாவது சந்திரனானதுதொடுவானத்திலிருந்து 02°:25′:00″ (2.5 பாகை) உயரத்திலேயே நிலை கொண்டிருக்கும்.

இத்தினத்தில் சூரிய உதயத்திலிருந்து (காலை 5.58) சூரியனைப் பின்தொடர்ந்து வந்த சந்திரன் (காலை 6.04) கிண்ணியாவின் மேற்கு வானில் மாலை 6.38 மணிக்கு அஸ்த்தமிக்கின்றது. இப்போதுசந்திரனின் பிரகாசம் 0.53 வீதம் மட்டுமே. சூரியன் அஸ்த்தமித்ததன் பின்னர் 14 நிமிடங்கள் மாத்திரமே சந்திரன் வானில் தரித்திருக்கும்.

சூரியன் அஸ்த்தமிக்கின்ற கணத்திலிருந்து சந்திரன் அஸ்த்தமிக்கின்ற இந்தப் பதிநான்கு நிமிடங்களுக்கும் பிரகாசத்தில் மிகவும் நலிவான இந்தச் சந்திரனின் விம்பமானது வெற்றுக் கண்களுக்கோஅல்லது தொலைநோக்கிகளுக்கோ பிறையாகத் தென்படும் வாய்ப்பு இல்லை. ஏனெனில் சந்திரனின் பின்னணித் திரையான வானத்தில் சூரியனினால் ஏற்படுத்தப்படும் ஒளிர்வு (twilight) சந்திரனின் 0.52 – 0.53 வீத பிரகாசத்தை விடவும் அதிகமாகும். பட்டப் பகலில் வெட்டவெளியில் எரியும் மின்குமிளின் வெளிச்சம் போல என இதனைச் சொல்லலாம். இந்தளவு பிரகாசமான சந்திர விம்பம்தென்படுமளவு வானம் இருளடைவதற்கு முன்னதாகவே சந்திரன் மேற்கு வானை விட்டும் விடைபெற்று விடுகின்றது.

இனி கிண்ணியாவில் தலைப்பிறையைக் கண்டதாகச் சொன்னவர்களின் சாட்சியங்களை அலசுவோம். பிறை கண்டவர்கள் என்று பின்வரும் இருவரின் பெயர்கள் எமக்குச் சொல்லப்பட்டன. மௌலவிறியாஸ் (0775290014), ஜனாப் எம். ஜுஹார்டீன் (0752641313). மௌலவி றியாஸ் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள நாம் பல முறை முயன்றபோதும் சிலபோதுகளில் அவரது தொலைபேசிஇயக்கம் நிறுத்தப்பட்டிருந்தது, சிலபோது அழைப்பு மறுமுனையில் நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் இரண்டாமவரான ஜுஹார்டீன் அவர்கள் நமது அழைப்புக்குப் பதிலளித்தார்.

ஜனாப் எம். ஜுஹார்டீன் அவர்கள் நமக்கு பின்வருமாறு சாட்சியமளித்தார். “நான் மஃரிப் தொழுகையை முடித்ததன் பின்னர் 6.35 மணிக்கு தலைப்பிறையைக் கண்டேன். அது ஆறு நிமிடங்கள் வானில்இருந்தது.”
இவரது சாட்சியத்தில் பின்வரும் பலயீனங்கள் இருக்கின்ற.

கிண்ணியாவில் 07ம் திகதி சூரிய அஸ்த்தமனம் 6.24 மணிக்காகும். இவரது சாட்சியத்தின் படி நோன்பு திறப்பதற்கும் மஃரிப் தொழுவதற்கும் இவர் எடுத்துக்கொண்ட நேரம் 11 நிமிடங்கள் மாத்திரமே.இதில் நடைமுறைச் சாத்தியமற்ற வழுக்கள் தெரிகின்றன. 24 மணிக்கு அதான் ஒலித்தால் வழமை போல 6.34 மணிக்கு இகாமத் சொல்லித் தொழுதால் தொழுகை முடிவடைவதற்கு 10நிமிடங்களாவது எடுக்கும். அவ்வாறாயின் தொழுகை முடிவடையும்போது நேரம் 6.44 ஆக இருக்கும். இருந்தாலும் இந்த நபர் 6.35க்கு தொழுகையை முடித்துக்கொண்டதன் பின்னர் பிறையைக்கண்டதாகச் சொல்கின்றார். தொழுகை முடிவடைவதற்கு முன்னரே 6.38க்கு சந்திரன் அஸ்த்தமித்துவிட்டது என்பது இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

அவ்வாறே அவர் சொல்வது போலவே 6.35 மணிக்கு அவர் பிறையைக் கண்டிருந்தால் அது சாத்தியமானதே. என்றாலும், பிறை வானிலே 6 நிமிடங்கள் இருந்தாகவும் அவர் சொல்கின்றார்.அவ்வாறாயின் அவர் இறுதியாக பிறையைக் காணும்போது நேரம் 6.41. ஆனால் 6.38 மணிக்கே சந்திரன் அஸ்த்தமித்துவிடுகின்றது. இந்த நேர வித்தியாசம் 3 நிமிடங்கள் மிகச் சொற்பமெனப்புறக்கணித்தாலும், சூரிய அஸ்த்தமனத்தின்போது 2.5 பாகை உயரத்தில் இருந்த சந்திரன் 6.35 ஆகும் போது தொடுவானிலிருந்து 1 பாகை உயரத்தில் இருக்கும். தொடுவானுக்கு மிக நெருக்கமாகஇருக்கும் ஒளிப் பலயீனமான பிறையை தொலைநோக்கியினூடாகவும் காண முடியாது. ஏனெனில் புவிப்பரப்பின் மேலாகப் பரவியிருக்கும் வளிமண்டல நீராவி மற்றும் தூசு மண்டலமானது இந்தச்சந்திரனை பார்வைப் புலத்தைவிட்டும் மறைத்துவிடும்.

நாம் தொடர்பு கொண்ட இன்னும் பலர் தாம் பிறை கண்டதாக சூரிய அஸ்த்தமனத்தின் முன்னால் உள்ள நேரத்தையும் (06.15), சந்திர அஸ்தத்தமனத்தின் பின்னாலுள்ள நேரத்தையும் (06.55)தெரிவித்தனர். இவை அலசலுக்கு இடமின்றி நிராகரிக்கப்படுவனவாகும்.

Dr. ஆகில் அஹ்மத்
பிறை ஆய்வாளா மன்றம் ஸ்ரீ லங்கா,
பிறைக்குழு உறுப்பினர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares