போதைப்பொருள் ஒரு பொது எதிரி

தினசரி பத்திரிகையை புரட்டும் போதோ அல்லது தொலைக்காட்சியை திருப்பும் போதோ அடிக்கடி கேட்கும் ஒரு செய்தியாக போதைப்பொருள் விவகாரத்துடன் தொடர்புபட்ட விடயங்களை இன்று சுட்டிக்காட்ட முடியும். முன்பு நகர்ப் புறங்களில் மாத்திரம் காணப்பட்ட இந்த போதைப்பொருள் பாவனை தற்பொழுது குக்கிராமங்களுக்கும் வியாபித்துள்ளமை ஆச்சரியமான ஒரு விடயமாகும். சில வேளைகளில் மிகவும் பின்தங்கிய கிராமங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வந்தடைவதில் தாமதமேற்பட்டாலும் போதைப்பொருள் வந்தடைந்திருக்கும். சமய மற்றும் சமூக விழுமியங்களைப் பேணிவந்த ஊர்களும் இந்த போதைப்பொருள் தொல்லையால் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றன.

இந்த போதைப்பொருட்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் அதேவேளை, பெருமளவான பொதைக்கப்பொருள் வெளிநாடுகளில் இருந்தே நாட்டுக்குள் வருகின்றன. திட்டமிட்ட முறையில், நவீன தொழிநுட்பங்களை சூட்சுமமான முறையில் பயன்படுத்தியே இந்த போதைப்பொருள் கடத்தல் காரர்கள் இளம் சந்ததியினரில் எதிர்காலத்தில் மண்ணை அள்ளிப்போடுகின்றனர்.

போருக்குப் பின்னர் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு:
இலங்கையில் இடம்பெற்று வந்த உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் அதிகரித்துள்ளதாக இலங்கை மது வரி திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு யுத்தம் இடம்பெற்று வந்த காலங்களில் இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப்புலிகள் தரையிலும் கடலிலும் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இதனால் போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு இது கஷ்டமாக காணப்பட்டது. எனினும் யுத்தம் முடிவடைந்ததை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டன. விசேடமாகக் கடலில் மேற்கொள்ளும் ரோந்துப்பணிகள் குறைந்துவிட்டன. இது போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு சாதகமாக மாறியுள்ளது.

மருந்து முறைகேடும் அடிமையாதலும்:
பல்வேறு நோய்களுக்காக, குறிப்பாக புற்றுநோய் மற்றும் போன்ற பாரிய நோய்களுக்காகப் பயன்படுத்தும் மாத்திரை வகைகளையும் வலி நிவாரணி மாத்திரை வகைகளையும் போதையை ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்துகின்றனர். இவை சட்ட ரீதியாக உள்நாட்டு மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மருந்து வகைகளாகும். அவற்றை முறைகேடாகப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றைப் போதையை ஏற்படுத்தும் காரணிகளாக ஆக்கிக்கொண்டுள்ளனர். இவற்றை தொடர்ந்தும் பாவனை செய்யும் போது அவற்றுக்கு அடிமையாகின்றனர். இது காலப்போக்கில் அதிக மருந்து வகைகளை நாடுவதற்கு அவர்களைத் தூண்டுகின்றது. எந்த விலை கொடுத்தாலும் அவற்றை கொள்வனவு செய்ய தயங்கமாட்டார்கள். இந்த முறைகேடான பாவனை நீண்ட காலத்தில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி, பல எதிர்மறை விளைவுகளை உடலிலும் உள்ளத்திலும் ஏற்படுத்துகின்றது. இறுதியில் மரணம் தான் இதற்கு விமோசனமாகக் காணப்படுகின்றது. இவ்வாறான மாத்திரைகளை மருத்துவ சிட்டை இன்றி கோரும் நபர்களுக்கு அவற்றை வழங்குவதை மருந்தகங்கள் தவிர்க்க வேண்டும். இந்த மாத்திரைகள் சட்ட ரீதியான மாத்திரைகள் என்பதால் அது தொடர்பில் சட்ட ரீதியான நாவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலைமைகள் எழுந்துள்ளது. இதுவும் போதைப்பொருளை ஒழிப்பதில் பெரும் சவாலாகக் காணப்படும் ஒரு விடயமாகும்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு விற்பனை:
இளம் வயதினர் மற்றும் மாணவர்களை இலக்கு வைத்தே இந்த போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த மாதங்களில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டால் அவை தெளிவாக புலப்படுகின்றன. இளம் சமூகத்தினரை எதாவது ஒரு காரியத்தை செய்ய வைப்பது மிகவும் இலகுவானது. இதனையே இந்த போதைப்பொருள் கடத்தல் காரர்கள் சாதகமாகப் பயன்படுத்தி அவர்களை தமது வலையில் சிக்க வைத்துள்ளனர். இது அவர்களின் வர்த்தகத்தைத் தொடர்ந்தும் நிலைநிறுத்தி வைப்பதற்கான உத்தியாகவே காணப்படுகின்றது. பாடசாலைகள், தனியார் வகுப்புகள் மற்றும் மாணவர்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் காரர்கள் வலம்வருகின்றனர். இவ்வாறு மாணவர்களுடன் நட்பாகப் பழகி அவர்களுக்கு போதைப்பொருட்களை அறிமுகப்படுத்துவதே அவர்களின் திட்டமாக காணப்படுகின்றது. பின்னர் மாணவர்கள் இவற்றுக்கு அடிமையான பின்னர் அவற்றை அவர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

கடத்தல் மற்றும் விற்பனைக்கு நவீன தொழிநுட்பம்:
நவீன தொழிநுட்ப முன்னேற்றம் அதிக நன்மைகளைக் கொண்டதாக இருந்தாலும், அவற்றைத் தீய காரியங்களுக்குப் பயன்படுத்துவது இன்று சர்வ சாதாரண விடயமாக உள்ளது. அவ்வாறே இந்த போதைப்பொருள் கடத்தலுக்கும் நவீன தொழிநுட்ப முறைகளைச் சாதகமாக பயன்படுத்துகின்றனர். கடல் மார்க்கமாகப் போதைப்பொருளை கடத்துபவர்கள் ஜி.பி.எஸ். தொழிநுட்பத்தை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர். உதாரணமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருளைக் கடத்துகின்றவர்கள் தமது போதைப்பொருள் பொதியில் ஜி.பி.எஸ். கருவியைப் பொருத்தி அதனைக் கடலில் போட்டுவிட்டு, பின்னர் இலங்கையில் அதனை பெரும் நபர்களுக்கு அறிவிக்கின்றனர். அந்த பொதியை இனங்காணக் குறித்த ஜி.பி.எஸ். கருவியின் குறியீட்டை பெற்று இலங்கையில் உள்ளவர்கள் அந்த பொதியை பெற்றுக்கொள்கின்றனர். இந்த நிலைமையில் போதைப்பொருளை விற்பனை செய்பவர்களும் கொள்வனவு செய்பவர்களும் சந்திக்காமலேயே போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுகின்றன. இவ்வாறான கடத்தல்களின் போது பணப்பரிமாற்றமும் ஈஸி கேஷ் போன்ற கையடக்க தொலைபேசி ஊடான பணப்பரிமாறல் முறைகளைப் பயன்படுத்துகின்றனர். இது போன்ற சூட்சுமமான நடவடிக்கைகளை முறியடிப்பது பாதுகாப்பு தரப்பினருக்கும் பாரிய சவாலாக காணப்படுகின்றன.

சவால் மிக்கது:
உலகில் உயர்ந்த அபிவிருத்திகளைக் கொண்டுள்ள நாடுகள் முதல் எல்லா நாடுகளும் எல்லா சமூகங்களும் இந்த போதைப்பொருள் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன. இன, மத வேறுபாடு இன்றி போதைப்பொருள் உடறுத்துள்ளது. இந்த கடத்தல் காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போதும், பாதுகாப்பு தரப்பினர் பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. போதைப்பொருள் கடத்தல் காரர்கள் அரசியல் ரீதியாக அதிகாரம் கொண்டவர்களின் கையாட்களாகக் காணப்படுகின்றமையே இதற்கான காரணமாகும். அல்லது பெரும் பண பலம் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கும் போது சாதாரண பொலிஸ் அதிகாரி அல்லது இராணுவ அதிகாரி பல அழுத்தங்களுக்குத் தள்ளப்படுகிறார். சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் போகின்ற நிலைமை உருவாகின்றது.

சமூக பொறுப்பு:
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் உச்ச பட்ச சட்டத்தை ஏற்படுத்தி அதனை பிரயோக ரீதியாக நடைமுறைப்படுத்துவது இலகுவான விடயமல்ல. எனினும் அதற்கு ஏற்றவாறு புதிய சட்டங்கள் ஏற்படுத்தப்படவேண்டும். அவற்றை செயற்படுத்துவதில் அரசாங்கம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் முன்வர வேண்டும். இதனை சகல அரசு நிறுவங்களும் ஒரு கூட்டுப்பொறுப்பாக செய்வதன் மூலம் அது தொடர்பில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள முடியும். அதேபோன்று போதைப்பொருள் பாவனையால் இளைஞர்கள் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளை தயக்கமின்றி மேற்கொள்கின்றனர். இதனால் பல்வேறு கலாச்சார சீரழிவுகள் சமூகங்களில் ஏற்பட்டுள்ளன. இந்த பிரச்சினையை முழுமையாகச் சமூகத்திலிருந்து ஒழிக்க முடியாத போதிலும், சமூகத்தை இதிலிருந்து பாதுகாப்பது சமூகத்தின் பொறுப்பாகும். குறிப்பாக எதிர்காலத்தில் இவற்றுக்கு அடிமையாகக் கூடும் என எதிர்பார்க்கும் மாணவர்கள் மற்றும் சிறுவர்களை இதிலிருந்து பாதுகாக்க முடியும். இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் தேவையாகக் காணப்படுகின்றது.

சமூக நிறுவங்களின் பங்கு:
போதைப்பொருளின் தாக்கம் தற்பொழுது இன, மத, வயது மற்றும் பால் வேறுபாடின்றி பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இதனை முறியடிப்பது அனைத்துத் தரப்பினரும் ஒன்று சேர்ந்து மேற்கொள்ள வேண்டிய ஒரு பிரதான விடயமாக காணப்படுகின்றது. எனவே கிராமங்களில் உள்ள சமூக நலன்புரி நிறுவனங்கள், இளைஞர் அமைப்புகள், விளையாட்டு கழகங்கள் சமய தளங்களின் நம்பிக்கையாளர் சபைகள் உள்ளிட்ட சமூகத்தில் அனைத்து மட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டுப் பொறுப்புடன் இந்த சமூக நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். சமூக நிறுவனங்கள் தமது வருடாந்த நிதியொதுக்கீடுகளில் கணிசமான அளவு நிதியை இந்த விவாகரத்துக்கு ஒதுக்க வேண்டும். ஒரு கிராமத்திலுள்ள பல்வேறு அமைப்புகள் சேர்ந்து இது தொடர்பில் ஒன்றுபட்டுச் செயற்பட முடியும். பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு அவற்றை பல்வேறு அமைப்புகள் பிரித்து செய்வதன் மூலம் அவற்றின் சுமையை குறைத்துக்கொள்ள முடியும்.

பாடசாலை மட்டத்தில் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள் போதைப்பொருள் விவகாரத்தில் சமூக சிந்தனையோடு விழிப்புடன் செயற்பட வேண்டும். ஏனென்றால் போதைப்பொருள் கடத்தல் காரர்களின் பிரதான இலக்காக மாணவர்களே காணப்படுகின்றனர். மாணவர்கள் அதிக நேரத்தைக் கழிப்பது பாடசாலையிலேயே ஆகும். எனவே, இது தொடர்பில் பாடசாலை மட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவு கரிசனை கட்டப்பட வேண்டும். போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வுகளை மாத்திரம் மேற்கொள்வதன் மூலம் இதனை சாத்தியப்படுத்த முடியாது. பிரயோக ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். இவற்றை மேற்கொள்ளும் போது பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். சமூக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ள முடியும். முழு சமூகமும் ஒரு கூட்டாக நின்று இதனை எதிர்க்கும் போது சவால்களைக் குறைத்துக்கொள்ள முடியும்.

பொது எதிரியாக இனங்காண்போம்:
போதைப்பொருள் என்ற விடயம் தற்பொழுது முழு உலகத்திலும் ஒரு பேசு பொருளாகக் காணப்படுகின்றது. சமூகங்களில் வீழ்ச்சியில் போதைப்பொருளும் முக்கிய பங்காற்றுகிறது. எனவே இன, மத வேறுபாடின்றி அணுகுவதன் மூலம் போதைப் பொருளிலிருந்து எமது இளம் சமூகத்தினரை பாதுகாத்துக்கொள்ள முடியும். போதைப்பொருள் ஒழிப்பு அனைத்து இலங்கையர்களும் ஒன்று பட்டு சிந்திக்க வேண்டிய ஒரு தலைப்பாக காணப்படுகின்றது. இந்த விவகாரத்தில் இலங்கையர்கள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்படுவது காலத்தின் தேவையாக காணப்படுகின்றது.

போதை அனைவரதும் பொது எதிரி, அதனைக் கூட்டாக சேர்ந்து தோற்கடிப்போம்!

– நுஸ்கி முக்தார் –

Leave a Reply

You must be logged in to post a comment.