யாழ்ப்பாண மண்ணில் சேவை செய்யக் கிடைத்ததையிட்டு பெருமடைகின்றேன் – யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான்

யாழ்ப்பாண மண்ணில் எனது தாய்மொழி தமிழில் சேவை செய்யக் கிடைத்ததையிட்டு பெருமடைகின்றேன். இந்தப் பெரும் பாக்கியத்தை வழங்கிய இறைவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானாகப் பதவியேற்ற பின்னர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தலைமையில் நடைபெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான புத்தாண்டு உரை நிகழ்வில் நேற்று (1) பங்கேற்று உரையாற்றும் போதே யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;
நீதிபதிகளுக்கு இரண்டு கடமைகள் உள்ளன. சட்டத்தை நிலைநாட்டுவது நிர்வாகத்தை நிர்வகிப்பது. நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு நிர்வாகக் கடமையுள்ளது.

நீதித்துறையின் சுயாதீனத்தை நிலைநாட்டுவதற்கு உத்தியோகத்தர்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும். அதனால் நீதித் துறைச் சுதந்திரம் பேணப்படுவதோடு, அந்தப் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கும் சரியான நீதியைக் கிடைக்க கூடிய வாய்ப்புக் கிட்டும்.

அலுவலகத்துக்குக் காலையில் வரும் போதும் மாலையில் வீடு திரும்பும் போதும் நாம் இரண்டு விடயங்களைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
காலையில் வரும் போது, நான் என்ன கடமையைச் செய்யவேண்டும் என்றும் மாலை திரும்பும் போது நான் என்ன கடமையைப் புரிந்தேன் என்றும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இதனைப் பின்பற்றும் போது, நான் எனது கடமையை இன்று சரியாகச் செய்திருக்கின்றேனா? அல்லது பொது மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் பெறும் நான் அந்தச் சம்பளத்துக்கு நியாயமான கடைமையை செய்திருக்கின்றேனா என்பது தெரியும்.

நிர்வாக ரீதியாக இரண்டு பிணக்குகள் ஏற்படுகின்றன. நான் எனது கடமையைச் சரியாகச் செய்யாத போது பிணக்கு ஏற்படும். மற்றயது பிறரது கடமையில் நான் தலையீடு செய்கின்ற போது பிணக்கு ஏற்படும். எனவே எனது கடமை என்ன பிறது கடமை என்ன என்பதைப் புரிந்துகொண்டு எந்த விடயத்தில் தலையிடலாம் அல்லது எந்த விடயத்தில் தலையிடக் கூடாது இவை இரண்டையும் கவனத்தில் கொள்கின்ற போது, நாம் பிணக்குகளைத் தவிர்த்துக் கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

– பாறுக் ஷிஹான் –

Leave a Reply

You must be logged in to post a comment.