93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் தேர்தல் நடைபெறும்: மாவனல்லை பிரதேச சபைக்கான தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது

சட்ட சிக்கல்கள் அற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 13ஆம் திகதி மதியம் 12 மணி வரை நடைபெறும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொகமட் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பு மனு கோரலுக்கான அறிவிப்பு இன்றைய தினம் வெளியிடப்படவுள்ள நிலையில், 93 ஆவணங்களுக்கான வேட்பமனு கோரும் பணிகள் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் 14ஆம் திகதி நண்பகல் வரை இடம்பெறும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள தடைக்கமைய 203 உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் தடைபட்டுள்ளது. ஏனைய 133 மன்றங்களின் தேர்தல்களை நடத்துவதற்கு சந்தர்ப்பம் உள்ளபோதும், அவற்றில் 40 நிறுவனங்களில் நிலவும் சட்ட சிக்கல்கள் காரணமாக அவற்றின் தேர்தல்களும் பிற்போடப்பட்டுள்ளது.

இதனால் சட்ட சிக்கல்கள் அற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை, இன்று திங்கட்கிழமை வெளியிடுவதற்கு, நடவடிக்கை எடுத்துள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டபோது, 40 சபைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள அச்சுப்பிழையைச் சரிசெய்து, இந்தத் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

“அந்த உள்ளூராட்சி மன்றங்களின் பெயரை குறிப்பிடும் போது அல்லது அதற்குரிய கிராம சேவகர் பிரிவை குறிப்பிடும் போது, சிறிய அச்சுப்பிழை ஏற்பட்டுள்ளது. ஆகையால்தான், அந்த 40 சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு, இடையூறு ஏற்பட்டுள்ளது” என்று அவ்வமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

திருத்தப்பட்ட வர்த்தமானி வெளியானதன் பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு, அந்த 40 சபைகளுக்கும் தேர்தலை நடத்தமுடியுமென அவர் தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழு, 93 சபைகளுக்கான தேர்தலையே நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

அதில், அச்சுப்பிழை ஏற்பட்டுள்ள 40 சபைகள் உள்ளடங்கவில்லை. இந்நிலையில், திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியானதும், 40 சபைகளையும் சேர்த்து, 133 சபைகளுக்கும் தேர்தலை நடத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares