மாவனல்லை பிரதேச சபை: பதவியை இழந்த சந்தன, புதிய தலைவராக கே.ஜீ. பியதிஸ்ஸ

மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் எச்.பி. சந்தன குமார ஜயவந்தன 2022 ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தை உரிய முறையில் சமர்பிக்கத்த தவறியதால் பிரதேச சபையின் தலைவர் பதவியில் இருந்து 2021 டிசம்பர் 31 ஆம் திகதி தாமாகவே பதவி விலகியதாக சபரகமுவ மாகாண சபையின் ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ 2022 ஜனவரி 15 ஆம் திகதி வெளியிட்டுள்ள 2262/49 என்ற இலக்க வர்த்தமாணி அறிவித்தல் மூலம் அறிவிப்பு செய்துள்ளார்.

ஆளநர் என்ற முறையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள 1987 ஆம் ஆண்டின் பிரதேச சபைகள் சட்டத்தின் 16 ஆம் இலக்க மற்றும் 2012 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உள்ளுராட்சி சபைகள் சட்டம், 1987 ஆம் ஆண்டின் 169 ஆம் பிரிவு ஆகியவற்றிற்கு அமைவாக ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் இவ்வாறு வர்த்தமாணி அறிவித்தல் மூலமான பதவி நீக்கத்தை செய்துள்ளார்.

2021 டிசம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற பிரதேச சபையின் கூட்டத்தில் 2022 ஆம் அண்டிற்கான வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்படாமல் திருத்தங்களுடன் நிநைவேறியதாக பிரதேச சபையின் தலைவர் ஜயவந்தன அறிவித்திருந்தார். ஆனாலும் அன்றை தினம் சபை உறுப்பினர்கள் பலரும் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்ட முறை ஒழுங்கீனமானது என்று ஆட்சேபித்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நடைபெற்ற பிரதேச சபையின் கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. உப தலைவர் கே.ஜீ. பியதிஸ்ஸ மற்றும் அவருடன் இணைந்ததாக பொதுஜன பெரமுண மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்சி உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட முறையை ஆட்சேபித்தனர். உப தலைவர் தலைமை ஆசனத்தில் அமர்ந்தவாறு தலைவாருக்கு ஆசனத்தில் அமர விடாது வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவித்தார். பின்னர் ஏற்பட்ட குழப்ப நிலையை சமாளிப்பதற்காக பிரதேச சபையின் தலைவர் சந்தன குமார ஜயவந்தன பக்கத்து ஆசனத்தில் அமர்ந்தவாறு சபை அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதக அறிவித்துவிட்டு வெளியே சென்றார்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்தே ஆளுநரின் இந்த வர்த்தமாணி அறிவித்தல் மூலமாக மாவனல்லை பிரதேச சபையின் தலைவரின் பதவி நீக்க அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

கடந்த மூன்று வருடங்களாக இந்த பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த ஐ.தே.க. தலைமையிலான கூட்டணிக்கு ஸ்ரீ.ல.சு. கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவை வழங்கி வந்ததால் வரவு செலவுத் திட்டங்கள் வாக்கெடுப்பு இன்றியே நிறைவேற்றப்பட்டு வந்ததாயினும் பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றமான சூழ்நிலையில் 2022 இற்கான வரவு செலவுத் திட்டத்தை தற்போதைய ஆளும் கட்சியான பொது ஜனபெரமுண மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்சி உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்க நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாவனல்லை பிரதேச சபை 40 உறுப்பினர்களைக் கொண்டதாகும்.

எம்.எஸ்.அமீர் ஹசைன்

Comments are closed.