கற்பித்தல் உத்திகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய உத்தமர் முஹம்மத் (ஸல்) அவர்கள்

லகம் இருக்கும் வரையும் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனதும் இம்மை, மறுமை வாழ்வின் சுபீட்சத்திற்கும் விமோசனத்திற்கும் நேர்வழிகாட்டக் கூடிய இறுதித் தூதராக அனுப்பப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்களை சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்தஆலா சகல அம்சங்களிலும் முழுமை படுத்தி வைத்திருந்தான். அதனால் ஒவ்வொரு மனிதனதும் ஈருலக விமோசனத்திற்குத் தேவையான வழிகாட்டல்களை அன்னாரது 23 வருடகால இறைத்தூதுத்துவ காலப்பகுதியில் உலகிற்கு அருளி அதனை செலுருப்படுத்தியும் காட்டியுள்ளான் அல்லாஹ்.

அதேநேரம் அல்லாஹ் தமக்களித்த அனைத்து பொறுப்புக்களையும் பணிகளையும் முஹம்மத் (ஸல்) அச்சொட்டாக நிறைவேற்றினார்கள். அதனால் உலகம் இருக்கும் வரையும் பிறக்கின்ற ஒவ்வொருவருக்கும் முன்னுதாரணம் மிக்கவராக அன்னார் ஆக்கப்பட்டுள்ளார். இது மிகத் தெளிவானது.2013-01-25-HappyMilaad.ProphetBirthday.MikeGhouse-415x260

இருந்தும் பெரும்பாலானவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களை அ.ல்லாஹ்வின் இறுதித்தூதராகவும் பிரசாரகவும் மாத்திரம் தான் பார்க்கின்றனர். அறிந்து வைத்திருக்கின்றனர். இதுதான் பெரும் கவலைக்குரிய நிலைமையாகும்.

எழுத வாசிக்கத் தெரியாத உம்மி நபியான முஹம்மத் (ஸல்) அவர்கள் தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, மாத்திரமல்லாமல் சமூக வாழ்விலும் முன்மாதிரி மிக்கவராக விளங்குகின்றார். அன்னார் சிறந்த பிரசாரகராகவும், ஆசானாகவும், வழிகாட்டியாகவும் மாத்திரமல்லாமல் சிறந்த ஆட்சியாளர், நீதிபதி, படைத்தளபதி, தலைவர் எனப் பலதரப்பட்ட தகைமைகளையும் ஒருங்கே கிடைக்கப் பெற்ற மாமனிதராகவே திகழுகின்றார்.

இவ்வாறு சிறப்புற்று விளங்கும் முஹம்மத் (ஸல்) அவர்கள் இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்னர் சவூதிய அரேபியாவிலுள்ள மக்கா பிறந்து மக்கா, மதீனாவில் வாழ்ந்தவராவார். அல்லாஹ்வின் இறுதித் தூதரான அன்னாரின் வழிகாட்டல்களும் போதனைகளும் இன்றைக்கும் நடைமுறைச் சாத்தியம் மிக்கவையாகவே உள்ளன. இதேநிலைதான் உலகம் இருக்கும் நீடித்து நிலைக்கும். இது உறுதியானது.

அந்தவகையில் நபி (ஸல்) அவர்கள் கற்பித்தல் துறைக்கு அளித்துள்ள பங்களிப்பு குறித்து கவனம் செலுத்துவது இன்றைய காலத்தின் மிக அவசியத் தேவையாக உள்ளது. ஏனெனில் அறிவியலில் அபரிமித வளர்ச்சியை அடைந்திருக்கின்ற உலகில் கற்பித்தல் துறையில் புதிய புதிய சிந்தனைகளும் கொள்ளைகளும் மாத்திரமல்லாமல் புதிய புதிய உத்திகளும் நுணுக்கங்களும் கூட அறிமுகப்படுத்தப்படுகின்றன. இவை நவீன அறிவியல் வளர்ச்சியின் பிரதிபலன்கள் என்று கருதப்படுகின்றன.

ஆனால் இக்கற்பித்தல் உத்திகளை ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் உலகம் இன்று போன்று அறிவியலில் வளர்ச்சி அடைந்திராத ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த முஹம்மத் (ஸல்) அவர்களால் தமது 23 வருட கால இறைத் தூதுத்துவ காலப்பகுதியில் அதாவது கி. பி. 571 முதல் கி .பி. 634 வரையான காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதற்கு தெளிவான ஆதாரங்கள் நபிமொழிக் கிரந்தங்களில் நிறைந்து காணப்படுகின்றன.

இது நவீனம் தான் எல்லாம் எனக் கருதுபவர்களுக்கு பெரும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கலாம்..ஆனால் ஆச்சரியப்படவோ அதிசயப்படவோ ஒன்றும் இல்லை. இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன கற்பித்தல் உத்திகள் அனைத்தும் நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தியவை என்பது மிகத் தெளிவானது.

அந்தவகையில் ஒரு முறை முஹம்மத் (ஸல்) அவர்கள் “நான் கற்பிப்பவனாகவே அனுப்பப்பட்டுள்ளேன்“ என்று கூறினார்கள்.

(ஆதாரம் இப்னு மாஜா 225)

இதேநேரம் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் பத்து வருடங்கள் பத்து வருடங்கள் ஊழியனாகக் கடமையாற்றிய அனஸ் (ரலி) அவர்கள், “ நபி (ஸல்) அவர்களைப் போன்ற ஒரு மென்மையான ஆசானை என் வாழ்நாளிலேயே நான் கண்டதில்லை“ என்று கூறியுள்ளார். (ஆதாரம் முஸ்லிம்)

ஆகவே நபி (ஸல்) அவர்கள் தனது 23 வருட கால இறைத்தூதுத்துவ காலப்பகுதியில் கற்பித்தல் துறைக்கும் அளப்பரிய பங்களிப்பை நல்கியுள்ளார்கள் என்பதை இவை தெளிவுபடுத்துகின்றன. இதற்கு நபிமொழித் தொகுப்புக்கள் மிகச் சிறந்த ஆதாரங்களாக உள்ளன.

கற்பவரை சளிப்படைய விடாமை

நபி (ஸல்) அவர்கள் மணித்தியாலயக் கணக்கில் சொற்பொழிவு நிகழ்த்தக் கூடிய பேச்சாளராக இருக்கவில்லை. மாறாக ஒவ்வொரு விடயத்தையும் மிகத் தெளிவாகவும், எளிய முறையிலும், எவரும் இலகுவாகப் புரிந்திடக் கூடியவகையிலும், எவரும் சளிப்படைந்திடாத வகையிலும், நளினமான முறையில் முன் வைக்கக் கூடியவராக இருந்தார்கள். அதாவது “மக்கள் சளிப்பு அடைந்துவிடக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் நிலைமையை அறிந்து பக்குவமாக அறிவுரை செய்யக் கூடியவராகவும் கல்வி புகட்டக் கூடியவராகவும் இருந்தார்கள் என்று நபித் தோழர் ஒருவர் அறிவித்துள்ளார்.(ஆதாரம் புகாரி)

அதேநேரம் நபித் தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் மஸூத் (ரலி) அவர்கள் “ நாங்கள் சளிப்படைந்து விடக் கூடாது என்பதற்காக எமக்கு உபதேசம் செய்யவென சில நாட்களை நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்தி இருந்தார்கள்“ என்று குறிப்பிட்டுள்ளார். (ஆதாரம் புகாரி – 68)

மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் எவரையேனும் தமது (அரசியல் மற்றும் மார்க்கப்) பணிக்காக அனுப்பும்போது “மக்களுக்கு நற்செய்திகளையே அதிகமாகக் கூறுங்கள். (அவர்களுக்கு) வெறுப்பை ஏற்படுத்தி விடாதீர்கள். அவர்களிடம் எளிமையாக நடந்து கொள்ளுங்கள். அவர்களைச் சிரமப்படுத்தி விடாதீர்கள்“ என்று கூறி அனுப்புவதாக அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(ஆதாரம் முஸ்லிம் 3569)

தமது போதனை மற்றும் கற்பித்தலால் எவரும் சளிப்படைந்து விடக் கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள். இதற்கென அன்னார் பல உத்திகளையும் கையாண்டுள்ளார்கள்.

எளிய மொழி நடை

மேலும் தம் போதனைகளின் போதும், கற்பித்தலின் போதும் மிகவும் எளிய மொழிநடையையும்,கருத்தாழம் மிக்க சொற்களையுமே பயன்படுத்தக் கூடியவராக நபி (ஸல்) அவர்கள் இருந்துள்ளார்கள். அதனால் தான் ஆயிஷா (ரலி) அவர்கள், “முஹம்மத் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் நாம் விரல்விட்டு எண்ணிக் கொள்ளும் அளவுக்கு மிகக் குறைவாகவே இருக்கும்“ என்று கூறினார். அதன் பயனாகவே முஹம்மத் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஸஹாபாக்களால் அச்சொட்டாக மன்னமிட்டுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், “ஒரு பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்“. என்று குறிப்பிட்டார்கள்.

(ஆதாரம் புகாரி – 1417 )

மற்றொரு சந்தர்ப்பத்தில், “உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது“ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

(ஆதாரம் புகாரி 1427)

அன்னாரின் எளியமொழி நடை பாவனைக்கு இவ்வாறு நிறைய நபிமொழிகளை உதாரணத்திற்குக் குறிப்பிடலாம். இந்நபிமொழிகள் சுருக்கமானதாகவும், கருத்தாழம் கொண்டவையாகவும் விளங்குகின்றன.

அறிவு தரத்திற்கு ஏற்ப உரையாற்றுதல்.

அதேநேரம் நபி (ஸல்) அவர்கள் அவரவரின் அறிவு தரத்திற்கும் புரிந்து கொள்ளும் திறனுக்கும், சூழ்நிலைக்கும் ஏற்பவே உரையாற்றக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள். ஏனெனில் எல்லோரது அறிவுத்தரமும் புரிந்து கொள்ளும் ஆற்றலும், சூழ்நிலையும் ஒரே விதமானவை அல்ல என்பதை அன்னார் நன்றாக அறிந்து வைத்திருந்தார்.

அந்தவகையில் ஒரு தடவை அபூதர் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் “எனக்கு உபதேசம் செய்யுங்கள்“ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள். நீ ஒரு குற்றத்தை செய்து விட்டால் அதனைத் தொடர்ந்து ஒரு நன்மையைச் செய்து அக்குற்றத்தை அழித்துவிடு.. மக்களுடன் நற்குணத்துடன் நடந்த கொள்“ என்று அறிவுரை செய்தார்கள்.

(ஆதாரம் முஸ்னத் அஹ்மத் – 20392, திர்மிதி 1910)

மற்றொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்களிடம் வருகை தந்த நபரொருவர், “அல்லாஹ்வின் தூதரே ! எனக்கு ஏதேனும் உபதேசம் செய்யுங்கள். ஆனால் அதிகம் வேண்டாம். ஏனெனில் நான் (என்றென்றும்) மனதில் வைத்திருக்க வேண்டும்“ என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “கோபத்தைக் கைவிடு“ என்று அறிவுரை கூறினார்கள். அந்நபர் திரும்பவும் “உபதேசம்“ செய்யுமாறு கேட்டார்.

திரும்பவும் நபி (ஸல்) அவர்கள் “கோபத்தைக் கைவிடு என்று கூறினார்கள். இந்நபர் பல முறை கேட்டும் இதே பதிலையே நபிகளார் கூறியதாக அபூஹூரைரா (ரலி) அறிவித்துள்ளார். (ஆதாரம். புகாரி 6116)

இவ்வாறு ஆட்களின் அறிவு தரம் மற்றும் புரிந்து கொள்ளும் திறன் என்பவற்றிற்கு எற்பவே நபி (ஸல்) அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்கள்.

வினா எழுப்பி கற்பித்தல்

மேலும் கற்பிக்கும் போது சில விடயங்களை வெறுமனே கூறுவதை விடவும் வினாக்களை எழுப்பி விவாதங்களை உருவாக்கி கலந்துரையாடல் மூலம் கற்பிக்கும் போது அதன் தாக்கமும் பிரதிபலனும் மிக அதிகமாகும். இக்கற்பித்தல் முறைமையும் நபி (ஸல்) அவர்களால் கையாளப்பட்டுள்ளன.

ஒரு முறை முஹம்மத் (ஸல்) அவர்கள், “(மக்களிடம்) நஷ்டவாளன் என்றால் யார் என்று உங்களுக்கு தெரியுமா?“ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் “யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்), பொருட்களோ இல்லையோ அவர் தான் எங்களைப் பொறுத்தவரை நஷ்டவாளி” என்று பதிலளித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் “மறுமை நாளில் என் சமுதாயத்தில் நஷ்டமடைந்த ஒருவர் வருவார்.

ஆனால் அவர் தொழுகை, நோன்பு, ஸக்காத் ஆகியவற்றுடன் வருவார். இருப்பினும் அவர் எவரையாவது அநியாயமாகத் திட்டி இருப்பார். அநியாயமாக அவதூறு கூறியிருப்பார். எவரது பொருளையாவது முறைகேடாகப் புசித்திருப்பார். எவரையாவது அநியாயமாக அடித்திருப்பார்.

அநியாயமாக எவரது இரத்தத்தையாவது ஓட்டியிருப்பார். அதனால் மறுமையில் இவரால் அநியாயத்திற்கு உள்ளானவர்கள் இவருக்கு எதிராக முறையீடு செய்யும் போது இவரது நன்மைகள் அநியாயத்திற்கு உள்ளானவர்களுக்கு அநியாயத்திற்கு ஏற்ப கொடுக்கப்படும். இவ்வாறு கொடுக்கப்படுவதால் இவரது நன்மைகள் முடிவுறும்.

அப்போது இவரால் அநியாயத்திற்கு உள்ளானவரின் பாவங்கள் எடுக்கப்பட்டு இவரது அநியாயத்திற்கு ஏற்ப இவருக்கு கொடுக்கப்படும். இதனால் இவரது தீமைகள் அதிகரித்துவிடும். இவர் தான் உண்மையான நஷ்டவாளியாவார். ஆகவே இவர் நரகில் தூக்கியெறியப்படுவார்“. என்று கூறினார்கள். (ஆதாரம் முஸ்லிம் – 5037)

மற்றொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் அரபா மைதானத்தில் நின்றபடி ஸஹாபாக்களைப் பார்த்து இது என்ன நாள்? இது என்ன மாதம்? இது எந்த இடம்? என்று வினவினார்கள். அப்போது ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்கள் புதிதாக எதையோ கூறப்போகிறார்கள் என எண்ணி அமைதியாக இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “ இந்த நாளும், இந்த மாதமும், இந்த இடமும் எவ்வாறு சிறப்பு மிக்கதோ அதேபோன்று தான் உங்கள் இரத்தமும், உங்கள் சொத்தும், உங்கள் மானமும் கண்ணியமானது“ என்று குறிப்பிட்டார்கள்.

ஆதாரம் புகாரி, முஸ்லிம்

இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் நபி (ஸல்) அவர்கள் வினா எழுப்பி விடங்களின் முக்கியத்தவத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

உவமையைப் பயன்படுத்தல்

அதேவேளை விடங்களின் முக்கியத்தவத்தையும் சிறப்பையும் எடுத்துக் கூறுவதற்காக நபி (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார்கள் அந்தவகையில் ஒரு முறை “உங்களில் ஒருவரின் வீட்டுக்கு முன்பாக ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருக்கின்றது.

அதில் அவர் தினமும் ஐந்து தடவைகள் குளிக்கின்றார். அவரது மேனியில் ஏதாவது அழுக்கு எஞ்சி இருக்குமா ? எனக் கூறுங்கள் என ஸஹாபாக்களிடம் வினவினாரகள் அதற்கு ஸஹாபாக்கள் அவரது மேனியில் சிறிதளவாவது அழுக்கு எஞ்சி இராது என்றனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தான் ஐவேளைத் தொழுகையும். அதன் மூலம் மனிதனின் பாவக் கரைகளை அல்லாஹ் அகற்றி விடுகின்றான்“ என்று குறிப்பிட்டார்கள்

(ஆதாரம் புகாரி 528, முஸ்லிம்)

தொட்டு பேசி கற்பித்தல்

மேலும் தொட்டு பேசி கற்பிக்கும் முறைமையையும் நபி (ஸல் அவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக இப்னு உமர் (ரலி) அவர்கள், முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு முறை என் தோளைப் பிடித்து கொண்டு “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு“ என்று குறிப்பிட்டார்கள் என அறிவித்துள்ளார். (ஆதாரம் புகாரி – 6416)

இவ்வாறு கடந்த கால வரலாறு, நிகழ்வுகள் என்பவற்றை உதாரணங்களாகக் கொண்டும் கோடுகள் வரைந்தும், வரைபடங்கள். கையசைவுகள், சமிங்ஞைகள், பொருட்கள் என்பவற்றையும் நபி(ஸல்) அவர்கள் தம் கற்பித்தல் உத்திகளாகப் பயன்படுத்தியுள்ளார்கள்.

அத்தோடு, எவரும் வினவாமலேயே பதிலளித்தல், வினவப்படும் வினாவுக்கு விரிவாக பதிலளித்தல், பொருத்தமற்ற கேள்விகள் கேட்கப்பட்ட போதிலும் பயன்மிக்க பதில்களை அளித்தல், ஒரு விடயத்தைத் திரும்பத் திரும்ப கூறுதல், எவருக்கும் விளங்கக் கூடியவகையில் வசனங்களுக்கிடையில் இடைவெளி விட்டு பேசுதல் நகைச்சுவையாகப் பேசி கற்பித்தல், சிலர் மீது விஷேட கவனம் செலுத்தி கற்பித்தல், எண்களை பயன்படுத்தி செய்திகளை வரிசைப்படுத்தி கற்பித்தல், கட்டம் கட்டமாக கற்பித்தல், கற்பவர்களின் திறமைகளைப் பாராட்டி ஊக்குவித்தல், கற்பிப்பதோடு மாத்திரம் நின்று விடாது தேவையான செய்முறைப் பயிற்சிகளை அளித்தல், கற்றவர்களின் அறிவை பரீட்சிப்பதற்காகக் கேள்வி கேட்டல், கற்பவர்கள் மத்தியில் தேடல் திறனை விருத்தி செய்தல், கண்களால் காட்சிகளைப் பார்ப்பது போன்று விவரித்தல் போன்ற பல்வேறு விதமான கற்பித்தல் உத்திகளும் நுணுக்கங்களும் முஹம்மத் (ஸல்) அவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு தெளிவான ஆதாரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. .

ஆகவே முஹம்மத் (ஸல்) அவர்களின் கற்பித்தல் உத்திகள் மற்றும் நுணுக்கள் மூலம் இன்றைய காலத்திலும் உச்ச பயன்களைப் பெற்றிட முடியும். இதனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும். இதனூடாக மனித சமூகமே அளப்பரிய நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றால் அது மிகையாகாது.

-முஹம்மத் மர்லின்-

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *