சபை அமர்வின் அறிக்கைகள் தமிழ் மொழியிலும் வழங்க பிரேரனை நிறைவேற்றம்

.

மாவனல்லை பிரதேச சபை அமர்வின் அறிக்கைகள் தமிழ் மொழியிலும் வழங்க பிரேரனை நிறைவேற்றம். தமிழ் பேசும் முஸ்லிம் உறுப்பினர்கள் எதிர்ப்பு

தற்காலிக தலைவராக பதவியில் இருக்கின்ற கே.ஜி. பியதிஸ்ஸவால் அழைக்கப்பட்டு கூட்டப்பட்ட மாவனல்லை பிரதேச சபையின் விஷேட கூட்டம் ஒன்று நேற்று 25 ஆம் திகதி நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது பிரதேச சபையின் கூட்ட அறிக்கைகள் சிங்கள மொழி மூலம் மாத்திரமே வழங்கபப்ட்டு வருகின்றது. ஆனாலும் தமிழ் மொழி பேசும் 10 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

அவர்களில் அனேகமானவர்களுக்கு சிங்கள மொழி பரிச்சயம் இல்லாததால் கூட்ட அறிக்கைகள் தமிழ் மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்று ஹெம்மாதகம பிரதேசத்தை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர் எம். ஆர். ஏம். அஸாம் பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.

இந்த பிரேரணை தொடர்பாக எதிரணி உறுப்பினர் மாற்று கருத்துக்களை முன்வைத்தனர். குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லிம் உறுப்பினர்கள் சிலர் அவ்வாறான மொழி பெயர்ப்பு அவசியம் இல்லை என்றும் எல்லா உறுப்பினர்களாலும் சிங்களம் பேசவும் புரிந்துகொள்ளவும் முடியும் என்றும் இந்த கூட்டம் சட்டவிரோதமானது என்றும் இதற்கு ஆதரவு வழங்க முடியாதென்றும் தெரிவித்தனர் அதனால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது. முன்னால் தலைவர் சந்தன குமார ஜயவந்தன இந்த பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த பிரேரணை மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அறிக்கைகள் தமிழ் மொழி மூலம் வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணை 03 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. இந்த பிரேரணைக்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் கிடைத்தன.

அதே நேரம் நேற்றைய கூட்டத்தை முன்னால் தலைவர் சந்தன குமார ஜயவந்தன சட்டவிரோதமான கூட்டம் என்று ஆட்சேபித்தமையும் குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ். அமீர் ஹ_சைன்

Comments are closed.