ஷெரோனின் ஹெட்ரிக் கோல் உதவியுடன் அபார வெற்றி பெற்றது செரண்டிப் கழகம் 

இலங்கை கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் முதல்தர (டிவிசன் 1) பிரிமீயர் லீக் பிரிவில் கந்தான பழைய மாசெனோடியன்ஸ் கழகத்துக்கு எதிரான போட்டியில் ராஜ் ஷெரோனின் ஹெட்ரிக் கோல் உதவியுடன் 5:3 என்ற கோல்கள் கணக்கில் மாவனல்லை செரண்டிப் கழகம் அபார வெற்றி பெற்றது.
கண்டி, திகன விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இப்போட்டி ஆரம்பம் முதலே மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது.
போட்டி ஆரம்பமாகி சில நிமிடங்களில் தமது முதல் கோலினை செலுத்திய மாசெனோடியன்ஸ் கழகம் போட்டியில் முன்னிலைப்பெற்றது. தொடர்ந்து செரண்டிப் கழகத்தின் தலைவரும் நட்சத்திர வீரருமான ராஜ் ஷெரோன் இதற்குப் பதில் கோலினை ஹெடர் மூலம் செலுத்தினார்.
மாசெனோடியன்ஸ் தனது இரண்டாவது கோலை செலுத்த ஆட்டம் சூடு பிடித்தது. முதல் பாதி நிறைவடைய 2 நிமிடங்கள் இருக்கும் நிலையில் செரண்டிப் கழகத்தின் முன்கள வீரர் மொஹமட் ஆசிர் வழங்கிய ‘குரோஸ் பாஸை’ தலையால் முட்டி கோலுக்கு செலுத்தினார் ஷெரோன். இதன் அடிப்படையில் முதல்பாதியாட்டம் 2:2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது.
கடும் மழைக்கு மத்தியில் ஆரம்பமான இரண்டாவது பாதியாட்டத்தில் தமது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய செரண்டிப் கழகம் அடுத்தடுத்து இரண்டு கோல்களைச் செலுத்தியது. அதனை அணித்தலைவர் ராஜ் ஷெரோன் மற்றும் தரிந்து லியனகே ஆகியோர் பெற்றுக்கொடுத்தனர்.
முன்கள வீரர்களின் சிறந்த பந்து பறிமாற்றலுடன் கிடைக்கப் பெற்ற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட மாசெனோடியன்ஸ் கழகம் தமது மூன்றாவது கோலைச் செலுத்தி ஆட்டத்தை சமப்படுத்த போராடியது. எனினும், செரண்டிப் கழகத்தின் பின்கள வீரர்களின் சிறப்பான தடுப்பாட்டம் எதிரணி வீரர்களை முன்னேறவிடாது தடுத்தது.
இந்நிலையில், போட்டியில் 85 ஆவது நிமிடத்தில் செரண்டிப் கழகத்துக்கு கிடைத்த மற்றுமொரு வாய்ப்பை சிமோன் கோலாக மாற்றினார். இதனிடையே போட்டி நடுவருடன் பழைய மாசெனோடியன்ஸ் வீரர்கள் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டதால் போட்டி சில மணி நேரம் தடைப்பட்டது.
போட்டியை சமப்படுத்த தொடர்ந்தும் போராடிய மாசெனோடியன்ஸ் அணியால் மேலதிக கோல்கள் எதவும் பெற முடியவில்லை. இந்நிலையில் ஆட்ட நேர முடிவில் 5:3 என்ற கோல்கள் கணக்கில் மாவனல்லை செரண்டிப் கழகம் வெற்றி பெற்றது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares