ஸ்ரீ லங்கா முஸ்லிம் பேரவை அதிமேதகு ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கவுள்ள மகஜர்

இலங்கை முஸ்லிம்களின் தேசிய மட்டத்திலான பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடி  காத்திரமான முடிவுகளை எட்டுவதற்காகவும் சமுகத்திற்கான நீண்டகால திட்டங்களை வகுப்பதற்காகவும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்த தேசிய ஷுறா சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் அண்மைக்காலமாக உணரப்பட்டு வந்ததை நாம் அனைவரும் அறிவோம்.

எனவே, அது தொடர்பாக சமூகத்திலுள்ள பலதரப்பினருடனும் மேற்கொள்ளப்பட்ட  கலந்துரையாடல்கள் இப்படியான ஓர் அமைப்பின் அவசியத்தை மேலும் வலியுறுத்துவதாக அமைந்தன. இத்தொடரில் மிக முக்கிய முன்னேற்றமாக நாட்டிலுள்ள தஃவா அமைப்புக்கள், தேசியமட்ட முஸ்லிம் சிவில் அமைப்புகள், மற்றும் பல்துறைசார் முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டு கொழும்பு பெரிய பள்ளிவாயலில் கடந்த 23.07.2013 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் தேசிய ஷூரா சபை  உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

இந்த ஷூரா சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் பேரவை (Sri Lanka Muslim Assembly) எனும் பெயரில் இயங்கும் எனத் தீர்மானிக்கப்பட்டதுடன் இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் தஃவா அமைப்புக்கள், முஸ்லிம் சிவில் அமைப்புகள் என்பவற்றின் பிரதிநிதிகளையும், பல்துறைசார் முக்கியஸ்தவர்களையும் கொண்ட இடைக்கால ஷூரா (நிறைவேற்றுக்குழு) ஒன்றும் தெரிவுசெய்யப்பட்டது.

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் தனது தனித்துவ அடையாளத்தைப் பேணிக்கொள்வதுடன் முஸ்லிம் சமூகம் உட்பட இலங்கை வாழ் சகல சமூகங்களும் சமாதானமாகவும், சகவாழ்வுடனும், ஐக்கியப்பட்டு வாழவேண்டும் என்பதே ஸ்ரீ லங்கா முஸ்லிம் பேரவையின் நோக்கமாகும்.  இது தனது முதல்கட்ட நடவடிக்கையாக, அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக தோன்றியுள்ள தீவிரவாத அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்து  மான்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு விளக்கி, நாட்டின் ஒற்றுமையையும் இனங்களுக்கிடையிலான நல்லுறவையும் கட்டியெழுப்பி, முஸ்லிம் சமூகத்தின் கண்ணியத்துக்கும் நம்பிக்கைக்கும் உரமூட்டுமாறு வேண்டிக்கொள்ளும் (மகஜர்) ஒன்றைக் கையளிக்கத் தீர்மானித்துள்ளது.

முஸ்லிம் சமூகத்தை பிரதான இலக்காக் கொண்டு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றி பிழையான பல தப்பபிப்பிராயங்களைப்  பரப்புதல், புனிதமான வணக்கஸ்தலங்களுக்கு எதிராக செயற்படல், இஸ்லாத்தை தவறாக விமர்சித்தல் போன்றவற்றின் மூலம் பிரச்சினைகளை ஏற்படுத்தி நாட்டின் கௌரவத்தையும், இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும், சமூக சகவாழ்வையும் சீர்குலைத்து வரும் அந்த தீய சக்திகளின் செயற்பாடுகள் தொடர்பாக அமையவுள்ள அம்மகஜரில் நாட்டிலுள்ள முஸ்லிம் ஆண், பெண் இருபாலாரும் கையொப்பமிட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் பேரவை (SLMA)எதிர்பார்க்கிறது. அந்த வகையில் மகஜரின் பிரதிகள் இலங்கையிலுள்ள அனைத்துப் பள்ளிவாயில்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

அம்மகஜரை பள்ளி நிருவாகிகள் ஊர் ஜமாஅத்தினர்களுக்கு வாசித்துக் காட்டி, எதிர்வரும் நோன்புப் பெருநாள் தினம் அன்று கூடும் சகலரிடமும் கையொப்பத்தை பெற்று கூடிய விரைவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் பேரவைக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இது தொடர்பான ஆவணங்களை இதுவரை பெற்றுக்கொள்ளாத மஸ்ஜித் நிருவாகிகள் www.nationalshoora.com எனும் வெப்தளத்தில் இருந்து மகஜரின் பிரதியை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் எனபதைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேவேளை SLMA தொடர்பான மேலதிக தகவல்களையும், அறிவித்தல்களையும் பெற்றுக்கொள்ள @muslimassembly என்ற Twitter சேவையையும் என்ற www.facebook.com/muslimassembly என்ற பேஸ்புக் முகவரியையும் நாடமுடியும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares