இலங்கை முஸ்லிம் பேரவையின் மகஜரை ஜனாதிபதியிடம் கையளிப்பு

நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக பல அமைப்புக்கள் மூலம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள விசமப் பிரச்சாரங்களை நிறுத்துமாறு அரசாங்கத்தை வேண்டி, நாட்டின் நாலா திசையிலும் பரந்துவாழும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புனித ஈத் பெருநாள் தினத்தில் கையொப்பமிட்ட ஈத் மகஜரை அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு இன்றைய தினம் கையளிப்பதுடன், இலங்கை முஸ்லிம் பேரவை (Sri Lanka Muslim Assembly -SLMA) தனது முதல் பணியை ஆரம்பித்து வைப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றது என அவ்வமைப்பு வெளியிட்டுள்ள உடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேற்படி மகஜரை ஜனாதிபதியின் செயளாலர் திரு. லலித் வீரதுங்க அவர்களிடம் இலங்கை முஸ்லிம் பேரவையின் தலைவர் ஜனாப் தாரிக் மஹ்மூத் தலைமையிலான பிரதிநிதிகள் குழு இன்று புதன்கிழமை (06-11-2013) கையளித்துள்ளது. இக் குழுவில் பேரவையின் உதவித் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் ஈரான் நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் ஜனாப் எம்.எம். ஸுஹைர், பேரவையின் பொருளாளர் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம் (AMYS), பேரவையின் செயலாளர் ஜனாப் ஏ.ஏ.எம். இஸ்மாயில் மற்றும் SLMA நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான சட்டத்தரணி ஜாவித் யூசுப் (சவூதி அரேபியா நாட்டிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர்), கொழும்பு பெரிய பள்ளிவாயில் பிரதம கதீப் மௌலவி எம். தஸ்லீம், ஜனாப் கே.என். டீன் (தேசிய தலைவர், அகில இலங்கை YMMA சம்மேளனம்), சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் (தேசிய தலைவர், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணிகளின் சம்மேளனம்) சகோதரர் ஏ.எல். ஹகீம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கை முஸ்லிம் பேரவையினால் முன்வைக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் வேண்டுகோளை ஜனாதிபதியின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்வதாகவும், பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு முடிவடைந்ததன் பின்னர் அனைத்து மதத் தலைவர்களும் உள்ளடங்கிய மாநாடு உள்ளிட்ட இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க SLMA பிரதிநிதிகள் குழுவினரிடம் வலியுறுத்திப் பேசியுள்ளார்.

இலங்கை முஸ்லிம் பேரவை முன்னெடுத்த கையொப்பம் திரட்டும் பணிக்கு அண்ணளவாக 600முஸ்லிம் கிராமங்களிலிருந்து சுமார் 196,000 முஸ்லிம் சகோதர சகோதரிககளின் பூரண பங்களிப்பும் ஆதரவும் கிடைக்கப்பெற்றுள்ளது.

சில தீவிரவாதச் சக்திகள் நாட்டின் இன ஒற்றுமையை சீர்குலைத்து, இனங்களுக்கிடையே பிரிவினையையும் குரோதத்தையும் வளர்த்து மூன்று தசாப்தகால யுத்தத்தின் முடிவுக்குப் பின் பல இன்னல்களுக்கு மத்தியில்   அடையப்பெற்ற தேசிய சமாதானம், சகவாழ்விற்கு பங்கம் விளைவிக்க எத்தனித்து வருகின்றனர் என்ற விடயத்தை மேற்படி மகஜர் சுட்டிக்காட்டுகிறது.

அம்மகஜரில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“குறிப்பிட்ட சில வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தீவிரவாத அமைப்புக்கள், மஸ்ஜித்களைக் குறிவைத்துத் தாக்குதல், முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் பற்றி திரிபுபடுத்திய விடயங்களையும்,வதந்திகளையும் பரப்பி இனங்களுக்கிடையே பதட்ட நிலையையும் முறுகல் நிலையையும் தூண்டி வருகின்றனர்.

*இந்நகர்வு முறியடிக்கப்படாவிடின், நிச்சயமாக முஸ்லிம்களை இலக்குவைத்த ஒரு இனக்கலவரத்துக்கு வழிவகுக்கலாம். இந்த தீவிரவாத அமைப்புக்களால் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட நாசகாரச் செயல்கள் மூலம், உங்கள் தலைமையிலான நாட்டின் நற்பெயருக்கும் பௌத்த சமயத்துக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.

*இந்தக் குழுக்களினால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஆரோக்கியமற்ற சூழல், நாட்டின் முன்னேற்றத்திற்காகச் செயற்படும் உங்களது அரசாங்கத்துக்கும், சர்வதேச மட்டத்தில் நாட்டிற்கு உள்ள நற்பெயருக்கும், இலங்கையில் வாழும் வெவ்வேறு சமூகங்கள் மத்தியில் காணப்படும் பரஸ்பர மதிப்புணர்விற்கும் நட்புணர்விற்கும் சகவாழ்விற்கும் பாரியதோர் அவப்பெயரைப் பெற்றுத் தரும் என நாம் நம்புகின்றோம்.

*இஸ்லாமிய சமய நடவடிக்கைகள் மற்றும் முஸ்லிம் சமூகம் மீதான இலக்குவைத்த தாக்குதலை நிறுத்துவதற்குத் தேவையான உரிய நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறும், அதேபோல இனங்களுக்கிடையே சகோதர உணர்வையும், சகவாழ்வையும் மேம்படுத்துவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடம் நாம் வினயமாக வேண்டிக் கொள்கின்றோம்.”

 சிவில் சமூக தலைவர்கள், துறைசார் நிபுணர்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உள்ளிட்ட சக சமூக அமைப்புக்களுடனான பல சுற்று கலந்துரையாடல்களின் பின்னர் இலங்கை முஸ்லிம் பேரவைSLMA நிறுவப்பட்டது.

சூறா அடிப்படையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சமகால விவகாரங்களைக் கலந்துரையாடி, ஆலோசனைபெற்று, அது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு, சமூகத்தின் பங்காளர்களுக்கும் அமைப்புகளுக்கும் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் வழங்கும் பாரிய விடயப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு இலங்கை முஸ்லிம் பேரவை செயற்படுகின்றது என அவ்வமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SLMA2

SLMA

SLMA1

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *