மைத்திரியின் கையில் மஹிந்தவின் பாராளுமன்ற உறுப்புரிமை

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்திற்குப் பின்னர் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை வகிப்பவர் யார் என்பது குறித்து பல்வேறு மட்டங்களிலும் கருத்துக்கள் எழுப்பப்படுகின்றன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளத் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமையினால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் கூடியதன் பின்னர், அரசியலமைப்பின் பிரகாரம் பிரேரணையொன்று கொண்டுவந்து பெரும்பான்மையை நிரூபித்துக் கொள்வதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் புதிய அரசாங்கம் அமைந்ததன் பின்னர் புதிய எதிர்க் கட்சித் தலைவர்  உட்பட பல பொறுப்புக்களுக்கு நியமனங்கள் இடம்பெற வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ தரப்பு வேண்டுகோள்களை முன்வைத்து வருகின்றன.

பாராளுமன்றத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி எதிர்க் கட்சி ஆசனத்தில் அமரப் போவதாக சபாநாயகருக்கு அறிவிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.

பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சிப் பதவிக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரைப் பிரேரிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நேற்று (15) தெரிவித்திருந்தார்.

பாராளுமன்றத்தின் எதிர்வரும் நடவடிக்கைகள் தொடர்பில் நாளை மறுதினம் (18) காலையில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் எதிர்க் கட்சித் தலைவர் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் தொடர்பில், அரசாங்கமொன்று அமைக்கப்பட்டதன் பின்னரே தீர்மானிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதனை சபாநாயகர் முறையாக தீர்மானம் எடுப்பார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதனால் அக்கட்சிக்கு பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியாக செயற்பட முடியாது என்ற கருத்தை மஹிந்த ராஜபக்ஷ தரப்பு முன்வைத்து வருகின்றது.

பிரேரணையொன்று கொண்டுவரும் போது அரசாங்கத்துக்கு ஆதரவாக   தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தால் அந்தக் கட்சி எதிர்க் கட்சியில் அமர முடியாது என்பதே பொதுஜன பெரமுன கட்சியினர் முன்வைக்கும் கருத்தாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலைமை அரசாங்கத்துக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

இருப்பினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களிப்பில் கலந்துகொள்ளாது வெளிநடப்புச் செய்தால் அரசாங்கத்தையும் காப்பாற்றலாம். அரசாங்கத்துக்கு ஆதரவாக  வாக்களித்த குற்றச்சாட்டிலிருந்தும் தப்பலாம் என்பது பொதுவான ஒரு கருத்தாகும்.

எது எப்படிப் போனாலும், கடந்த அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பங்காளிக் கட்சியாக காணப்பட்டது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் குழுவினர், அதே அரசாங்கத்துக்கு எதிர்க் கட்சியாகவும் பாராளுமன்றத்தில் செயற்பட முடியாது எனத் தெரிவித்தே கடந்த நல்லாட்சி அரசாங்கம், பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியாக இருப்பதற்கான தகைமையை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியது.

ஆனால், தற்பொழுது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது அரசாங்கத்துடன் கூட்டுச் சேராததன் காரணமாக அரசாங்கத்துக்கு அடுத்த படியாக பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்ட கட்சியாக பொதுஜன ஐக்கிய முன்னணி  காணப்படுகின்றது.

இதனால், எதிர்க் கட்சித் தலைமைப் பதவி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, பொதுஜன ஐக்கிய முன்னணியில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவத்தை எடுத்துக் கொண்டனர். அதில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் போசகரும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவும் ஒருவராவார்.  பாராளுமன்றம் கலைக்கப்பட்டது என்ற அறிவிப்புடன் இவர்கள் புதிய கட்சியில் அங்கத்துவத்தை எடுத்துக் கொண்டனர்.

தற்பொழுது, பாராளுமன்ற கலைப்பு தொடர்பில் தீர்மானம் மாற்றம் பெற்று நாளை மறுதினம் (18) பாராளுமன்றம் கூடவுள்ளது.

இதன்போது, கட்சி மாறியவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பொது மக்கள் மத்தியில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  பாராளுமன்ற உறுப்புரிமை பெறுவதற்குக் காரணமாக இருந்த கட்சி ஒழுக்காற்று நடவடிக்கையின் பின்னர் உறுப்புரிமையை உத்தியோகபூர்வமாக நீக்கினால், கட்சி மாறிய நபரின் பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கிவிடுவதாக சட்ட ஆலோசகர்கள் விளக்கம் கூறியுள்ளனர்.

இதன்படி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்றவர்களுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கினால், அவர்களுடைய பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்க வேண்டி ஏற்படும்.

ஜனாதிபதியின் தீர்மானத்தில்தான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டவர்களது பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பான தீர்மானம் தங்கியுள்ளது என்பது பொதுவான புரிதலாகும்.

சந்தர்ப்பம் பார்த்து தான் சார்ந்த கட்சியைக் கூட காலால் உதைத்துத் தள்ளியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாதளவுக்கு ஸ்ரீ ல.சு.க. பலஹீனம் அடைந்துள்ளதா? என எதிர்த் தரப்பினர் எழுப்பும் கேள்விக்கு நியாயம் கற்பிப்பது மட்டும் அக்கட்சிக்கு சுலபமாகாது.

– கஹட்டோவிட்ட முஹிடீன் இஸ்லாஹி

Leave a Reply

You must be logged in to post a comment.