சிந்தித்து செயற்படாதவரை எதிர்காலம் ஆபத்தானதுதான்

இலங்கை முஸ்லிம் சமூகத்தைச் சூழ சர்வதேச சதி வலைகள் பின்னப்படுகின்றனவா? அல்லது நமது சமூகத்தில் உள்ளவர்களே நமக்கான படுகுழியைத் தோண்டிக் கொள்கிறார்களா எனும் சந்தேகம் அண்மைய நாட்களாக வலுப்பெறுவதைத் தவிர்க்க முடியவில்லை.

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களைத் தேடிச் சென்ற வேளை புத்தளம், வணாத்தவில்லு பிரதேசத்திலுள்ள காணி ஒன்றிலிருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டமையானது பெரும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. இதனுடன் தொடர்புடைய இளைஞர்கள் அதிதீவிரப்போக்கு கொண்டவர்களாக மாறியிருக்கிறார்களா? இவர்களது இலக்கு என்ன? இவர்களுக்கும் சர்வதேச சக்திகளுக்கும் தொடர்புகள் உள்ளனவா? எனும் கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. புலனாய்வுப் பிரிவினரும் இதே கேள்விகளின் அடிப்படையிலேயே தமது விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த இடத்தில்தான் இலங்கை முஸ்லிம் சமூகம் மிகவும் நிதானமாகவும் தூரநோக்குடனும் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல் நாம் மிகப் பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறோம். தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதல் முதல் கண்டி வன்முறைகள் வரை அவற்றைப் பட்டியல்படுத்தலாம். இவற்றுக்கிடையே கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்துள்ளன.

இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாதவாறு பெரும்பான்மை சமூகத்துடன் இணங்கி வாழ்வது எப்படி என்று முஸ்லிம் சமூகத்திலுள்ள பல தரப்பினரும் சிந்தித்து செயற்பட்டுக் கொண்டிருக்கையில் மற்றுமொரு சாரார் பெரும்பான்மை சமூகத்துடன் பிணக்குகளை உருவாக்க முனைவது எந்தவகையிலும் நமக்கு நன்மையைக் கொண்டுவரப் போவதில்லை. மாறாக இது நிலைமையை மேலும் மோசமடையச் செய்யவே வழிவகுக்கும்.

வணாத்தவில்லுவில் மீட்கப்பட்ட வெடி பொருட்களின் மூலமும் அவற்றை கையாண்டவர்களின் நோக்கமும் கண்டறியப்பட்டு, அந்த தகவல்கள் பெரும்பான்மை மக்களைச் சென்றடையும் பட்சத்தில் அதன் பிற்பாடு முஸ்லிம்களுக்கு எதிரான மனப்பாங்கு மேலும் தீவிரமடையக் கூடும். இது இன்னும் பல அளுத்கமைகளையும் கிந்தோட்டைகளையும் அம்பாறை மற்றும் கண்டிகளையுமே நமக்கு உருவாக்கித் தரும். விளைவு முஸ்லிம்களின் உயிர்களும் பொருளாதாரமும் இழக்கப்படும். மொத்தத்தில் நாடு அதலபாதாளத்தில் செல்லும். ஈற்றில் இலங்கைத் தேசத்தில் அழிவுப் பாதையில் இட்டுச் செல்ல வித்திட்ட பழியை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் சுமக்க வேண்டி வரும்.

எனவேதான் இந்த அபாயகரமான நிலையிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கான வழிவகைகள் குறித்து இலங்கை முஸ்லிம் பிரஜைகள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். நமது இளைஞர்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனைகள் எந்த வழிகளில் ஊடுருவுகின்றன என்பது கண்டறியப்பட வேண்டும்.

இலங்கையில் இயங்கும் இஸ்லாமிய இயக்கங்கள், அரபுக் கல்லூரிகள், இஸ்லாத்தைப் போதிக்கும் நிறுவனங்கள், இஸ்லாமியப் பிரசாரகர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், சிவில் தலைவர்கள் என சகலரும் தம்மைச் சூழவுள்ளவர்களின் நிலைப்பாடுகள், சிந்தனைகள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்துக் கண்காணிக்க வேண்டும்.

இல்லாதபட்சத்தில் நமது சமூகத்திலுள்ள ஒரு சிலரது சிந்தனைகளும் செயற்பாடுகளும் ஒட்டுமொத்த சமூகத்தையுமே படுகுழியில் தள்ளவே வழிவகுக்கும். இதுவே நாம் சுதாகரித்துக் கொள்வதற்கான சிறந்த தருணமாகும். இந்தக் காலத்தையும் நாம் கோட்டைவிடுவோமானால் எதிர்காலத்தில் நாம் சிந்திப்பதற்குக் கூட கால அவகாசமிருக்காது. அதன்பிறகு கைசேதப்படுவதால் எதுவும் நல்லது நடந்துவிடப்போவதில்லை.

Leave a Reply