செரண்டிப் கழகத்தை வீழ்த்திய இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழகம்

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பிரிவு l கால்பந்து அணிகளுக்கு இடையிலான இந்தப் பருவகாலத்திற்கான இறுதிப் போட்டி நேற்று சுகததாஸ அரங்கில் இடம்பெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் மாவனெல்லை செரண்டிப் கால்பந்துக் கழகத்தை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழகம் பிரிவு l தொடரின் சம்பியன்களாகத் தெரிவாகியுள்ளனர்.

ஏற்கனவே இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் வெற்றி பெற்றதன் மூலம் இரு அணிகளும் டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டு முதல் நிமிடத்திலேயே பொலிஸ் அணிக்கு பெனால்டிக்கான வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பெற்ற சதுர குனரத்ன இலகுவாக பந்தை கோலாக்கி, ஆரம்பத்திலேயே அணியை முன்னிலைப்படுத்தினார்.

தொடர்ந்து 18 ஆவது நிமிடத்தில் பொலிஸ் அணிக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்தை அவ்வணி வீரர் ரியாஸ் அஹமட் ஹெடர் மூலம் கம்பங்களுக்குள் செலுத்தி இரண்டாவது கோலைப் பதிவு செய்தார்.

ஆட்டத்தின் 50 நிமிடங்கள் கடந்த நிலையில் இவான் பொலிஸ் அணியின் பெனால்டி எல்லையில் முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட, அவ்வணிக்கு பெனால்டிக்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை இவான்ஸ் கோலாக்கி, அணிக்கான முதல் கோலைப் பதிவு செய்தார்.

பின்னர் சிறப்பாக ஆடிய மாவனல்லை வீரர்கள் இரண்டாவது கோலுக்கான முயற்சிகளை சிறந்த முறையில் மேற்கொண்ட போதும், அவர்கள் தமக்கான வாயப்புக்களை சிறந்த முறையிவ் நிறைவு செய்யவில்லை.

எனவே ஆட்டத்தின் நிறைவில், பொலிஸ் கழகம் முதல் பாதியில் பெற்ற இரண்டு கோல்களுடன் 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.