100 வருடத்தை எட்டவுள்ள ஸாஹிரா, பதுரியா கல்லூரிகள், இன்னும் எட்டப்படாத அடைவுகளும்

262287_244298545581551_8326241_n

அரபு கிராமத்து வழக்கில் ஒட்டகத்திற்கும் குதிரைக்குமிடையிலான வித்தியாசம் பின்வருமாறு சொல்லப்படுவது வழமை.
தூர பயணங்களின் போது குதிரை வேகமாக ஓடி களைத்துவிட்டால் அதன் பின்னர் அது ஓடாது, முன்னேறாது. “இவ்வளவு தூரம் உனக்காக ஓடினேன் என்று தான் கடந்து வந்த பாதையை பெருமையாக சொல்லும், ஆனால் ஒட்டகம் மெதுவாக அதன் இலக்கை நோக்கி பயணிக்கும், அதன் கவனம் எப்போதுமே தன் பயண இலக்கை நோக்கியே இருக்கும்.

95 வருடங்களை கடந்த இரண்டு பாடசாலைகளையும் அதன் எதிர்கால இலக்குகள் பற்றி கவலை இக்கட்டுரை எழுத தூண்டுதலாக அமைந்தது.

மாவனல்லையிலுள்ற ஸாஹிரா 2021 இலும் பதுரியா 2018 இலும் தமது நூற்றாண்டு விழாவினை எதிர்நோக்கியுள்ளது. இந்த இரண்டு பாடசாலைகளினதும் சேவையும் சாதனைகளும் மட்டிட முடியாதவை என்பதில் எள்ளவிலும் சந்தேகமேயில்லை.

இலங்கையிலுள்ள முன்னணி பாடசாலைகள் தமது நூற்றாண்டை அடையும் போதிருந்த நிலைமையும் எமது பாடசாலைகள் அவற்றிற்கு ஈடாக தமது பயண இலக்கை நிர்ணயித்துள்ளதா எனப் பார்க்கும் போது நாம் பின்தங்கியுள்ளோம் என்பது கசப்பான உண்மை.

நாம் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் பல காணப்பட்ட நிலையில் இவ்விரு பாடசாலைகளின் பொருளாதார வலிமை பற்றி சற்று இங்கே கூற விரும்புகிறேன். இன்னமும் பாடசாலை நிகழ்வுகளின்போது நான்கைந்து பைலைத்தூக்கி கொண்டு ஊரில் நிதி திரட்டுவதிலும், தனவந்தர்களின் தயவிலும் தான் தங்கியுள்ளோம். ஆனால் ஏனைய பாடசாலைகளும் அதன் பழைய மாணவர் அமைப்புகளும் நிரந்தர வருமானம் பாடசாலைக்கு உள்வரக்கூடிய நிலையில் அதன் வளங்களை சிறப்பாக திட்டமிட்டு செயற்படுவதை காண்கிறோம்.

மாகொல முஸ்லிம் அனாதை நிறுவனத்திற்கு நிதி சேகரித்து சென்றபோது நளீம் ஹாஜியார் (ரஹ்) அவர்கள் கொள்ளுப்பிட்டியில் அலரி மாளிகைக்கு முன்னால் காலி வீதியில் அமைந்துள்ள தனது ஒரு கட்டிடத்தை அன்பளித்தார். அவ்வாறு செய்யாதிருந்தால் மாகொல அனாதை நிறுவனம் ஒவ்வொரு டிசம்பரிலும் கலண்டருடன் வந்திருப்பார்கள் உங்கள் வீட்டிற்கும்.
கொழும்பிலுள்ள அநேகமான பாடசாலைகள் 2.30 மணிக்குப் பிறகும் விடுமுறை நாட்களிலும் பாடசாலைக்கு வருமானத்தை ஈட்டும் வகையில் செயற்படுவதனை பார்க்கும் போது ஆச்சரியமளிக்கிறது. பழைய மாணவர்கள் மாலை நேரங்களில் பணம் செலுத்தி ஜிம், நீச்சல் தடாகம், ஏனைய உள்ளரங்க விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர், கேட்போர் கூடங்கள் தனியார் பல்கலைக்கழகங்களின் பரிசளிப்பு மற்றும் பட்டமளிப்பு நடக்கும் இடங்களாக மாறியுள்ளன.

இது போன்று சிறந்த வகையில் திட்டமிட்டு பாடசாலை பணத்தேவைக்காக வெளி ஆட்களிடம் பிச்சை எடுக்கும் நிலைமை இருந்து காப்பாற்றப்பட்டுள்ளன. எமது பாடசாலைகளும் பழைய மாணவர் அமைப்புகளும் இந்த நிலையின நோக்கி பயணிக்க வேண்டியுள்ளது.

இன்று மாவனல்லையிலும் ஏனைய நகரங்களிலும் சொந்தமாக ஒன்றுக்கு மேற்பட்ட கடைகள் வைத்து மாதாந்த வாடகை மூலம் இலட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளனர்? இன்னமும் அன்றாடம் சம்பாதித்து வாழ்பவர்கள் போல மாதாந்தம் நிதி திரட்டி அந்த மாத செலவுகளை மிக்க கஷ்டப்பட்டே நம் பாடசாலைகளின் அபிவிருத்தி சங்கமும் பழைய மாணவர் அமைப்புகளும் இருக்கின்றன.

இந்த நிதி திரட்டும் சுமைகளையும் கவலைகளையும் பாடசாலை நிர்வாகத்திடமிருந்தும், பழைய மாணவர் அமைப்பு, அபிவிருத்தி சங்கத்திடமிருந்தும் அகற்றாத வரை அவர்களாலும் நூறாவது ஆண்டின் சாதனைகளை நோக்கி பயணிப்பது மிக்க கடினமானதொன்றாகவே இருக்கும்.

மாவனல்லை நகரத்திலுள்ள ஏறக்குறைய 16 ஷொப்பிங் கம்பளக்ஸ் இவ்விரு பாடசாலை பழைய மாணவர்களுக்கு சொந்தமானவையாகும். 20000-50000 ஆயிரம் வரை மாத வாடகை தரவல்லன ஒவ்வொரு கடைகளும். (கடைகள் ஏற்கனவே விற்கப்பட்டிருந்தாலும் மொத்த பொருளாதார வலுவின எடுத்து சொல்லவே இங்கு இவை குறிப்பிடப்பட்டன), இது போலவே தேர்தல் காலங்களின் போது தனவந்தர்கள் சாதாரண பிரதேச சபை வேட்பாளர்கள் தொடக்கம் பாராளுமன்ற வேட்பாளர் வரை ஐம்பது இலட்சம் வரையிலும் தானமாக அளித்தவர்களும் நம்மிலுள்ளனர்.இது போக தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகள்,காணிகள் என வாங்கி குவிப்போருமிருக்கின்றனர்.

இவர்களெல்லாம் இப்போது பாடசாலைக்கும் சமூகத்திற்கும் செலவளிப்பது கண்ணுக்கு விளங்கவில்லையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவர்கள் செலவளிக்கவில்லை என்று நாம் கூற வரவில்லை. இவர்கள் இன்று செலவளிப்பது போல நாளை இவர்களது பிள்ளைகள் செலவளிப்பார்களா என்பதும், இதே பொருளாதார நிலைமை தொடர்ச்சியா இருக்குமா என்பதுமே எமது கேள்வி. சிறப்பாக திட்டமிட்டு நிரந்தரமாக வருமானத்தை உள்வாங்கினால் பைல் தூக்கி கொண்டு பஜாரிலே சீரழியும் கலாசாரத்தை இல்லாதொழிக்கலாம்.

-சப்ராஸ் மொஹமட்  –

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares