2018ம் ஆண்டில் இலங்கையின் தலைசிறந்த வங்கியாக கொமர்ஷல் வங்கி தெரிவு

கொமர்ஷல் வங்கி 2018ம் ஆண்டில் இலங்கையின் தலைசிறந்த வங்கி மற்றும் பங்களாதேஷின் மிகச் சிறந்த வெளிநாட்டு வங்கி என்ற விருதுகளை வென்றுள்ளது. ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட குளோபல் பிஸ்னஸ் அவுட்லுக் (GBO) சஞ்சிகையின் மூலம் இந்த விருதுகள் கிடைத்துள்ளன. முக்கியமான உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளோடு கொமர்ஷல் வங்கி இந்த ஆண்டைப் பூர்த்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தரம் மற்றும் அளவு என்பனவற்றின் குறியீடுகளை அடிப்டையாகக் கொண்டே கொமர்ஷல் வங்கியின் இந்த கீர்த்திமிக்க விருதுகள் அமைந்துள்ளன. விருதுகளுக்கான மதிப்பீட்டுக்குரிய இந்த ஆண்டில் வங்கியின் நிதிச் செயற்பாடு மிகவும் ஸ்திர நிலையில் இருந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். தேசிய பொருளாதாரத்தில் அதன் தாக்கம், நிதி உள்சேர்க்கைகள் மற்றும் கிராம அபிவிருத்தி, புவியியல் ரீதியான பரவல், சாதனைகள், புதிய உற்பத்திகள், கூட்டாண்மை சமூகப் பொறுப்பு முயற்சிகள் என்பனவும் இந்த விருதுகளுக்காக கவனத்தில் கொள்ளப்பட்ட ஏனைய அம்சங்களாகும்.

பங்களாதேஷல் கொமர்ஷல் வங்கிக்கு சிறந்த வெளிநாட்டு வங்கிக்கான விருது வழங்கப்பட்டமை புதிய கணக்குகள், வைப்புக்கள் மற்றும் முற்பணங்கள், கூட்டாண்மைக்கு வழங்கப்பட்ட சேவைகள், தனியார் வங்கிப்பிரிவில் வழங்கப்பட்ட சேவைகள், வங்கியின் இணைய சேவையில் புதிய உற்பத்திகள் மற்றும் வளர்ச்சி என்பனவற்றில் அடையப்பட்ட முன்னேற்றங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.

குளோபல் பிஸ்னஸ் அவுட்லுக்கின் (GBO) விருது திட்டத்தில் கொமர்ஷல் வங்கி பங்கேற்றமை இதுவே முதற் தடவையாகும்.

´கொமர்ஷல் வங்கியைப் பொறுத்தமட்டில் சாதனைகள் மிக்க உற்சாகமான ஒரு ஆண்டின் முடிவாக இது அமைந்துள்ளது´ என்று வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான எஸ்.ரெங்கநாதன் கூறினார். ´நாங்கள் ஏனைய ஆண்டுகளைப் பார்க்கிலும் 2018ல் மிகக் கூடுதலான விருதுகளை வென்றுள்ளோம். சவாலுக்குரிய சந்தை நிலைகளிலும் கூட தரத்திலும் செயற்பாட்டிலும் நாம் விட்டுக் கொடுப்பதில்லை என்பதன் வெளிப்பாடாகவே இது அமைந்துள்ளது.

அடிப்படைகளிலும் செயற்பாடுகளிலும் தீவிரமான கவனம் செலுத்துவதன் மூலம் வளர்ச்சியை தொடர்ந்து அடைய முடியும் என்பதை நாம் நிரூபித்துள்ளோம்´ என்று அவர் மேலும் கூறினார்.

இந்த விருது திட்டத்துக்காக பல்வேறு தொழில் துறைகளையும் சேர்ந்த விரிவான கம்பனிகள் புடீழு வின் மதிப்பீட்டுக்கு உள்ளாக்கப்பட்டன. இங்கு வங்கித் துறைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. காப்புறுதி, சொத்து முகாமைத்துவம், செல்வ முகாமைத்துவம், தரகு, தொழில்நுட்பம், காணி, விருந்தோம்பல்துறை என பல பிரிவுகள் இதற்காக உள்வாங்கப்பட்டன.

புத்தாக்க கண்டு பிடிப்பு, சாதனைகள், மூலோபாயம், முன்னேற்றம், உலக வர்த்தக சமூகத்துக்குள் இடம்பெறும் தாக்கம் மிக்க மாற்றங்கள் என்பனவற்றுக்கான அங்கீகாரமாகவே 2018 குளோபல் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகள் அமைந்துள்ளன. குறிப்பிட்ட ஒரு பரப்பில் முக்கியத்துவம் அளிக்கும் நிபுணத்துவம் மிக்க எல்லா அளவுகளையும் சார்ந்த நிறுவனங்கள் இதற்காக உள்வாங்கப்பட்டன.

உலக வர்த்தக அபிவிருத்தி மற்றும் இக்கட்டான நிலைமைகள் என்பனபற்றிய தகவல்களை வழங்குவதில் பிரதான இடம் வகிக்கும் ஒரு சஞ்சிகையான குளோபல் பிஸ்னஸ் அவுட்லுக் பூகோள வங்கியியல், காப்புறுதி, தரகு, இஸ்லாமிய வங்கியியல், ஹெட்ஜிங் நிதி, வர்த்தக முத்திரைகள், சக்தி வளத்துறை, விருந்தோம்பல், காணி, புதிய தொழில்நுட்பங்கள், இணையவழி செயற்பாடுகள் உற்பட மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கங்களைச் செலுத்தும் அவர்களது வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இன்னோரன்ன பல விடயங்களைப் பற்றிய விரிவான, விவரமான, தரவுகளுடன் கூடிய தகவல்களை செம்மையாக வழங்கி வருகின்றது. உயர் முகாமைத்துவப் பதவிகளை வகிப்பவர்கள், பணிப்பாளர்கள் என உலகின் முன்னணி நிலையில் உள்ள பலர் இதன் வாசகர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்ந்து எட்டு வருடங்களாக உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 263 கிளைகளுடனும், 813 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. வங்கி 2016 மற்றும் 2017ம் ஆண்டு காலப்பகுதியில் பல்வேறு உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை வங்கி வென்றுள்ளது. 2018ன் முதல் ஆறு மாத காலத்தில மட்டும் 20க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளையும் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும், மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும், நேய்பியு டோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.